Uyir Vidum Varai--EPI 4

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
939
-1,711
93
அத்தியாயம் 4

(Intracytoplasmic Sperm Injection – ICSI)

முதிர்ந்த சூல்முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து நேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய்து, பின்னர் முளையமானது கருப்பையினுள் வைக்கப்படும்.


‘பரிசு வாங்கிக்கலன்னு, இவ்வளவு கோபம் ஆகாதுடா கப்பூரு. நாலு நாளா என்னை இப்படி அலைய விடறியே! நல்லா இருடா. நல்லா வெள்ளையா பதினாலு பிள்ளைங்க பெத்து அமோகமா இருடா. பொண்டாட்டி இல்லையே, பிள்ளை எப்படி பெத்துக்குவ? அது உன் பிரச்சனை. போடா!’ கடுப்பில் திட்டுவதாக நினைத்துக் கொண்டு அவனை ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தாள் சித்ரா.

தீபாவுக்கு நீச்சல் குளத்தில் குளித்து, ஐஸ்க்ரீம் சாப்பிட்ட தினத்திலிருந்து சளி பிடித்து வாட்டியது. ராத்திரி எல்லாம் மூச்சு விட சிரமப்பட்ட பிள்ளை, சித்ராவையும் வாட்டி எடுத்து விட்டாள். “அம்மா வேணும்... அம்மா வேணும்” என அவளையே ஒட்டிக் கொண்டு அழுதாள்.

பகலில் பத்மாவிடம் மருந்து சாப்பிட்டு சமத்தாக தூங்குபவள், சித்ராவை கண்டவுடன் மட்டும் ஆர்ப்பாட்டமாக அழுது, இடுப்பை விட்டு இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தாள். இரவெல்லாம் சித்ராவின் மேல் ஏறிப் படுத்து, அவளுக்கும் சளியை ஒட்டி விட்டிருந்தாள்.

வேலையிடத்தில் பிரகாஷும், வீட்டுல தீபாவும் படுத்திய பாட்டில் சித்ரா நொந்து போயிருந்தாள். மூக்கில் வேறு, நயாகரா விடாமல் ஒழுகியது. மூக்கு, முகம் எல்லாம் சிவந்து, கடுப்பில் கம்யூட்டர் முன்னே உட்கார்ந்திருந்தாள். மெடிக்கல் லீவ் எடுத்து, வீட்டில் இருந்தாலும் விடாமல் போன் அலரும். அதனாலேயே வேலைக்கு வந்திருந்தாள்.

“சித்து, நீ உறியுற உறில... உன் மூக்கு மட்டும் இல்ல, எங்க மூக்கும் கழண்டுக்கும் போல இருக்கு. இந்தா பிடி. இந்த டேப்லட்ட போடு. கொஞ்சம் மயக்கமா இருக்கும், ஆனா சட்டுன்னு சளி ஓடி போயிரும்” என பக்கத்து சீட்டு பானு டேப்லட்டை நீட்டினாள்.

நன்றி சொல்லி வாங்கிப் போட்டவள், கொஞ்ச நேரம் மேசை மேல் தலையைக் கவிழ்த்தாள். ஐந்து நிமிடம் கூட இருக்காது, போன் அலறியது.

‘கப்பூரூ... நான் ரெஸ்ட் எடுத்தா உனக்கு மூக்கு வேர்த்துருமேடா. எனக்கு பிடிச்ச சளி கூட சீக்கிரம் நல்லா போயிரும், ஜென்ம சனி நீ மட்டும் விட்டு போகமாட்டடா’ முனங்கியவாறே போனை எடுத்தாள்.

“ஹலோ பிரகாஷ்”

“சிமி... குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?”

“நல்லா தான் இருக்கு. சொல்லுங்க, என்ன விஷயம்?”

“என்னோட கிரேடிட் கார்ட், வந்துருச்சா சிமி?”

“யெஸ், இப்பத் தான் வந்தது பிரகாஷ்”

“கார்ட வச்சி சாமி கும்புடுறியா சிமி? அந்த கார்ட் எனக்கு எவ்வளவு இம்போர்டண்ட்னு தெரியும் தானே? இந்நேரம் நீ இங்க கிளம்பி வந்துருக்கனும். பேவகூப்” குரலில் கண்டனம்.

‘பேவகூப்பா? என்னைய திட்டறானா? வரேன்டா ப்ரௌனி! வந்து தொலைக்கிறேன். என் காதுல சாமி ஆடாதே’ லேப்டாப்பில் பேவகூப் ட்ரான்ஸ்லேசன் தட்டிப் பார்த்தாள். முட்டாள் என வந்தது. ஏற்கனவே சிவந்திருந்த மூக்கு, மேலும் சிவந்தது.

‘யாருடா முட்டாளு? கொன்றுவேன், பாத்துக்கோ... இந்த பேவகூப் கோவகூப்பானேன், தாங்கமாட்டே!’

“என்ன சவுண்ட காணோம்? மனசுலயே திட்டுறியா?”

“அப்படிலாம் இல்ல பிரகாஷ். லேப்டாப்ப ஆப் பண்ணேன். இப்போ எங்க இருக்கீங்க?”

ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு இடத்தில் இருப்பான். நேற்று மட்டும் பைவ் ஸ்டார் ஹோட்டல், வீடு, பீச் ரிசார்ட் என மூன்று இடங்களுக்கு அவளை அலைய விட்டிருந்தான்.

“இப்போ ஆபிஸ்ல தான் இருக்கேன். பத்து நிமிஷத்துல ட்ரைவர் அங்க இருப்பாரு. கம் பாஸ்ட்”

“இல்ல நான் டாக்சியில வரேன்” என சொல்வதற்குள் போனை வைத்திருந்தான்.

‘அடங்காப்பிடாரன்!’ எனத் திட்டிக் கொண்டே புறப்பட்டாள்.

“எங்க சித்து? பிரகாஷ் சாரைப் பார்க்கவா? என்ஜாய்!” எனக் கடுப்பேற்றி அனுப்பி வைத்தாள் பானு.

“வாயில வண்ணம் வண்ணமா வந்துரும். வேலைய பாரு” என திட்டியவாறே வெளியேறினாள் அவள்.

கீழ் தளத்தை பணபட்டுவாடா நடக்கும் வங்கியாகவும், மேல் தளங்களில் பேக் எண்ட் ப்ராசஸ், போன் பேங்கிங் கஸ்டமர் செர்விஸ், சேல்ஸ், மற்றும் சித்ரா பார்க்கும் கோல்ட் கிளையண்ட் சர்வீசாகவும் நிறுவியிருந்தார்கள்.

கீழே வந்தவள், ஜோனுக்கு ‘மீட்டிங் பிரகாஷ்’ என ஒரு வாட்சப் தட்டிவிட்டு விட்டு காத்திருந்த ஹோண்டா பைலட் காரின், பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். ஏசி குளிருக்கு தூக்கம் சொக்கியது. முயன்று கண்களை சிமிட்டி தூக்கத்தை விரட்டினாள். கண்களை தேய்த்து விட்டுக் கொண்டாள், காலை ஆட்டி, கையை தூக்கி மினி டான்ஸ் ஆடி தூக்கத்தை விரட்ட முயன்றாள். ட்ரைவர் ஒரு மாதிரி பார்க்கவும் தான், அமைதியாக அமர்ந்தாள்.

‘மயக்கம் வரும்னு சொன்னா, இப்படி மப்பும் மந்தாரமுமா இருக்கும்னு சொல்லலியே’ என மனதில் புலம்பியபடியே அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் நுழைந்தாள்.

ரிசப்ஷனுக்கு சென்று ஐடி கார்டை காட்டி, பிரகாஷை சந்திக்க வந்திருப்பதாகக் கூறினாள். ரிஷப்சனிஸ்ட் அவனின் காரியதரிசிக்கு போன் போடும் நேரத்தில், அந்தக் கட்டிடத்தைப் பார்வையிட்டாள் சித்ரா. இன்று தான் பிரகாஷின் அலுவலகத்துக்கு, அவள் முதல் முறையாக வருகிறாள். அவன் அலுவலகம், தேவலோகம் என ஆர்த்தி கூற கேள்விப் பட்டிருக்கிறாள். நேரில் பார்த்ததும் உண்மை தான் என இவளும் ஒப்புக் கொண்டாள்.

‘வைன் அண்ட் ஆர்ட்ஸ்’ பிரகாஷின் நிறுவனம். நல்ல தரமான வைன் உற்பத்தி செய்பவர்களை தேடி கண்டுபிடித்து, அதில் இன்வெஸ்ட் செய்து தன் சொந்த பிரண்டாக ‘டிவைன்’ என வெளியிட்டு, கொள்ளை லாபம் காண்கிறான். அதே போல் பல வகையான சிற்பங்கள், ஓவியங்கள், கலைப் பொருட்களை இங்கிருந்து வாங்கி, வெளிநாட்டுக்கு விற்கிறான்.

‘கலா ரசிகன் தான்டா நீ! அழகு எங்கிருந்தாலும் ஆராதிக்கிற. செய்யுற தொழில் கூட ரசனையான தொழில். கலையும் போதையும் கலந்த காவியம்டா நீ. ஹும்ம்... ரசனை இருந்து என்ன பண்ண? திமிரும் கோபமும் கூடவே இருக்கே’

அங்கங்கே மாட்டியிருந்த அழகிய ஓவியங்களை, ரசித்தபடி நின்றிருந்தவளை, ஐந்தாவது மாடிக்கு செல்லுமாறு கூறினாள் ரிசப்ஷனிஸ்ட்.

அவள் காட்டிய வழியாக சென்று லிப்டினுள் நுழைந்தாள் சித்ரா. நடை வேறு லேசாகத் தள்ளாடியது. சமாளித்தவாறே பிரகாஷ் கப்பூர் என பெயர் இருந்த அறை கதவைத் தட்டினாள்.

“யெஸ், கம் இன்”

‘துரை கூப்பிட்டுட்டாரு’

“குட் மார்னிங் பிரகாஷ்” என அவள் குரலில் நிமிர்ந்தவன், புருவத்தைச் சுருக்கினான்.

“ஆர் யூ ஆல்ரைட் சிமி?”

“யா ஐம் ஃபைன்”

“உட்காரு”

அவன் அமர்ந்திருந்த பெரிய டேபிளின் எதிர் புறமிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“கிவ் மீ பைவ் மினிட்ஸ். இந்த ஈமெயில் அனுப்பிருறேன். அப்புறம் இன்சுரன்ஸ் பற்றி கொஞ்சம் பேசனும்” வாய் பேசினாலும் கண்கள் லேப்டாப்பில் இருந்தன.

இவள் அந்த கேப்பில், அவன் அறையை ஒரு நோட்டமிட்டாள். அவள் வீடே இந்த அறை அளவுக்கு தான் இருக்கும். அவன் டேபிளுக்கு வலது புறத்தில் ஒரு நீள சோபாவும், சின்ன டேபிளும் இருந்தது. சோபாவின் பின்னால் வைன் செல்லார் எனப்படும், வைன் பாட்டில்கள் அடுக்கி வைக்கும் குளிர் சாதன பெட்டி சுவற்றை அடைத்து நிர்மாணிக்கப் பட்டிருந்தது.

விதவிதமான வைன் பாட்டில்கள், அதனுள்ளே அணிவகுத்து நின்றன. டேபிளின் இடது புறத்தில், சுவர் முழுதும் பல வகையான ஓவியங்கள், பெண்களிலிருந்து புத்தர் வரை அழகுற மாட்டப்பட்டிருந்தன. கண்ணாடி பேழையில் சின்ன சின்ன சிற்பங்கள் கலை நயமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூமின் ஒரு கோடியில் கதவு ஒன்று தென்பட்டது. பாத்ரூமாக இருக்கும் என சரியாக கணித்தாள் சித்ரா. ரூமை சுற்றி ஒரு பார்வை ஓட்டியவள், மீண்டும் வைன் செல்லாரிலேயே பார்வையைப் பதித்தாள்.

“டேஸ்ட் பண்ணி பார்க்குறியா சிமி?”

திடீரெனக் கேட்டக் குரலில் திடுக்கிட்டு, அவனைப் பார்த்தாள்.

‘இந்தப் பக்கி எவ்வளவு நேரமா, நம்மள பார்க்கிறான்னு தெரியலையே’

“அழகா இருக்குன்னு பார்த்தேன். அவ்வளவுதான். குடிச்சு பழக்கமில்ல.”

“குடிச்சா தப்பா சிமி?”

‘இப்ப எதுக்கு இந்தக் கேள்வி? ஏழைங்க அசதிக்கு குடிக்கறாங்க. பணக்காரங்க அனுபவிச்சு குடிக்கிறாங்க. ஆனா குடி, குடிய கெடுக்காம போகாதே! அதுக்கு பணக்காரன்ன தெரியுமா ஏழைய தெரியுமா? கெடுக்கத்தான் தெரியும். வாவ் சித்து, என்ன ஒரு தத்துவம். பின்னிட்டடி’ தன்னையே புகழ்ந்து கொண்டாள். மருந்து வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.

“சொல்லு சிமி”

“குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால், அவனை மறந்து விடலாம், மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால், குடித்து விடலாம்” என வசனத்தில் ஆரம்பித்தவள்,

“மரணம் என்னும் தூது வந்தது, அது ப்ரௌனி என்னும் வடிவில் வந்தது” என பாடியப்படியே மேசைமேல் கவிழ்ந்தாள்.

அவள் வசனம் பேசும்போதே பேய் முழி முழித்த பிரகாஷ், அவள் பாட ஆரம்பிக்கவும் ஆடிப் போனான்.

“ஹே பஹவான்!” என அவன் எழுந்து வருவதற்குள் சன்னமான குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்திருந்தது. சில நாட்களாக தூங்காமல் இருந்தது... உடம்பு முடியாதது... மருந்தின் வீரியம்... அறையின் ஏசி... சிலுசிலுப்பு... என எல்லாம் சேர்ந்து, அவளை ஆழ்ந்த உறக்கத்திற்குத் தள்ளியிருந்தது.

அருகில் வந்தவன்,

“சிமி... சிமி...” என அழைத்தான்.

“விட்றி கட்டச்சி... எனக்கு தூக்கமா வருது. நிலாட்ட போய் படு! விடு தீபா” மெல்லிய முனங்கல்.

சிரிப்புடன், மெல்லத் தோள் தொட்டு அசைத்தான். எந்த ரியாக்‌ஷனும் இல்லை. குனிந்து மேசையில் இருந்து, அவள் தலையைத் தூக்கினான். அவளோ அப்படியே அவன் நெஞ்சில் சரிந்தாள். அவளை, தன் நெஞ்சின் மேலே சிறிது நேரம் வைத்திருந்தான். அவளிடமிருந்து வந்த சிட்ருஸ் பர்ஃயும் வாசத்தை ஆழமாக சுவாசித்தான்.

“ஸ்வீட் கேர்ள்” முணுமுணுத்தவன், அப்படியே குழந்தைப் போல், அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

“யே கித்னி பாரி ஹை (என்ன பாரம்டா)” சிரித்துக் கொண்டவன், மூச்சு வாங்க அவளை சோபாவில் கிடத்தினான்.

நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், லேசாக சூடு தெரிந்தது. ஏசியை அதிகரித்தவன், தனது பெர்சனல் அலமாரியைத் திறந்தான். அதிலிருந்து சின்ன தலையணையையும் , மெல்லிய போர்வையையும் எடுத்தான். சில சமயம், இரவு வரை வேலை செய்யும் போது, இங்கேயே படுத்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும், ஒரு செட் உடை, துண்டு என எல்லாம் இருக்கும்.

அவள் தலைக்கு தலையணையை வைத்தவன், போர்வையை போர்த்தி விட்டான். அவளது காலடியில் அமர்ந்தவன், மெதுவாக ஹீல்சைக் கழற்றி கீழே வைத்தான். காலணியைக் கழற்றிய போது, மெல்லிய ஸ்ஸ்ஸ் எனும் சத்தம் அவளிடம். கால் பாதம் சிவந்து, இறுக்கமான காலணி, அங்கங்கே வெட்டி வைத்திருந்தது. சிவந்திருந்த இடங்களை, மெல்ல தடவிக் கொடுத்தான் பிரகாஷ்.

போனை எடுத்து அவனின் பிஏவை அழைத்து, கால் காயத்துக்கு க்ரீம் வாங்கி வரும்படி பணித்தான். பின் சற்று நேரம் ஒருக்களித்து தூங்கும் சித்ராவையே, பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

பிஏ கதவை தட்டவும், எழுந்து போய் மருந்தை வாங்கி வந்தான். மீண்டும் சிமி என அழைத்தான். எந்த பதிலும் இல்லாமல் போகவும், தைரியமாக கீழே அமர்ந்து, காயம் பட்டிருந்த இடங்களில் மென்மையாக க்ரீமை தடவினான். க்ரீமின் குளிர்ச்சியில் “ஹ்ம்ம்...” என சுகமாக முனங்கினாள் அவள். அப்படியே அவள் கால்களைப் பிடித்து விட்டவன், காலடியிலேயே அமர்ந்திருந்தான்.

ஒரு மணி நேரத்தில், அவளிடம் மெல்லிய அசைவு தெரியவும், வேகமாக எழுந்து தன் இருக்கையில் சென்று, அமர்ந்து கொண்டான் பிரகாஷ்.

மெல்ல கண்களைத் திறந்தவள், பட்டென எழுந்து அமர்ந்தாள். தலை சுற்றவும், கண்களை மூடி மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளது செயல்களைப் பார்த்து பதறிய பிரகாஷ்,

“சிமி, ஆர் யூ ஆல்ரைட்?” என அருகில் வந்தான்.

கண்ணை மூடியபடியே,

“கொஞ்சம் தலை சுத்திங். அவ்வளவுதான். ஒரு கப் காபி கிடைக்குமா பிரகாஷ்?”

“அப்படியே இரு. எழாதே, காபி சொல்லுறேன்”

காபி கொண்டு வந்த பிஏ படுத்திருந்த சித்ராவை, வியப்பாகப் பார்த்து விட்டு வெளியேறினாள்.

“மெல்ல எழுந்து, உட்காரு சிமி.” அமர்ந்தவளிடம் காபிக் கோப்பையை நீட்டினான். வாங்கி மேசை மேல் வைத்தவள், பேக்கில் இருந்து டிஸ்யூவை எடுத்து மூக்கை உறிஞ்சினாள். பின் அவனைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவள்,

“சாரி பிரகாஷ். டேப்லட் போட்டது, கண்ணை கட்டிருச்சு.” என்றவாறே காபியைக் குடித்தாள். அவனுக்கும் கலக்கி கப்பை நீட்டினாள்.

புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன், “உடம்பு முடியலனா. சொல்ல வேண்டியது தானே, நானே வந்து கார்டை வாங்கியிருப்பேன்ல” எனக் கடிந்துக் கொண்டான்.

கிரெடிட் கார்டை அவனிடம் நீட்டியவள், “என்னோட வேலைய நான் தான் செய்யனும்” எனக் கடிகாரத்தைப் பார்த்தவள்,

“மணி ஆகுது, நான் கிளம்பனும். இன்னொரு கிளையண்டை மீட் பண்ணனும்” எனக் காலணியை அணிந்தவள், பட்டென அவனை நிமிர்ந்து பார்த்து,

“நான் எப்படி, இங்க வந்து படுத்தேன்? ஹீல்ஸ யாரு கலட்டினா?” கோபம் ஏறி இருந்தது குரலில்.

“நீ தான் தூக்கம் வருது, படுத்துக்கவான்னு கேட்ட... நான், ஓகே கூட சொல்லல. நீயே வந்து ஷுவ கழட்டி வச்சுட்டுப் படுத்துட்ட. கூப்பிடக் கூப்பிட எழல. இது தான் நீ வேலை பாக்கற லட்சணமா? ஜோன் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணவா?” என முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டான்.

‘அப்படி எதுவும் ஞாபகம் இல்லையே. ஹும்ம், நான் தான் வந்து படுத்துருக்கனும். இம்மாம் பெரிய என்னை, இவனா தூக்கியிருக்க போறான். அப்படி தூக்கி இருந்தா, கை இன்னேரம் ஒடஞ்சிருக்கனுமே!’

“சாரி பிரகாஷ். ரியலி சாரி. இனிமே இப்படி நடக்காது.” விறைப்பாகச் சொன்னவள், மெல்ல எழுந்தாள்.

“இதுக்கு மேல, யாரையும் மீட் பண்ணப் போக வேணாம். ட்ரைவர் வீட்டுல விடுவாரு. கோ டேக் ரெஸ்ட்”

“இல்ல, இல்ல... போகனும். முக்கியமான டாக்குமெண்ட்ல சைன் வாங்கனும்”

“யாரு... கிளையண்ட்டா?”

“அதெல்லாம் காண்பிடன்சியல்”

“சீரி, கால் ஜான்”

‘சீரியால என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது’

“இருங்க... கால் பண்ணாதீங்க. சொல்லுறேன். மிஸ்டர் ரோனியப் பார்க்கனும்”

“ரோனி... கார்மெண்ட் ஓனரா?”

“ஆமா! அவர்தான்”

“நான், ரோனிகிட்டச் சொல்லிக்கிறேன். இப்ப கிளம்பு வீட்டுக்கு”

“இங்கப் பாருங்க பிரகாஷ், உங்க லிமிட்ட தாண்டிப் போறீங்க. உங்களுக்கு மட்டும் இல்ல, இன்னும் ஐந்து பேருக்கும், நான் தான் அக்கவுண்ட் மேனேஜர். சோ என் வேலையில, நீங்க குறிக்கிடாதீங்க, ப்ளீஸ். ஐ நீட் டூ கோ.” எனக் கூறியப்படி தடுமாறி நடந்தாள்.

“நில்லு சிமி, வெய்ட் கரோ. நானும் வரேன். எனக்கும் ரோனிகிட்ட பேச ஒரு பிஸினஸ் டீல் இருக்கு...”

நம்பாதப் பார்வைப் பார்த்தவளை, “போன் பண்ணி தரேன், ரோனி கிட்டப் பேசறியா?” எனக் கேட்டான்.

“இல்ல பரவாயில்ல...”

“வா, போகலாம்” என அவள் நடைக்கு ஈடு கொடுத்து, மெதுவாக நடந்தான். ட்ரைவர் வேணாம் என சொல்லி தானே வண்டியை எடுத்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரோனியின் ஆபிசில் இருந்தார்கள்.

அலுவலை முடித்துக் கொண்டு திரும்பும்போது, சித்ராவின் போன் ஒலி எழுப்பியது. பத்மாவின் நம்பரைப் பார்த்து, சட்டென அட்டன்ட் செய்தவள்,

“சொல்லுங்க பத்மாக்கா” என்றாள்.

“சித்து, தீபாவுக்கு திடீருன்னு உடம்பு ரொம்ப காயுது. குளிப்பாட்டி பார்த்துட்டேன், மருந்தும் குடுத்துப் பார்த்துட்டேன். ஒன்னும் கேக்கல. பிள்ளை வெடவெடன்னு நடுங்குறா. சிவாக்கு போன் பண்ணேன், நாட் ரிச்சபிள் வருது. எனக்கு பயமா இருக்கு சித்து” என அழ ஆரம்பித்துவிட்டார்.

“அழாதீங்க பத்மாக்கா. நெத்தில ஈர டவல வச்சிட்டே இருங்க. நான் இப்போ ஆட்டோ பிடிச்சுட்டு வரேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருறேன்.” பத்மாவின் கணவர் பாலன் வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். இன்னும் ஒரு மாதம் ஆகும் திரும்பி வர. இல்லாவிட்டால் அவர் ஓடி வந்திருப்பார். இருவருக்கும் தீபாவின் மேல் அவ்வளவு பிரியம்.

போனை அடைத்த சித்ரா, பதட்டமாக நடந்தாள். அவள் கைப்பற்றி நிறுத்திய பிரகாஷ்,

“என்னாச்சு? உடம்பு முடியல தானே, மெதுவா நட”

“தீபாவுக்கு காய்ச்சல் அடிக்குதாம். நான் வீட்டுக்குப் போகனும். பை பிரகாஷ்” என்றவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அவள் கையை இறுகப் பற்றி இருந்தான் அவன்.

“வா, போகலாம்” என கைப்பிடித்து, தன் காருக்கு இழுத்துச் சென்றான். பதட்டத்தில் அவன் இழுத்த இழுப்புக்குப் போனாள் சித்ரா. பத்மாவின் வீட்டை அடையும் வரை காரில் பேரமைதி. அவள் பாதை சொல்லாமலே பத்மாவின் வீட்டு முன்னால், அவன் கார் சென்று நின்றது. அதைக் கூட கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

இவள் இறங்கி முன்னே போக, அவனும் கூடவே வந்தான். அவளுடனே வீட்டினுள் நுழைந்தான் பிரகாஷ். கட்டிலில் படுத்திருந்தக் குழந்தை, இவளைக் கண்டதும் “அம்மா” எனக் கதறினாள்.

ஓடிச் சென்று, மகளை அணைத்துக் கொண்டவளுக்கும் கண்ணீர்.

“தீபாக்கு... காச்ச அடிக்குது. கை நடுங்குது. பயமா இருக்கும்மா” என அழுதாள் மகள். பத்மாவும் தீபாவைப் பார்த்து, சின்ன குழந்தைப் போல் அழுதார். மூவரையும் மாறி மாறி பார்த்த பிரகாஷ், தீபாவை சித்ராவின் அணைப்பில் இருந்து பிரித்து, தூக்கிக் கொண்டான்.

“ஹலோ பிகாஷ்... எனக்கு காச்ச” என அவனிடமும் புகார் பட்டியலை ஆரம்பித்த தீபாவை இறுக அணைத்தவன்,

“தும் டீக் ஹோ ஜாவோகே பச்சி (நல்லா போயிரும்டா குழந்த)” எனச் சமாதானப்படுத்தினான்.

“யாரு சித்து இது?” எனக் கேட்டார் பத்மா.

“என்னோட கிளையண்ட் கா. நீங்க போன் போட்டப்ப இவர் கூட தான் இருந்தேன்.”

பிள்ளையிடம் பிரகாஷின் நெருக்கம் பத்மாவின் முகத்தில் அதிருப்தியை வரவழைத்தது.

“கிளம்பலாம் சிமி” என அவனது அழைப்பு, மேலும் கடுப்பைக் கிளப்பியது பத்மாவுக்கு.

“கிளம்பு சித்து. எந்த ஹாஸ்பிட்டல்ன்னு மேசேஜ் பண்ணு. உன்னோட உட்பி சிவா, இப்பத்தான் ரிடர்ன் கால் பண்ணான். அவனோட நான் ஹாஸ்பிட்டல் வரேன்.”

உட்பி எனும் வார்த்தை, பிரகாஷின் கண்களில் கனலைக் கொண்டு வந்தது. சித்ராவை எரிக்கும் பார்வைப் பார்த்தவன்,

“ஜல்தி” என ஒற்றைச் சொல்லுடன், தீபாவைத் தூக்கிக் கொண்டு காருக்கு சென்று விட்டான். பின் இருக்கையில் தீபாவைப் படுக்க வைத்தவன், மகளுடன் சித்ரா அமர்ந்ததும், காரைப் பறக்க விட்டான்.

தரமான அந்த தனியார் மருத்துவமனை எமெர்ஜென்சி வாயிலில், காரை நிறுத்தியவன், சித்ரா இறங்கியதும், தீபாவைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான்.

ரிசப்ஷனை நெருங்கும் வேளையில், பக்கத்தில் நடந்து வந்த சித்ரா அவன் இன்னொரு கையை இறுகப் பற்றிக் கொண்,டு மயங்கி சரிந்தாள். ஒரு கையில் தீபாவையும், மறு கையில் சித்ராவையும் தாங்கியவன்,

“கோயீ ஹை (யாராச்சும் இருக்கீங்களா)” என ஹை டெசிபலில் இறைந்து, “முஜே மதத் கரோ (எனக்கு உதவி பண்ணுங்க)” என அலறினான்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Uyir Vidum Varai--EPI 4
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
140
-22
43
பத்மா வேணுமின்னேத் தானே சிவாவை உட்பின்னு போட்டுக் கொடுத்தாள். அப்ப ப்ரவுனியை பத்மாவுக்கும் பிடிக்கலைப் போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797