Sorkam Madhuvile--EPI 1

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
940
-1,702
93
WhatsApp Image 2026-06-19 at 8.49.39 PM.jpeg

அத்தியாயம் 1

நீதானே என் காலை நேரத்து சூரியன்!




பகாங் மாநிலம், மலேசியா, 2004.



“மகேன்! மகேஷ்!”

“வரோம்பா” என ஒன்றாய் கேட்டது சகோதரர்களின் குரல்.

மேல் மாடியில் இருந்து ஓடி வந்தவர்களைப் பார்த்து,

“நல்லா சுத்தம் பண்ணிட்டீங்களாடா? டாய்லட்லாம் தேய்ச்சுக் கழுவுனீங்களா?” எனக் கேட்டார் மனோகர்.

“பளபளன்னு ஆகிடுச்சு!” என்றான் மகேந்திரன்.

“ஆனாலும் ஏன்பா? ஷாலினி பாவம்பா” என்றான் மகேஷ்வரன்.

பெருமூச்சொன்று எழுந்தது மனோகருக்கு.

பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தானில் இருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்தது மனோகரின் இல்லம். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்! பெரியவனுக்கு இப்பொழுது வயது இருபத்து மூன்று. பெயர் மகேஷ்வரன். இரண்டாவது மகனின் பெயர் மகேந்திரன். அவனுக்கு வயது இருபத்து இரண்டு. இவர்களுக்கு அடுத்துப் பிறந்தவள் மதுஷாலினி. அவளுக்கு வயது பதினெட்டு. மனோகரின் மனைவி, ஷாலினிக்கு ஐந்து வயது இருக்கும் போது வேலைக்குப் போய் வரும் வழியில் ஒரு சாலை விபத்தில் இறந்திருந்தார். அதன் பிறகு பிள்ளைகள் மூவருக்குமே மனோகர்தான் தாயும் ஆனார். அவர் வேலைக்குப் போகும் போது, பள்ளி முடிந்து பிள்ளைகள் தாய் வழிப் பாட்டி வீட்டில் இருப்பார்கள். வேலை முடிந்ததும் இவர் போய் அழைத்து வந்து விடுவார்.

மனோகர் பெரும் பணக்காரர் அல்ல! ஆனால் பெற்றவர்களுக்கு ஒற்றை மகன். அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தன்னுடனே வைத்துப் பார்த்துக் கொண்டார். ஓரளவு நன்றாகவே படித்திருந்த மனோகருக்கு தெனாகா நசியோனலில் வேலை (Tenaga Nasional- மின்சார வாரியம்). நல்ல சம்பளம். அதோடு அவர் காதலித்து மணந்த பெண்ணும் ஆசிரியை வேலையில் இருந்தார். இவரது பெற்றவர்கள் இறந்த போது அவர்களின் ஊழியர் சேம நிதி மொத்தமும் இவருக்கே வந்து சேர்ந்தது. அதை வைத்துத்தான் இந்தக் கனவு இல்லத்தைக் கட்டினார் மனோகர்.

அவர்கள் இருக்கும் இந்த வீட்டைக் கட்டிக் குடி வந்த போது ஷாலினி குட்டிக்கு வயது இரண்டுதான் இருக்கும். கீழே ஒரு தளம். வீட்டின் வலப்புறத்தில் படிகள் வைத்து மேலே போவது போல், இன்னொரு தளம் அமைத்திருந்தார்கள். அந்தத் தளத்துக்கு மேல் மொட்டை மாடி இருந்தது. மலேசிய வீடுகளில் பெரும்பாலும் இது போல மொட்டை மாடிகள் இருக்காது. ஆனால் அப்படி வைக்க வேண்டும் என ஷாலினியின் அம்மாவுக்கு ஆசை.

மகன்களுக்குத் திருமணமானால் மேல் மாடியில் குடி வைக்கலாம்! மகள் அவள் குடும்பத்துடன் கீழ் போர்ஷனில் இருக்கட்டும். கணவன் மனைவி இருவரும் கீழேயும் மேலேயும் மாற்றி மாற்றி இருந்து கொள்ளலாம் எனத் திட்டமிட்டார் மனோகரின் மனைவி. அதை அச்சுப்பிசகாமல் கட்டிக் கொடுத்திருந்தார் மனோகர்.

கீழ் போர்ஷனில் இவர்கள் எல்லோரும் இருந்து கொண்டு மேல் போர்ஷனில் தேவையில்லாத சாமான்கள் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். ஷாலினி அண்ணன்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது, கூட்டாஞ் சோறு ஆக்குவது, ஒளிந்து விளையாடுவது எல்லாம் அந்த மேல் போர்ஷனில்தான். மொட்டை மாடியில் ஊஞ்சல் ஒன்று வாங்கி வைத்திருந்தார்கள். அங்குதான் தாயின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்பாள் ஷாலினி குட்டி! அதோடு பௌர்ணமி நாட்களில் நிலா சோறும் மொட்டை மாடியில்தான் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

ஷாலினியின் தாயார் மறைந்த போது அடிக்கடி மேல் வீட்டில் போய் அமர்ந்து கொள்வாள் சின்னவள். எவ்வளவு அழுதாலும் அம்மா வர மாட்டாள் எனத் தெரிந்து போக, தந்தையின் அரவணைப்பும், அண்ணன்களின் அன்பும், மேல் வீட்டின் தனிமையும் இவளுக்கு ஆறுதலாகிப் போனது. அவளுக்காகவே அத்தளத்தை வாடகைக்கு விடாமல் அப்படியே போட்டு வைத்திருந்தார் மனோகர்.

இப்பொழுது மகன்கள் பல்கலைக்கழகத்தில் இருக்க, மகளும் பள்ளிப் படிப்பை முடித்திருக்க, பணத் தேவை அதிகரித்திருந்தது. அதற்காகவே மேல் மாடியை வாடகைக்கு விட வேண்டிய நிர்ப்பந்தம். ஷாலினியோ முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள். உண்ணாவிரதப் போராட்டம் வேறு நடத்தி மனோகரின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள். கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்து விட்டு, மிரட்டித்தான் சம்மதிக்க வைத்திருந்தார் மனோகர்.

“இந்த எக்ஸ்ட்ரா காசு வந்தா, செலவை இழுத்துப் புடிக்க வேண்டியது இருக்காது! ஷாலுமாவுக்குக் கண்டிப்பா நல்ல ரிசல்ட் வரும்! யூனிவெர்சிட்டியும் கிடைக்கும். ஆனாலும் என்னால அவள தனியா எங்கயோ அனுப்பிட்டு இருக்க முடியாது”

“எங்களாலும் முடியாதுப்பா!” என்றார்கள் அண்ணனும் தம்பியும் கோரஸாக.

“காலேஜ் சேர்த்து, லப்டாப் அது இதுன்னு வாங்கித் தரனும்னா கொஞ்சம் காசு அதிகமா வேணுமேடா! அவ பேருல போட்டிருக்கற டெப்பாசிட்ட உடைக்க மனசு வரல! அதான் இந்த வாடகை முடிவு! அதைப் புரிஞ்சுக்காம மூஞ்சை மூஞ்சூரு மாதிரி வச்சிருக்கா!” என வருத்தத்துடன் ஆரம்பித்து சிரிப்பில் முடித்தார் மனோகர்.

“ஏந்திருச்சிட்டாளா?”

“இன்னும் இல்ல! நைட்டுலாம் உங்க கூடத்தானேடா ப்ளே ஸ்டேசன்ல கேம் வெளையாண்டா! இன்னும் எழுந்திருக்கல”

“நான் போய் எழுப்பறேன்! மகேனு நீ போய் மில்லோ கலக்கி வை ஷாலுவுக்கு” என்றபடி ஷாலினியின் அறைக்குப் போனான் மகேஷ்.

அப்பொழுதே காலை மணி பத்துக்கும் மேல் ஆகியிருந்தது. மனோகர் தோசை ஊற்ற, மகேன் தங்கைக்கு மில்லோ கலக்கி, அதை ஆற்றிப் பதமாய் வைத்தான்.

தங்கையின் அறைக் கதவைத் தட்டி விட்டு, உள்ளே நுழைந்தான் மகேஷ். தலை முதல் கால் வரை போர்வையால் மூடிக் கொண்டு குப்புறப் படுத்திருந்தாள் மதுஷாலினி. மூக்கும் வாயும் மட்டும் லேசாய் வெளியே தெரிந்தது.

அவள் அருகே போய் அமர்ந்தான் இவன்.

“ஷாலு! ஷாலுக்குட்டி” என மென்மையாய் அழைத்தான் மகேஷ்.

“தூக்கம் வருது போடா!”

“வாடா, போடான்னு சொன்னா அடி விழும்”

படக்கென எழுந்து அமர்ந்தவள், கண்களை உருட்டி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எழுந்து வா! பசியாறலாம்”

“அடிப்பியா என்னை?”

“ராங்கி பண்ணா அடிப்பேன்!” என்றவனின் முகத்தில் புன்னகை இருந்தது.

பதினெட்டு வயதாகி இருந்தாலும், இன்னும் பதினாறு வயது போல சின்னதாய்த்தான் இருப்பாள் ஷாலினி. நன்றாகத்தான் சாப்பிடக் கொடுத்தார்கள் அந்த வீட்டு ஆண்கள் மூவரும். அது போக அவளது அம்மாயியும் உடம்பு ஏற தானியத்தில் செய்த உருண்டைகள், பால், தயிர், நெய்யென ஊட்டித்தான் வளர்த்தார். எங்கே! உண்டது எல்லாம் எலும்பில் ஏறிச் சொறுகிக் கொள்ள, ஒல்லியாய்தான் இருந்தாள். அதோடு பள்ளியில் தடகளப் போட்டிகளில் கலந்து வெற்றிப் பெரும் அளவுக்கு ஆக்டிஃபாகவும் இருக்க சதை வைக்கவேயில்லை.

தோள் வரை புரளும் கூந்தல் கலைந்து, சிலிப்பிக் கொண்டு நிற்க, பெரிய கண்கள் இரண்டும் விரிந்து கிடக்க, பற்களில் போட்டிருந்த க்ளிப்(braces) டாலடிக்க கியூட்டாய் இருந்த தனது தங்கையைப் பார்த்து தானாகவே புன்னகை முளைத்தது இவனுக்கு.

“அழகிடி நீ!” எனக் கை நீட்டி அவளது தாடையைப் பற்றி ஆட்டினான் மகேஷ்.

“அழகி சொல்லாதே!!” என மிரட்டினாள் சின்னவள்.

கொஞ்சமாய் துருத்தி நிற்கும் பற்களால் பள்ளியில் கேலி கிண்டலுக்கு ஆளாகி வளர்ந்திருந்த பெண்ணுக்கு உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதோடு மற்ற மாணவிகளை விட இவள் சின்னதாய் இருக்க, யாராவது அழகி எனச் சொல்லி விட்டால், கிண்டல் செய்கிறார்கள் என எண்ணி கடுப்பாகி விடுவாள்.

“அழகிய அழகின்னு சொல்லாம, குளிக்காம இருக்கறதுனால அழுக்கின்னா சொல்ல முடியும்?” எனக் கேட்டவன் எழுந்து நின்று கொள்ள, அவன் எதிர்ப்பார்த்தது போலவே தலையணையை எடுத்துக் கொண்டு அவனை அடிக்க ஓடி வந்தாள் ஷாலினி.

“காப்பாத்துங்க!” எனக் கத்தியபடியே இவன் ஓட, அவள் துரத்த, அவர்களுடன் மகேனும் சேர்ந்து கொண்டான்.

வீட்டு ஹாலில் ஒரு அடி பிடி சண்டை நடந்தது.

“டேய்! விடுங்கடா அவள! எப்ப பாரு அடிச்சுப் புடிச்சு வெளையாடறது! கொஞ்சமாச்சும் பொம்பள புள்ள மாதிரி நடக்கறாளா இவ? இல்ல நீங்கத்தான் பொம்பள புள்ள மாதிரி நடத்தறீங்களா?” எனச் சத்தம் போட்டார் மனோகர்.

அவரது சத்தத்தில் பிரிந்து நின்றார்கள் மூவரும். சிறு வயதில் இருந்தே இப்படித்தான். மூவரும் அடித்துப் பிடித்துத்தான் விளையாடுவார்கள். தங்கைக்கு மரம் ஏறுவது, காற்பந்து விளையாடுவது, லஸ்டிக்(மலாய் வார்த்தை=கவண்) வைத்து மாங்காய் அடிப்பது, கையை விட்டு விட்டு சைக்கிள் ஓட்டுவது என எல்லா வித வீர சாகசங்களையும் கற்றுக் கொடுத்திருந்தனர் இருவரும். இவளும் அவர்களுடன் சரிக்கு சமமாக விளையாடுவாள்.

இவளது அம்மாயி சாரதாம்மா, இழுத்துப் பிடித்து உட்கார வைத்து முடியைப் படிய வாரி கொம்பு போட்டு விடுவார். முகம் துடைத்து அழகாய் பவுடர் ஒற்றி, கண்ணுக்கு மை தீட்டி விடுவார்! சற்று நேரத்தில் அண்ணன்களுடன் சேற்றிலும் சகதியிலும் விளையாடி பக்கியாய் வந்து நிற்பாள் ஷாலினி. கத்திக் கத்தி ஓய்ந்தே போய் விடுவார் இவள் அம்மாயி. மகள் மேல் உயிரையே வைத்திருந்த சாரதாம்மா, இவள் மூலமாக மகளைப் பார்த்தார். பேத்தியின் மேல் உயிரையே வைத்திருந்தாலும், ராங்கி செய்யும் போது அடி வைக்கவும் தவறமாட்டார்.
“அப்படியே நைஸா நழுவிப் போய் குளிச்சிட்டு வா ஷாலு! போ! போ!” என்றான் மகேன்.

அமைதியாய் அவ்விடத்தை விட்டு நழுவினாள் பெண்.

“அவ குளிச்சுட்டு வர லேட்டாகும்! நீங்க வந்து சாப்பிடுங்கடா! காலைல இருந்து வேலைப் பார்க்கறீங்க! பசிக்கலயா!” என இவர்களுக்கும் டோஸ் விழுந்தது.

“வரட்டும்பா அவ! மூனு மாசத்துக்கு ஒருக்கத்தான் வரேன்! அவ கூட சாப்பிடறேனே!” என்றான் மகேஷ்.

மகேஷ் கடைசி வருடப் படிப்பில் இருந்தான். பினாங்கு மாநிலத்தில் இருந்தது அவன் படிக்கும் யூனிவெர்சிட்டி. மகேனுக்கு இன்னும் இரண்டு வருடப் படிப்பு இருந்தது. அவன் கோலாலம்பூரில் படித்தான். லீவ் கிடைக்கும் போது பகாங் மாநிலத்தில் இருக்கும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் இருவரும். இப்பொழுது கூட ஒரு மாத செமெஸ்டர் ப்ரேக்குக்கு வந்திருந்தார்கள். மதுஷாலினி மலேசியாவின் பொதுப் பரிட்சை எஸ்.பி.எம்மை முடித்து விட்டு ரிசல்ட் வருவதற்காக காத்து நின்றாள்.

என்ன ரிசல்ட் வந்தாலும் குவாந்தான் டவுனில் இருக்கும் காலேஜீல்தான் சேர்ப்பதாகத் திட்டம். அவள் விரும்பும் ஐ.டி துறையில் சேர்ப்பதற்காக மாதிரி தேர்வு முடிவுகளைக் கொண்டு, முன் பணமும் கட்டி ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்திருந்தார் மனோகர். இன்னும் ஒரு மாதத்தில் அவளது படிப்புத் தொடங்கி விடும்.

இவள் வரும் வரை அண்ணன்கள் இருவரும் சாப்பிடாமல் காத்திருப்பார்கள் என அவசர அவசரமாகக் குளித்து விட்டு வந்தாள் ஷாலினி. பதினொரு மணிக்குத்தான் அந்தக் குடும்பத்தினர் காலை உணவையே உட் கொண்டனர். சாப்பிட்டு முடித்துப் பையன்கள் இருவரும் மீண்டும் மாடி வீட்டுக்குப் போக, ஷாலினியும் அவர்களுடன் கிளம்பினான்.

“ஷாலு”

“ஹ்ம்ம்ம்!” எனத் தன் தகப்பனுக்குப் பதில் கொடுத்தாள் ஷாலினி.

அவர் மேல் இன்னும் கோபத்தில் இருக்கிறாளாம்! அப்பா என விளிப்பதில்லை சில நாட்களாய்.

“எங்க அண்ணனுங்க வாலப் புடிச்சுக்கிட்டு ஓடற? வந்து மங்கு ஜாமான(பாத்திரம்) கழுவிப் போடு!”

இரண்டு கால்களையும் தொம் தொம்மென எடுத்து வைத்து கிச்சனுக்குப் போனாள் பெண். சட்டிப் பானை உருளும் சத்தம் கேட்க, மனோகருக்கு லேசாய் சிரிப்பு வந்தது.

“பிடிவாதம் புடிச்ச கழுதை!” என முணுமுணுத்தபடியே மற்ற வேலைகளைப் பார்க்கப் போனார்.

பாத்திரங்களைக் கழுவிப் போட்டவள், அப்படியே மதிய உணவையும் சமைக்க ஆரம்பித்தாள். மகளுக்குச் செல்லம் கொடுத்தாலும் சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைகளையும் கற்றுக் கொடுத்திருந்தார் மனோகர். பையன்கள் இருவரும் கூட சமையல் வேலையில் இருந்து வீட்டைப் பராமரிக்கும் வேலை வரைப் பார்ப்பார்கள்.

மகேஷூக்குப் பிடித்த நெத்திலி சம்பல் வைத்தவள், அப்படியே மகேனுக்குப் பிடித்த சார்டின் சம்பலையும் சமைத்து வைத்தாள். இலெக்ட்ரிக் குக்கரில் சாதம் வைத்தவளின் பார்வை வீட்டுக்கு வெளியே போட்டிருந்த காய் கறி தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் தகப்பனின் மேல் விழுந்தது. அவருக்குத் தலை முடி லேசாக நரைத்திருந்தது. உடம்பும் கூட இளைத்திருந்தது.

“வீக்கெண்ட்ல கூட வேலைப் பார்க்கனும்னு இவருக்கு என்ன தலை எழுத்து!!! கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்ல” என முனகியபடியே அவருக்குப் பிடித்த மாதிரி முட்டைகோஸ் பிரட்டி(பொரியலை இப்படித்தான் சொல்வார்கள் இங்கே) வைத்தாள்.

சமையல் வேலையை முடித்து விட்டு, தந்தையை நாடிப் போனாள் இவள். மகள் அருகில் நிற்பது தெரிந்தும் கண்டுக் கொள்ளவில்லை மனோகர்.

“ப்பா!”

“ஹ்ம்ம்ம்”

“என்ன வெறும் ஹ்ம்ம்!!! ஷாலு குட்டின்னு சொல்லுங்க”

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“என்ன வேணும்?” எனக் கேட்டார் மனோகர்.

“என்ன வேணும் ஷாலு குட்டின்னு கேளுங்க!” எனச் சிணுங்கினாள் பெண்.

அவளைத் திரும்பிப் பார்த்த மனோகர்,

“என் ஷாலு குட்டிக்குக் கோபம் போய்டுச்சா?” எனக் கேட்டார்.

“இன்னும் இருக்கு! ஆனாலும் உங்க கிட்ட பேசாம இருக்க முடியல! நம்ம மேல் வீடு எனக்கு எவ்ளோ ப்ரீஷீயஸ்னு தெரியும்தானே! அங்கத்தான் அம்மா என் கூட ஒளிஞ்சு விளையாடுவாங்க! அங்கத்தான் நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவாங்க! அங்கத்தான் அவங்களோட சேலைய காய வைப்பாங்க! நம்ம அம்மா அங்கத்தான்பா சுத்திட்டு இருப்பாங்க! அங்க போய் எப்படிப்பா மத்தவங்கள தங்க வைக்கறது?” எனக் கேட்டவளின் குரலில் அழுகை இருந்தது.

“கண்ணு! அம்மா நமக்கு தெய்வம்மா! தெய்வம் இல்லாத இடம் எங்கிருக்குன்னு சொல்லு பார்ப்போம்! அப்படி பார்த்தா இந்த மாங்கா மரத்துல அம்மா இருக்கா! அதை அவத்தானே நட்டு வச்சா! நம்ம கிச்சன்ல அம்மா இருக்கா! எப்போதும் அங்கத்தானே நின்னுட்டு இருப்பா! நம்ம சாமி ரூம்ல அம்மா இருக்கா! அங்கத்தானே சாமி பாட்டு பாடுவா! அம்மா இல்லாத இடம்னு நம்ம வீட்டுல ஒன்னு இல்லடா குட்டி! உனக்காகத்தான், உன் படிப்புக்காகத்தான் மேல வீட்டை வாடகைக்கு விடறேன்னு புரிஞ்சுகிட்டு, அம்மா இனி மேல போகாம கீழவே உன் கூடவே இருப்பாடா குட்டி!” எனச் சமாதானப்படுத்தினார் மனோகர்.

அவர் குரலில் தெரிந்த வருத்தம் மகளை என்னவோ செய்தது.

தந்தையை நெருங்கி அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் மதுஷாலினி. அவர் சொல்வது மண்டைக்குப் புரிந்தது! ஆனாலும் மனம் கிடந்து அல்லாடியது. தன்னால், தன் கோபத்தால் தந்தை வருத்தப்படுவது பொறுக்காமல்,

“சரிப்பா! இனிமே கோச்சிக்க மாட்டேன்! நீங்க இந்த வேலையை விட்டுட்டுப் போய் கொஞ்சம் படுங்க! ஈவ்னிங் வெயில் இறங்கனதும் செஞ்சிக்கலாம்” என்றவள், அவர் மறுக்க மறுக்க கையைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துப் போனாள்.

“சோபால படுங்க!” என மிரட்டியவள், ஸ்டேண்ட் ஃபேனை அவருக்கு நேராய் கொண்டு வந்து வைத்தாள்.

அதன் பிறகு அண்ணன்களுக்கு உதவி செய்ய கிளம்பி விட்டாள் ஷாலினி. முகத்தைப் பார்க்காத முன்பே அந்த வீட்டு மேல் மாடிக்குக் குடி வருபவர்களைப் பிடிக்காமல் போய் விட்டது பெண்ணுக்கு!
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 1
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.