Sorkam Madhuvile--EPI 13

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
940
-1,707
93
அத்தியாயம் 13

நீதானே என் கண்ணின் மணி!



சில வருடங்களுக்குப் பிறகு..


“எங்கக்கா மகளே இந்து!!!”

“என்னவாம்? ஆபிஸ் நேரத்துல வந்து உக்காந்துகிட்டு இந்து, சந்துன்னு டார்ச்சர் மாமா நீங்க”

“டார்ச்சர்?? மீ?” எனப் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட ராஜாவை முறைத்தாள் மதுஷாலினி.

“நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்குத் தெரிஞ்சுருச்சு! அதான் வடை சட்டில விழுந்த தண்ணி மாதிரி சடாபுடான்னு தெறிக்கற”

“ம்ப்ச்!!” எனச் சலித்துக் கொண்டவளை ஆதுரமாகப் பார்த்தான் ராஜா.

“உங்க அம்மாயியும், அப்பாவும் ஆசைப் படறதுல என்னடாம்மா தப்பு? காலாகாலத்துல அதது நடக்க வேண்டாமா? இத்தனை வருஷமா கேட்டுட்டே இருக்காங்க! நீ தள்ளிப் போட்டுட்டே வந்தா என்ன அர்த்தம்? அம்மாயிக்கு முன்ன மாதிரி இல்ல உடம்பு! அவங்களுக்கு ஏதாச்சும் ஆகறதுக்கு முன்ன தன் செல்லப் பேத்தியோட கல்யாணத்த பார்க்கனும்னு ஆசை இருக்காதா ஷாலும்மா?”

கண்கள் கலங்கியது இவளுக்கு. மாமனிடம் அதைக் காட்டாமல் இருக்க எழுந்து கொண்டவள்,

“காபி வாங்கிட்டு வரேன் மாம்ஸ்” என நடந்து விட்டாள்.

நடந்து போகும் தனது அக்கா மகளையே ஒரு வித கலக்கத்துடன் பார்த்திருந்தான் ராஜா. இருபத்து ஆறு வயதாகி இருந்தது அவளுக்கு. ஐ.டியில் டிகிரி முடித்து, வேலைக்குப் போன மறு வருடமே திருமணப் பேச்சை எடுத்திருந்தார் மனோகர். சில காலமாவது வேலைப் பார்த்து சுதந்திரமாய் சம்பாதிக்க விடுங்கள் என அதற்கு முட்டுக் கட்டைப் போட்டிருந்தாள் பெண். திரும்பவும் மறு வருடம் சாரதா திருமணப் பேச்சைத் துவக்க, பகுதி நேரமாய் மாஸ்டர்ஸ் படித்து முடித்து விடுகிறேன் எனச் சொல்லித் தள்ளிப் போட்டாள்.

இப்பொழுது மாஸ்டர்ஸ் படித்து முடித்திருந்தாள். மறுபடி திருமணப் பேச்சை எடுக்க, பிடி கொடுக்காமல் மௌனம் சாதித்தப் பெண்ணை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவித்தனர் பாட்டியும் தகப்பனும். அவர்களுக்காகத்தான் ஷாலுவிடம் பேச வந்திருந்தான் ராஜா.

எழுந்து போகும் முன் ஷாலுவின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரையும், சிவந்திருந்த முகத்தையும் பார்த்து விட்டிருந்த ராஜாவுக்கு யோசனையாகிப் போனது.

மதுஷாலினி ஜாவா எனப்படும் ப்ராக்ராமிங்கில் நல்ல தேர்ச்சிப் பெற்றிருந்தாள். ஆரம்பத்தில் ப்ராகிராமராக வேலைக்குச் சேர்ந்தவள், இப்பொழுது சீனியர் ப்ராகிராமராக வேலைப் பார்த்தாள். இன்னும் தகப்பனோடுதான் வசிக்கிறாள். சொந்தமாகக் கார் வைத்திருக்கிறாள். வேலைக்குப் போவது வருவது எல்லாம் காரில்தான். கலகலப்பாகப் பேசுவாள், பழகுவாள், எல்லாம் செய்வாள். ஆனால் திருமணம் எனப் பேச்செடுத்தால் மட்டும் ஆமை போல ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வாள். மனோகருக்கு இவளை நினைத்துப் பெருங்கவலையாக இருந்தது.

பெண் பிள்ளை. அதுவும் தாயில்லா பெண்! விரைவில் அவளுக்கொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விட்டு அக்கடாவென இருக்கலாம் என எண்ணினால், அவள் வழிக்கே வர மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்கிறாள். இப்பொழுதெல்லாம் அடிக்கடி மகளைத் திட்டி விடுகிறார். அவர் என்ன ஏசினாலும், அமைதியாக ஏற்றுக் கொண்டு,

“சாப்பிட வாங்கப்பா” எனக் கூப்பிடும் போது நெஞ்சம் கலங்கி விடும் இவருக்கு.

“ஷாலு குட்டி! ஏன்டாம்மா அப்பாவ இந்தப் பாடு படுத்தற? உன் வயசுல எல்லாரும் கல்யாணம், குடும்பம் குட்டின்னு செட்டில் ஆகறப்போ, நீ மட்டும் ஏன்மா பிடிவாதம் பிடிக்கற?”

“ப்பா! இருபத்தாறுலாம் ஒரு வயசாப்பா? பொண்ணுங்கலாம் இப்போ முப்பது வயசுக்கு மேலத்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கறேன்பா! ஏன் என்னை விரட்டி விடறதுலயே குறியா இருக்கீங்க? இந்த ஷாலு உங்களுக்குப் பாரமா இருக்கேனாப்பா?” எனப் பாவமாய் மகள் கேட்கும் போது, இவருக்குப் பேச்சே வராது.

பாரமா? மகள் மீது உயிரையே அல்லவா வைத்திருக்கிறார் மனோகர். வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து அவளைத் தன்னுடனே வைத்துக் கொள்ளும் எண்ணம் அல்லவா அவள் அம்மாவுக்கு. ஆனால், இதெல்லாம் சாத்தியமா இந்த 2012ம் ஆண்டில்! திருமணமாகி வெளிநாட்டுக்குப் போய் விடுகிறார்கள் பலர். சிலர் கோலாலம்பூர் போன்ற இடங்களில் செட்டில் ஆகி விடுகிறார்கள். எங்கு வசித்தாலும் மகள் குடியும் குடித்தனமுமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும் என இவர் வேண்டாத தெய்வமில்லை. இவரது நண்பர்கள் அந்த வருடம் உலகம் அழிந்து விடும் எனப் புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்க, மகளுக்குக் கல்யாணம் ஆகாமலே உலகம் அழிந்து விடுமோ எனும் பீதி வேறு அவரை வாட்டியது. ராஜாவிடம் மாமா எனும் உறவையும் மீறி நட்பாய் மகள் பழகுவதால், அவனிடம் தூது போகச் சொல்லிக் கேட்டிருந்தார் மனோகர்.

மதுஷாலினியின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு காபி ஷாப்புக்கு வந்திருந்தார்கள் இருவரும். எப்படி அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவது எனும் சிந்தனையுடன் அமர்ந்திருந்தவன் எதிரே காபி மற்றும் டோனட்டுடன் வந்து அமர்ந்தாள் மதுஷாலினி.

“சாப்பிடுங்க மாமா”

எதுவும் பேசாமல் எடுத்துக் கொண்டான் இவன். அவளும் அமைதியாக காபியைப் பருகினாள்.

“ஏன் ஷாலு! யாரையாச்சும் லவ் பண்ணுறியா நீ?” எனத் திடுதிப்பெனக் கேட்டான் ராஜா.

அவளிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. காபியை உறிஞ்சும் வேலையை மட்டும் பார்த்தாள் இவள்.

“உன் மௌனத்த யெஸ்னு எடுத்துக்கவா? இல்ல நோன்னு எடுத்துக்கவா?”

“இப்ப என்ன மாம்ஸ் வேணும் உங்களுக்கு? கல்யாணம் பண்ணிக்கனும்! அதானே!! இன்னும் ரெண்டு வருஷம் டைம் குடுங்க! பண்ணிக்கறேன்! போதுமா?” என எரிச்சலுடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் இவள்.

“இது போதும் ஷாலு! மீ சோ ஹெப்பி! வந்த காரியம் முடிஞ்சது! அப்போ நான் கிளம்பறேன்” என எழுந்து கொண்டவன், மறுபடியும் அமர்ந்தான்.

“இன்னும் என்ன மாம்ஸ்?”

“ரெண்டு வருசம் போனதும் கல்யாணம்! ஓகே! ஆனா இன்னும் ஏன் இந்த இடத்துலயே குண்டுச் சட்டில குதிரை ஓட்டுற? கோலாலம்பூருக்கு வேலைக்குப் போயேன் ஷாலு! உன் திறமைக்குச் சம்பளம் இன்னும் அதிகமா கிடைக்கும்! அதோட ரெண்டு வருஷம் எங்க மாமா தொல்லை இல்லாம ஹேப்பியா இரு! பிறகு இருக்கவே இருக்கு புருஷன்காரன் டார்ச்சர்”

“டார்ச்சர்னு தெரியுதுல! பிறகு ஏன் மாம்ஸ் என்னைக் கொண்டு போய் கல்யாணக் கிணத்துல தள்ளுறதுலயே குறியா இருக்கீங்க எல்லாரும்?” எனச் சிடுசிடுத்தாள் ஷாலு.

“டேய் குட்டி! இதெல்லாம் யான் பெற்ற துன்பம் பெருக எல்லோரும் கான்சப்ட்தான்டா! தப்பிச்சுப் போக விட்டுருவோமா!” என அவன் சிரிக்க, இவளுக்கும் சிரிப்பு வந்தது.

“கோலாலம்பூருக்குப் போய் வேலைப் பார்க்கனும்னு ஆசையாத்தான் மாம்ஸ் இருக்கு! அப்பாவ தனியா விட்டுட்டு எப்படி?”

“என்ன தனியா? உன் பெரிய அண்ணன் பொண்டாட்டி கூட மாடிலத்தானே இருக்கான்! அவன் பார்த்துக்குவான் உங்கப்பாவ! உன் சின்ன அண்ணன் ஷிப்ல இருந்து வரப்ப, அவனும் பார்த்துப்பான்! ஏன் நான் இல்லையா? நான் பார்த்துக்க மாட்டேனா? என்னமோ எங்க மாமாவ உனக்கு மட்டும் நேர்ந்து விட்ட மாதிரி, ஓவரா பண்ற நீ!!”

மகேஷ்வரனுக்குத் திருமணமாகி இருந்தது. அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். தெய்வமாகி விட்டிருந்த மனைவியின் ஆசைப்படியே மகனை மேல் வீட்டில் குடி வைத்து விட்டார் மனோகர். மகேந்திரன் கப்பலில் பணியாற்றுகிறான். கடலாறு மாதம், நிலம் ஆறு மாதம் என ஓடியது அவன் பிழைப்பு. தங்கை மணமுடித்ததும்தான் தனக்குத் திருமணம் எனச் சொல்லி விட்டான் மகேன்.

“சரி! சரி! வேலைக்கு நெட்ல அப்ளை செய்ய ஆரம்பிக்கறேன்! எனக்குமே இங்க பார்த்த முகங்களே பார்த்து ரொம்ப போரடிக்குது” எனக் குறிப்பாக ராஜாவைப் பார்த்துச் சொல்ல, அவள் கையைக் கிள்ளி வைத்தான் இவன்.

“கல்யாணத்துக்கு முன்ன வெளி உலகத்த பாருன்னு அனுப்பறேன்ல, என்னைப் பார்க்க போராத்தான் இருக்கும்! இந்தா நேம் கார்ட்! நெட்லலாம் அப்ளை பண்ண வேணா! என் ப்ரேண்ட் இந்த கம்பேனில வேலை இருக்குன்னு சொன்னான்! அவன் ரெகெமெண்ட் பண்ணறானாம். உன்னோட டீட்டேல்ஸ் எல்லாம் ஈமெயில் பண்ண சொன்னான். பண்ணிடு ஷாலு! அவங்க பார்த்துட்டு சரி வந்தா செலெக்ட் பண்ணுவாங்க”

கார்டை எடுத்துக் கொண்டவள்,

“வேலை இருக்குன்றத ஏன் முதல்லயே சொல்லல மாமா?” எனக் கேட்டாள் இவள்.

“சொல்லிருந்தா, முதல்ல வேலைக்குப் போறேன்! கல்யாணத்தைப் பிறகு பார்க்கலாம்னு சொல்லிருப்ப! அதான் கல்யாண விஷயத்துல உன்னை லாக் பண்ணிட்டு, வேலையப் பத்தி சொல்றேன்”

“டேஞ்சரஸ் ஃபெல்லோ மாமா நீங்க” எனத் திட்டினாள் இவள்.

ராஜா சொன்னது போலவே தனது தகுதிகளைத் தொகுத்து நேம் கார்டில் இருந்த கம்பேனிக்கு ஈமெயில் அனுப்பி வைத்தாள் இவள். மூன்று நாட்களில் பதில் வந்தது. அதில் குறிப்பிட்டிருந்ததைப் போல தொலைபேசியிலேயே நேர்காணலை முடித்தாள் மதுஷாலினி. இவளது தகுதிகள் அவர்களுக்குத் திருப்தியாய் இருக்க, எத்தனை நாட்களுக்குள் வேலைக்குச் சேர முடியும் எனக் கேட்டிருந்தார்கள். தற்போதைய வேலையை விட வேண்டும் என்றால் இரண்டு மாத நோட்டிஸ் தர வேண்டும். அதனால் இரண்டு மாதத்தில் கோலாலம்பூர் வந்து வேலைக்குச் சேர்ந்து கொள்வதாக பதில் கொடுத்திருந்தாள் ஷாலு. அவர்கள் கொடுக்கப் போகும் சம்பளம், இப்பொழுது அவள் வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்காக இருந்தது. அதோடு பதவியும் கூடி இருந்தது.

இவள் படிப்பை முடித்து வேலைத் தேடும் போதே ராஜா சொல்லி இருந்தான்தான் தலைநகரான கோலாலம்பூரில் வேலைத் தேடிப் போகச் சொல்லி. அங்கே நல்ல சம்பளத்தோடு, பல சலுகைகளும் கிடைக்கும் எனத் தலைப்பாடாய் அடித்துக் கொண்டான். அந்த நேரத்தில் பெரிய அண்ணன் மகேஷ் காதல் என வந்து நிற்க, திருமணம் செய்து வைத்திருந்தார் மனோகர். ஆனாலும் மகன், மருமகளிடம் ஓர் எட்டுத் தள்ளியே நின்றார். அதோடு மகேனும் வேலையெனப் போய் விட, இவளுக்குத் தந்தையை விட்டு விட்டுப் போக மனமில்லை. அதனால்தான் பகாங் மாநிலத்திலேயே இருந்து கொண்டாள். இப்பொழுது மகனையும் மருமகளையும் ஓரளவு ஏற்றுக் கொண்டிருந்தார் மனோகர். மருமகள் சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தால், முகம் காட்டாமல் சாப்பிடும் அளவுக்கு வந்திருந்தார். பேரக் குழந்தை வெளி வரும் முன்பே, அதன் மேல் பாசம் வந்திருந்தது தாத்தனுக்கு.

இரண்டு வருடங்கள் தனக்கே தனக்கென எடுத்துக் கொள்வதை நினைக்கும் போது என்னவோ மனதுக்கு மிக ஆசுவாசமாய் இருந்தது மதுஷாலினிக்கு. யாருடைய கண்காணிப்பும் இல்லாமல், பிடித்ததை செய்து, நினைத்த நேரம் அழுது, கிடைத்ததைச் சாப்பிட்டுத் தனக்காய் மட்டுமே வாழப் போவதை எண்ணிப் பரவசமாக இருந்தது.

ராஜா, மனோகரிடமும் சாரதாவிடமும் என்ன சொன்னானோ தெரியாது, இருவருமே இவள் கிளம்புவதைத் தடுக்கவில்லை.

“ஷாலு! அண்ணா உன் கூட வந்து தங்கற இடம்லாம் பார்த்துத் தரேன்! அங்க ஒன்னும் பிடிக்கலனா திரும்பி வந்திடு! உன்னைக் கஷ்டப்படுத்திக்க வேணாம்! புரியுதா?” என மகேஷ் கேட்கப் புன்னகையுடன் சரியெனத் தலையாட்டி வைத்தாள் பெண்.

செராஸ்(Cheras) எனும் இடத்தில் வாடகை குறைவாக இருக்க, ஒற்றைப் படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார்கள் இவர்கள். கார் பார்க்கிங் வசதி, பாதுகாப்புக்கு செக்குரிட்டி எல்லாம் இருக்க, அவ்விடம் மனோகருக்கும் மகேஷூக்கும் பிடித்துப் போனது. அதோடு அவள் வேலைப் பார்க்கப் போகும் இடத்துக்கு அரை மணி நேரக் கார் பயண தூரம்தான்.

ஒற்றைக் கட்டில், மெத்தை, சில தளவாடப் பொருட்கள், சமையலுக்கான பொருட்கள் என வாங்கித் தந்து வீட்டை இல்லமாய் மாற்றி வைத்து விட்டுப் போனார்கள் சாரதாவும் மனோகரும்.
“கண்ணு! உன் மாமா விடாப்பிடியா நிக்கவும்தான் உன்னை இங்க வேலைக்கு அனுப்ப ஒத்துக்கிட்டேன். கரேக்டா ரெண்டு வருஷமானதும் கல்யாண ஏற்பாட்ட பார்க்க ஆரம்பிச்சிடுவேன். இதென்ன பிடிவாதம்னு உன் மேல கோபம் கோபமா வருது! இந்தக் காலத்துப் பிள்ளைங்க சட்டுன்னு கல்யாணப் பொறுப்புல மாட்டிக்க இஷ்டப்படறது இல்லைன்னு உன் மாமன்காரன் உனக்குக் கொடி புடிக்கறான்! உன் அண்ணியும் இந்தக் காலத்துப் பொண்ணுதானே! அவ புருஷன், வயித்துல புள்ளைன்னு நிறைவா வாழலியான்னு கேட்டா, அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்குன்னு சமாளிக்கறான். என்னவோ போ! நாம வளர்த்து விட்டப் புள்ள, நம்ம பேச்சுக் கேக்க மாட்டுது” எனச் சாரதா விரக்தியாகச் சொல்லி சென்றிருக்க, இவளுக்குத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

மனது விண்டு வலிக்கும் இது போன்ற நேரங்களில் இவளுக்கு உறுதுணையாக இருக்கும் பொருளை இன்னும் திறக்கப்படாமல் கிடந்த சூட்கேசில் இருந்து துழாவி எடுத்தாள் மதுஷாலினி. அந்த பிங்க் வர்ண டெடியைக் கட்டிக் கொண்டவள், துணிக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த சிவப்பு வர்ண கிரீடிங் கார்டை எடுத்துக் கொண்டு கட்டிலில் போய் விழுந்தாள்.

டெடியை நெஞ்சில் போட்டுக் கொண்டவள், உறையில் இருந்து கார்டை வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை படித்தாள். எத்தனையோ ஆயிரம் தடவைப் படித்திருந்தாலும், கண்ணீர் கரை புரண்டு ஓடுவது மட்டும் நிற்பதேயில்லை. கண்களை மறைத்தக் கண்ணீரைத் துடைத்தபடியே வாசித்தாள் மதுஷாலினி.

“மை டியர் மது பாப்பா!

இன்னேரம் கோபம் வந்திருக்குமே பாப்பான்னு சொன்னதுக்கு! கண்ணு ரெண்டும் சாசர் போல விரிஞ்சு, மூக்கு விடைச்சு, உதடு துடிக்குமே! இந்தக் கோபக்கார மது பாப்பாவ, விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது! என் கூடவே உன்னை வச்சிக்கனும். அடிக்கடி கோபப்படுத்தி பார்க்கனும்! உன் பின்னாடியே அலைஞ்சு, கெஞ்சி, கொஞ்சி சமாதானப்படுத்தனும். இந்தப் பாப்பாவ கைல தூக்கி வச்சிக்கனும், முதுகுல உப்பு மூட்டை சுமக்கனும்னு பல ஆசைகள் என் நெஞ்சுக்குள்ள.

மது,

உன் எதிர்காலம், என் எதிர்காலம்னு நெறைய பேசிருக்கோம். நம்ம எதிர்காலத்த பத்தி பேசனதே இல்ல! நீ என் கூட இல்லாம எனக்கு எதிர்காலமே இல்ல மது! இந்த கார்ட்ல நான் லவ் சொல்ல விருப்பப்படல! ஏன்னா என்னோட காதல உன் காதுல மென்மையா ஓதனும்! லவ் யூ சொல்லாதடான்னு சொல்லிருக்கேன்தானேன்னு நீ பட்பட்டுன்னு என்னை அடிக்கறத சுகமா வாங்கிக்கனும்! அதெல்லாம் இந்த கார்ட்ல சொல்றப்ப கிடைக்காது மது!

பிறகு ஏன்டா இந்த கார்ட்னு கேக்கறியா? நான் இன்னும் கொஞ்ச நாளுல கிளம்பிடுவேன்ல! தூர தேசத்துல இருக்கறப்ப, உன்னைத் தொடர்பு கொள்ள முடியாம தவிக்கறப்ப, நம்ம ரெண்டு பேருக்குள்ளும் இருக்கறது என்ன உறவு, விஜய் நம்மள நெஜமா லவ் பண்ணறானா அப்படிலாம் மனசு குழம்பும்ல உனக்கு! அப்படி குழம்பறப்பலாம் இந்த கார்ட்ட எடுத்துப் பார்த்துக்க! இந்த கார்ட் சொல்லும் விஜய் உன் மேல எவ்ளோ பைத்தியமா இருக்கான்னு! ஐ லவ் யு......யுவன்சங்கர் ராஜா மது! இப்பவும், எப்பவும்!

ஹேப்பி பேர்த்டே மது பாப்பா!

ஸ்டே ஸ்வீட் அண்ட் கியூட்!

அன்புடன்,

உன் விஜய்”

கார்ட்டை பத்திரமாய் உறைக்குள் வைத்தவள், தேற்றுவார் யாருமின்றி அழுதபடியே உறங்கிப் போனாள்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: yasotha