Pirithor Nesamithu--EPI 8

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 8

சின்ன சின்னப் பூவே

நீ கண்ணால் பாரு போதும்!!




அது ஒரு தனியார் பள்ளி. காரைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, மகளுடனும் மனைவியுடனும் உள்ளே நடந்தான் தினகரன். தாமரையின் கையை இறுக்கமாகப் பற்றி இருந்தாள் பூந்தென்றல். இரண்டு நாட்களாகத் தாமரையிடம் கோபமாய் இருந்த பூக்குட்டி, இப்பொழுதுதான் தானாகவே அவள் கையைப் பற்றி இருந்தாள். சின்னவள் மேல் இவள் மனம் பாகாய் உருகினாலும், தனது இளக்கத்தைக் காட்டிக் கொள்ளவில்லை செந்தாமரை.

நிவேதாவின் உடல் நிலை, அவளது இறப்பு எனச் சின்னவளைப் பள்ளிக்கு அனுப்புவது தாமதப்பட்டிருந்தது. முந்தைய வருடம் பள்ளிக்கு அனுப்பி இருந்தான் தினகரன். அவளோ அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, காய்ச்சல் வரும் அளவு போய் இவனுக்குப் பயத்தைக் காட்டி இருந்தாள். மனைவியைப் பார்த்துக் கொண்டதில் வியாபாரத்தில் சரியாகக் கவனம் வைக்காமல், தந்தையின் பொறுப்பில் விட்டிருந்தான் தினகர். நன்றாகப் போய் கொண்டிருந்த வியாபாரம், இவன் பொறுப்பாய் பார்க்காமல் போக சரிய ஆரம்பித்திருந்த காலக்கட்டம் அது. மகளைப் பார்ப்பதா, வியாபாரத்தைப் பார்ப்பதா, தூக்கம் இல்லாமல் நலிவடைய ஆரம்பித்திருக்கும் தன் உடல் நிலையைப் பார்ப்பதா எனத் தடுமாறி நின்றான் இவன்.

வேறு வழியில்லாமல் மகளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி, வீட்டிலேயே டீயூட்டர் வைத்துப் படிக்க வைத்தான். தந்தையும் வேலைக்காரியும் அவளைப் பார்த்துக் கொள்ள, இவன் வியாபாரத்தை சரிப்படுத்தும் வேலையில் மூழ்கினான். அதோடு உடல் நிலையையும் சரிப்படுத்தப் பாடுபட்டான்.

பூந்தென்றல் பள்ளி செல்லவில்லை என அறிந்து கொண்ட தாமரைதான், ஐந்து வயதிலாவது பள்ளியில் கொண்டு சேர்ப்போம் எனத் தினகரிடம் யோசனைச் சொல்லி இருந்தாள்.

“அவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவா தாமரை!”

“ஸ்கூல் போற புள்ளை அழத்தான் செய்யும். உங்க சூழ்நிலை சரியில்லாததால உங்களால அப்போ அவளைப் பொறுமையா ஹேண்டில் பண்ண முடியல. இப்போத்தான் நான் இருக்கேன்ல, அவள நான் கவனிச்சுக்கறேன். இந்த வயசுல ஓடனும், விளையாடனும், ப்ரெண்ட்ஸ் கிட்ட பழகனும். நீங்க என்னான்னா அவளைத் தனிமைப்படுத்தி வச்சிருக்கீங்க! பெரியவங்க கூடவே பழகி குழந்தைத்தனம் இல்லாம, பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கறா பூக்குட்டி! பொண்ணுங்க சீக்கிரமே மேச்சுர்ட் ஆகனும்னு இயற்கையாவே விதிக்கப்பட்டிருக்கு! அந்தக் காலகட்டம் வர வரைக்குமாச்சும் அவ குழந்தையா இருக்கட்டும் தினகர் மாமா! ஸ்கூல்ல சேர்ப்போம்”

“சரி, சேர்த்துடலாம்! நீயே அவள ஹேண்டில் பண்ணிக்க! அதுக்குத்தானே இந்தக் கல்யாணம்” என்றவனை ஆயாசமாகப் பார்த்தாள் பெண்.

பல நேரங்களில் கிண்டல் கேலியாகப் பேசிச் சிரிப்பவன், சில நேரங்களில் இப்படி பேசி வைப்பான். தாமரையின் முகம் பார்த்து சில சமயங்களில் புன்னகைத்து வைப்பவன், பல சமயங்களில் முறைத்து வைப்பான்.

‘என்ன மேக் இந்த தினகர் மாமா! முன்ன வந்தா முட்டறாரு, பின்னாடி போனா திட்டறாரு’ என மண்டையைக் குழப்பிப் கொள்வதே இவள் வேலையாகிப் போனது.

சித்தியால்தான் பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சின்னக்குட்டி. தாமரை எவ்வளவோ சமாதானம் செய்தும் தென்றல் அவள் பக்கம் வீசவேயில்லை.

‘ஏன்டி! முக வெட்டுல எங்கக்கா மாதிரி இருக்கற நீ, குணத்துலயும் அவள மாதிரி இருந்திருக்கலாம்டி! ஆத்திரத்தக் காட்டுறதுலயும், அழிச்சாட்டியம் பண்றதுலயும் அப்படியே உங்கப்பன உரிச்சு வச்சிருக்க’ என மனதுக்குள் சின்னவளை சீராட்டிக் கொண்டாள் செந்தாமரை.

இரவில் தள்ளிப் படுக்கும் இருவருமே காந்தத்தைக் கண்ட இரும்பு போல நடு ராத்திரியில் தாமரையை ஒட்டிக் கொண்டுதான் கிடப்பார்கள். பாரமாய் அழுத்தும் அவன் கரமும், ஈரமாய் நெஞ்சில் உரசும் பூக்குட்டியின் உதடும் ஓரளவுக்குப் பழகிப் போயிருந்தது செந்தாமரைக்கு.

தாமரைப் பள்ளி செல்வதைப் பற்றி பேசிய மறுநாளே டோனெஷன் கொடுத்து பூந்தென்றலுக்கு சீட் வாங்கி இருந்தான் தினகரன். ஆனாலும் ஒரு சம்பிரதாயத்துக்காக இண்டெர்வியூ வைக்க வேண்டும் என இவர்களை அழைத்திருந்தார்கள்.

பிரின்சிபலின் அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். புன்னகையுடன் இவர்களை அமரச் சொன்னார் அவர். அவரோடு மேனேஜ்மெண்ட் ஆட்கள் இருவரும், ஆசிரியர் ஒருத்தரும் உள்ளே இருந்தார்கள். இதே பள்ளியில்தான் போன முறையும் சேர்த்து விட்டிருந்தான் தினகரன்.

“போன வருஷம் நாலு வயசுங்கறதுனால இண்டெர்வியூ ஏதும் வைக்காம கிளாஸ்ல சேர்த்துக்கிட்டோம்! இப்போ அஞ்சு வயசு ஆகிடுச்சே! என்னென்ன தெரியுதுன்னு டெஸ்ட் பண்ணிட்டா எந்த கிளாஸ்ல போடறதுன்னு டிசைட் பண்ணிடுவோம்! வீக்கா இருந்தாங்கன்னா, அதுக்கேத்த மாதிரி ரொம்ப கேர் தேவைப்படற வகுப்புல போடுவோம்! ப்ரைட்டா இருந்தா, ஃபர்ஸ்ட் கிளாஸ்ல போட்டுடலாம் பாருங்க” என்றார் பிரின்சிபல்.

உள்ளே இருந்த புதிய முகங்களைப் பார்த்ததும் இன்னும் இறுக்கமாகக் தாமரையின் கையைப் பிடித்துக் கொண்டாள் பூந்தென்றல். கண்களில் கண்ணீர் குளம் கட்டிக் கொண்டது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழாமல், மௌனமாய் கண்ணீர் வடித்தாள் குட்டி. தினகர் டென்ஷனாய் கைகளைப் பிசைய, தாமரைக்கோ மனது உருகியது சின்னவளைப் பார்த்து.

அங்கிருந்த ஆசிரியை ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்க, பூந்தென்றலோ பதில் சொல்ல வாயையே திறக்கவில்லை. கண்ணீர் வடித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

“உனக்குத் தெரிஞ்ச ஸ்பெல்லிங்தானேமா! டீச்சர் கிட்ட சொல்லு பார்க்கலாம்” எனத் தினகர் கெஞ்சி கூடப் பார்த்து விட்டான்.

வாயை இறுக்கி மூடி வைத்திருந்தாள் சின்னவள். ஆசிரியர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை இவளிடம் இருந்து. பிரின்சிபல் இவர்களைப் பார்த்து,

“மிஸ்டர் தினகரன். ஒன்னும் பிரச்சனை இல்லை. பூந்தென்றல ஸ்பெஷல் கிளாஸ்ல சேர்த்திடறோம். அங்க பேசிக்ல இருந்து பார்த்துப்பாங்க! நீங்க வீட்டுலயும் கொஞ்சம் கைட் பண்ணிடுங்க மிஸஸ் தினகரன்” எனச் சொன்னார்.

“கொஞ்சம் டைம் குடுங்க மேடம்! நெர்வஸா இருக்காங்க எங்க டாட்டர்! மறுபடி கேளுங்க, சரியா சொல்லிடுவாங்க” என்ற தாமரை, ஆசிரியரை மறுபடி கேள்விகளைக் கேட்கும்படி பணித்தாள்.

அவர் ஸ்பெல்லிங் டெஸ்ட்டை மறுபடி ஆரம்பிக்க,

“எனக்குத் தெரியும்! நான் சொல்றேன் டீச்சர்!” என அவசரமாகக் கையைத் தூக்கினாள் தாமரை.

“எனக்கும் தெரியும்” எனப் போட்டியாக பூந்தென்றலும் கையைத் தூக்கினாள்.

“நான்தான் சொல்வேன்” எனத் தாமரை அடம் பிடிக்கப் படபடவென விடையைச் சொன்னாள் பூந்தென்றல்.

“இது சீட்டீங்! கையைத் தூக்கினாலும் டீச்சர் ஓகே சொல்ற முன்னமே பதில் சொல்லிட்டா! இன்னொரு கேள்வி கேளுங்க டீச்சர்” எனத் தாமரைச் சொல்ல, மற்றக் கேள்விகளும் கேட்கப்பட்டன.

எல்லா கேள்விகளுக்கும் தாமரை கையைத் தூக்க, அவளைச் சொல்ல விடாமல் பூக்குட்டியே பட்பட்டெனப் பதில்களைத் தந்திருந்தாள். மகளின் மௌனத்தை உடைத்து, அவளைப் பதிலளிக்க வைத்தத் தாமரையைப் பிரமிப்பாகப் பார்த்தான் தினகரன்.

“ரொம்ப பிரிலியண்டா இருக்காங்க உங்க டாட்டர்! வெல் டன்! அவங்கள முதல் கிளாஸ்லயே சேர்த்துக்கறோம் மிஸ்டர் தினகரன்” என்றார் பிரின்சிபல்.

தாமரைக்கும் தினகருக்கும் ஒருங்கே முகம் மலர்ந்து போனது. யூனிஃபார்ம், புத்தகங்கள் பற்றி எல்லாம் பேசி முடித்து வெளியே வந்தார்கள் மூவரும்.

“நீங்க ரெண்டு பேரும் இங்க கொஞ்ச நேரம் நில்லுங்க! நான் பிரின்சிபல் கிட்ட ஒரு விஷயம் கேட்டுட்டு வந்துடறேன்” எனச் சொல்லி மீண்டும் உள்ளே நுழைந்தான் தினகரன்.

சற்று தூரத்தில் தெரிந்த ப்ளேகிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் காட்டி,

“ஸ்கூல் வந்தா அவங்க போல விளையாடலாம்! படிக்கலாம்! வரையலாம்! நெறைய ஃப்ரேண்ட்ஸ் கிடைக்கும் பூக்குட்டிக்கு! ரொம்ப ஜாலியா இருக்கும்!” என்றாள் இவள்.
உதட்டைப் பிதுக்கினாள் சின்னவள்.

“ஏன்மா உங்களுக்கு ஸ்கூல் வேணாம்?” என ஏற்கனவே கேட்டிருந்த கேள்வியை மறுபடி கேட்டாள் தாமரை.

வீட்டில் இவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கோபமாய் முகத்தைத் தூக்கி வைத்திருந்த பூந்தென்றல், தன்னைத் தூக்கிக் கொள்ள சொல்லி இரு கைகளையும் நீட்டினாள். அரவணைப்பாய் சின்னவளைத் தூக்கி வைத்துக் கொண்டாள் இவள். தாமரையின் காதருகே குனிந்து,

“அவங்க எல்லாருக்கும் அம்மா இருக்கு! பூக்குட்டியோட அம்மாத்தான் சாமிக்கிட்ட போய்ட்டாங்களே! லாஸ்ட் டைம் அப்பா கொண்டு வந்து ஸ்கூலுல விட்டுட்டு கடைக்குப் போய்ட்டாங்க! மத்தவங்க மாதிரி என் கூட இருந்து பார்த்துக்க அம்மா இல்ல! சாப்பாடு ஊட்ட அம்மா இல்ல! ரொம்ப சேடா இருந்துச்சு சித்தி! நான் அழுதுட்டே இருந்தேனா, மத்த புள்ளைங்க என்னைக் கீழ தள்ளி விட்டாங்க! க்ரை பேபின்னு கைத்தட்டி சிரிச்சாங்க! எனக்கு அவங்கள புடிக்கல! ஸ்கூல புடிக்கல” எனச் சோகமானக் குரலில் சொல்ல, இவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

சின்னவளின் முதுகை வருடிக் கொடுத்து,

“ஸ்கூல் ஆரம்பிச்ச சில நாளுக்குத்தான் குட்டிமா அம்மாவையோ, அப்பாவையோ உள்ள விடுவாங்க! அந்தச் சில நாட்களுக்கு சித்தி உங்க கூடவே இருப்பேன்! அதுக்கு மேல வர நாளுலாம் சமத்துப் புள்ளையா மத்தவங்க மாதிரி நீங்க தனியா, தைரியமா ஸ்கூலுல இருந்து பழகிக்கனும். நானு, உங்க அம்மா, உங்க அப்பா எல்லாருமே இப்படித்தான்டா பூக்குட்டி தனியா ஸ்கூலுக்குப் போனோம்! இனி யாராச்சும் தள்ளி விட்டா, பூக்குட்டி பயப்படக் கூடாது! டீச்சர்ட்ட போய் தைரியமா சொல்லனும். வீட்டுல வந்து சித்தி கிட்டயும் சொல்லனும்! நாங்க அது மாதிரி இன்னொரு தடவை நடக்காம பார்த்துப்போம்!” என மென்மையாக எடுத்துச் சொன்னாள் தாமரை.

தாமரையின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்ட பூந்தென்றல்,

“சாரி சித்தி!” என்றாள்.

“எதுக்குடாம்மா?”

“உங்க கிட்ட டூ விட்டதுக்கு! இனி அப்படி செய்ய மாட்டேன்! பூக்குட்டி சோ சாரி” என்றவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் செந்தாமரை.

அந்தக் குட்டி மூளைக்குத் தோன்றிய பள்ளியைப் பற்றிப் பல சந்தேகங்களைக் கேட்டாள் பூந்தென்றல். சலிக்காமல் அவள் கேட்டதுக்கு எல்லாம் பதில் கொடுத்தாள் தாமரை. ஓரளவுக்கு மனம் சமாதானமாகி, பள்ளிக்குப் போவதைப் பற்றிச் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தாள் பூந்தென்றல். அவள் முகத்தில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்ததும்தான் தாமரைக்கு மனது சரியானது. தினகரனும் வந்து விட, அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும்.

“பூக்குட்டி ஸ்கூல் போகப் போறத ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடிடலாமா?” எனக் கேட்டான் தினகரன்.

“ஐ! ஜாலி ஜாலி! போலாம்ப்பா” எனக் குதித்தாள் பெண்.

ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றின் அருகே காரை நிறுத்தி பார்க் செய்தான் தினகரன். மூவரும் தங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரை ஆர்டர் செய்து விட்டு, ஆசுவாசமாய் அமர்ந்தார்கள். ஆர்டர் செய்தது வந்ததும், சந்தோஷமாய் சாப்பிட ஆரம்பித்தாள் பூந்தென்றல். தாமரையும் தனக்கு ஆர்டர் செய்திருந்த மிண்ட் ஃப்ளேவர் ஐஸ்கிரீமை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாள். சென்னையின் சூடான காலநிலைக்கு சில்லென்ற ஐஸ்க்ரீம் இதமாய், பதமாய் தொண்டைக்குள் இறங்கியது இவளுக்கு. கண்களை மூடி ரசித்து விழுங்கியவள், விழிகளை மலர்த்திய போது சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்டான் தினகரன்.

அதன் பிறகு தினகர் அமைதியாகி விட, பெண்கள் இருவர்தான் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும்,

“கிளம்பலாமா?” எனக் கேட்டவனின் குரலில் மருந்துக்கும் மலர்ச்சி இல்லை.

மகளைத் தூக்கிக் கொண்டவன், விடு விடுவென முன்னே நடந்து விட்டான்.

‘என்னாச்சு இவருக்கு! வேதாளம் மறுபடி வேப்ப மரத்துல ஏறிடுச்சு போல’ எனச் சலிப்புடன் நினைத்துக் கொண்டவள், அவர்களைப் பின் தொடர்ந்து காரில் ஏறினாள்.

அன்றிரவு சின்னவள் தூங்கிய பின்,

“தாமரை!” என அழைத்தான் தினகரன்.

“சொல்லுங்க தினகர் மாமா!”

“புருஷனுக்கு இன்னொரு பேரு ஏ.டி.எம் மிஷின்னு எங்காச்சும் எழுதி வச்சிருக்காங்களா?”

ஏன் இப்படி கேட்கிறான் என இவள் கேள்வியாய் பார்க்க,

“சிவனுக்குள்ள பாதி சக்தின்னு சொல்லி பெண்கள் எல்லாத்துலயும் பாதிக்குப் பாதி இட ஒதுக்கீடு கேட்டா மட்டும் பத்தாது! பணம் ஈட்டறதுலயும் உங்களுக்கு நாங்க சமம்தான்னு சம்பாதிச்சுக் காட்டனும்! கிடைச்சான் ஒரு இளிச்சவாயன்னு அவன் தலைல மொளகா அரைக்கக் கூடாது! புரிஞ்சதா?” எனக் கேட்டான் அவன்.

தினகரை முறைத்துப் பார்த்தத் தாமரை,

“மொளகா அரைக்க நீங்க அம்மியும் இல்ல! இனி வீட்ல இருந்து உங்க காசுல திங்க நான் டம்மியும் இல்ல!” எனப் பொங்கி விட்டாள்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
புரிஞ்சுப்போச்சு.. தினகர் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் ட்ரிக்ஸ் பண்றான் போல. தாமரையை டம்மி பீஸ் ஆக்காமலும், தென்றலை தனியா ஃபீல் பண்ண விடாமலும் தாமரையை டீச்சர் வேலைக்கு போக வைக்குறான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin