லக்கி வீடு - 18

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
64
143
93
நேரம் இறக்கை கட்டிக்கொண்டு நகர, காலை ஆறுமணிக்கெல்லாம் கட்டிலில் புரண்டு படுத்திருந்து காலாட்டிக்கொண்டிருந்த வர்ணி போனை காதுக்கு கொடுத்திருக்க அவளது உதட்டில் சிரிப்பு வழிந்தோடியது.

“என்னை அங்கே அனுப்பிட்டு நீ செம்ம ஜாலியா ஆட்டம் போட்டுட்டு இருக்கல்ல” என்று அவளை குற்றம் சாட்டியபடி வீடியோ கேமராவை ஆனில் வைத்து விட்டு தலை வாரிக்கொண்டிருந்தான் சாஹித்யன்.

அவன் எப்படி அழுத்தமாய் வாரியும் சீப்பு நகர்ந்ததுமே முடி கற்றையாய் நெற்றியில் வந்து விழுவதை நமுட்டு சிரிப்போடு பார்த்திருந்தவள் “ஆங், நான் ஆட்டம் போடுறேன்? அது சரி. நேத்து பபேக்கு போனது யாராம்?” என்று முறைக்க

“சொல்றேன்ல ஒரு புது பிரண்டு கூப்பிட்டான் இல்லைன்னு சொல்ல முடியலைன்னு. நான் தான் குடிக்க மாட்டேன்ல எனக்கு பபேயும் ரெஸ்டாரண்டும் ஒண்ணு தான்டி” என்றபடி ஒரு கணம் மொபைல் கேமராவை ஒரு பார்வை பார்த்து சிரித்து விட்டு அவன் வேலையை தொடர

“உங்களை நம்ப முடியாது, போலிசாமியார், என்ன பழக்கமெல்லாம் ரகசியமா வச்சிருக்கீங்களோ தெரியாது!” என்று உதட்டை சுழித்தாள் வர்ணி.

வர்ணி..

ம்ஹ்ம்

ஐ மிஸ் யூ.

அதை எதிர்பாராமல் பட்டென்று அவனையே பார்த்து விட்டவள் பிறகு “ஐ மிஸ் யூ டூ” என்றாள் லேசான சிவப்போடு.

“போட்டோவை பார்த்து சமாளிக்கலாம்னா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்துக்கல. ப்ரொபைல் பிக்சர்லயும் அடிக்கறதை போல உர்ர்னு இருக்கீங்க.பீல் பண்ண முடியலை பயம் தான் வருது! நீங்க திரும்பி வந்ததும் முதல் வேலையா நம்ம ஒரு போட்டோ ஷூட் பண்ணியாகணும்! ஒரு போட்டோ கூட இல்லைன்றது வர்ணிக்கு எவ்ளோ பெரிய அசிங்கம்” என்று அவள் தொடர்ந்து படபடக்க

“உனக்கு திறமை இல்லைன்னு சொல்லு” என்றான் அவன் அமர்த்தலாய்

“என்ன திறமை இல்லை?” அவள் யோசனையாய் கேட்க

“ஒருத்தர் போட்டோ வேணும்னா நேக்கா எடுக்க தெரியணும்” என்றான் அவன் இப்போது சிரிப்போடு

“ஆஹான். முதல்ல உங்க கிட்ட இருக்கோ?” என்று அவள் நக்கலாய் தலை சரித்து கேட்க

“ஆமாம். போட்டோ மட்டுமில்லை வீடியோவே நிறைய வச்சிருக்கேன்” என்று விட்டான் அவன்

“என்னது?” என்று அவள் கட்டிலில் எழுந்து உட்கார.

மீண்டும் மெனக்கெட்டு வந்து கேமராவை பார்த்து அவன் சிரித்து விட்டு போனதே இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று சொல்ல “ஒழுங்கா அனுப்புங்க.. என்னவெல்லாம் வச்சிருக்கீங்க? எப்படி எடுத்தீங்க?” என்று அவள் பதற

வாய் விட்டு சிரித்தவன் “லூசு. எவ்ளோ தடவை வீடியோ கால் பண்ணிருப்பேன். ஸ்கிரீன்ஷாட் எடுக்காம இருப்பேனா?” என்று கண்ணடித்து விட்டு “சரி சரி டோர்னமென்ட்டுக்கு டைம் ஆச்சு. இப்போ உன் கூட வெட்டியா பேச முடியாது. கன்டென்டை ஒவ்வொண்ணா ரிலீஸ் பண்றேன் என்று விட்டு கட் பண்ணி விட்டான்.

அடேய் ! என்று இவள் அலறி திரும்ப போன் போட்டால் அவன் எடுக்கவே இல்லை.

வீடியோ காலில் நாம் என்ன போஸில் மாட்டியிருப்போமோ? சாமியார் சிரிக்கறதே சரியில்லையே என்று அவள் நகத்தை கடித்து கொண்டிருக்க

ஒரு ஐந்து நிமிஷத்தின் பின் புகைப்படம் அவனிடம் இருந்து வந்தது. ஒரு வீடியோவில் இருந்து எடுத்த ஸ்கிரீன்ஷாட், அவசரமாய் திறந்தவளுக்கு அதிர்ச்சி! அந்த மழைநாளில் நைட்டியோடு ஆடிக்கொண்டிருந்த வீடியோ உண்மையிலேயே அவன் வசம் தான் இருந்தது போலும். அந்த ஸ்கிரீன்ஷாட் தான் அது.

சாம்பிள் 1 என்று கேப்ஷன் வேறு!

அடப்பாவி என்று அதிர்ந்து போனவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. இருப்பதிலேயே மோசமான போஸாய் பார்த்து தெரிந்து அனுப்பியிருக்கிறான். அன்னிக்கு நம்ம அவன் போனை வாங்கி முழுக்க தேடி பார்த்தோமே எப்படி மிஸ் ஆச்சு? எங்கேயோ ரகசியமாய் சேவ் பண்ணி வச்சிருப்பான் போல.. கேடி சாமியார்! என்று வர்ணி அவனை திட்டோ திட்டென்று திட்ட

“டெய்லி ஒண்ணொண்ணா ரிலீஸ் பண்றேன்” என்று வேறு சொன்னானே!

ச்சே நீ வெறும் வாய் மட்டும் தான் என்று நிரூபிச்சிட்ட வர்ணி என்று சோகமாய் கால்களை உதைத்துக்கொண்டு வேலைக்கு தயாராக சென்ற வர்ணியின் மனமோ போலிச்சாமியார், சரியான மழைவிழுங்கி மகாதேவன், கேடி கரடி என்றெல்லாம் வறுத்துக்கொண்டிருந்தது.

வாடா.. நீ திரும்ப இங்கே தானே வந்தாகணும்!

அன்றைக்கு மாலுக்கு போனவளுக்கு மனம் முழுக்க அவனை எப்படி பழிவாங்கலாம். ஒரு வீடியோ எடுத்துட்டா நீங்க திறமைசாலி ஆகிடுவீங்களா? யாருகிட்ட? பதிலுக்கு எதை எப்படி உன்கிட்ட இருந்து எடுக்கிறேன்னு பாரு என்று சவால் தான் மனதில் வந்தது.

“வர்ணிக்கா, டார்லிங் காபேல ஒருத்தன் கை வைக்கிறான் நீங்க பாட்டுக்கு சிரிச்சிட்டு இருக்கீங்களே.. லக்கிம்மா கேளுங்க.” சிட்டு வழக்கம் போல தொண தொணத்து கொண்டிருக்க


“யாரை கேட்கணும்?” என்று கேட்டார் லக்கி

“நவீன்!”

எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவர் “அவனை வரச்சொல்லு நாலு அடி போடுறேன்” என்று அனிச்சையாய் சொல்ல

சாஹித்யனுக்கு அம்மான்னு அடிக்கடி நிரூபிக்கிறாங்க என்று நினைத்துக்கொண்ட வர்ணிக்கு சிரிப்பு வந்து விட்டது.

“நீங்கல்லாம் ஒரு முதலாளியா?” சிட்டு இவள் சிரித்ததை பார்த்து கேட்க

என்னடி உன் பிரச்சனை? என்று திரும்பி அவளை பார்த்தாள் வர்ணி

“சிட்டுக்குருவி ரோஸ்ட் மெனுவுல இல்லையான்னு கேட்கிறான். நீங்க சிரிக்கிறீங்க”

“அவன் எங்கே இங்கே வந்தான்?”

“க்ரூப்ல கேட்டான்!”

“அடிங்க. வேலை நேரத்துல க்ரூப்ல என்னடி வேலை? கொன்னுடுவேன். இல்லை கும்ஸ் என்னை கொன்னுடுவான்! என்ன என்ன இருக்கு என்ன இல்லைன்னு நேற்று ஸ்டாக் எடுத்ததுல வாங்க வேண்டியதை மட்டும் தனி லிஸ்ட்ல போட்டு கொடு. வேலை நேரம் அங்கே இங்கே அசைஞ்சா அவ்வளவு தான்” என்று அவளை மிரட்டி வேலை கொடுத்து விட்டு “லக்கிம்மா இவளை பார்த்துக்கோங்க!” என்று அவரையும் காவலாய் வைத்து விட்டு மெல்ல வர்ணி நகர

நீங்க மட்டும் போறீங்க? என்று முறையிட்டாள் சிட்டு.

நான் முதலாளிடி. நீ வேலையை பாரு! என்று நமுட்டு சிரிப்போடு சொல்லிக்கொண்டே ஜிம்மை நோக்கி உல்லாசமாய் நடை போட்டாள் வர்ணி.

அன்று மாலை வீட்டில் குளித்து உடைமாற்றி சமைக்க வேண்டியதை எல்லாம் எடுத்து வெளியே வைத்திருந்தவள் ஹாலில் நடை பழகிக்கொண்டிருந்த லக்கியிடம் போனாள்.

லக்கி மேடம் என்று அவரை வம்பிழுக்க

அவரோ அப்பாவியாய் நிமிர்ந்து பார்த்து மலர்ந்து சிரித்தார்

“நித்யா அக்கா எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு வருவோமா?”

அவர் குழப்பமாய் பார்க்க

“நித்யாக்கா லக்கிம்மா .உங்களுக்கு பாயசம் எல்லாம் கொடுப்பங்களே,முன் வீட்ல இருக்காங்க” என்றாள் வர்ணி.

பதிலுக்கு நித்யா என்றார் அவர்.

புரிந்து சொன்னாரா அவள் சொல்வதை திருப்பி சொல்கிறாரா என்று தெரியவில்லை வர்ணிக்கு.

“அவங்க கர்ப்பமா இருக்காங்க. பத்து வருஷத்துக்கு அப்புறம்” என்று அவள் நூறாவது தடவையை சொல்ல

“அப்படியா என்று சந்தோஷமாய் கேட்டு ரொம்ப கவனமா இருக்கணும்” என்றார் அவரும் நூறாவது தடவையாய்.

“ஆமாம். போய் எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு சாப்பாடு கொடுப்போம் “ என்றபடி இருவரும் நித்யாவின் வீட்டுக்கு செல்ல கதவை திறந்த பிரதீப்பை எதிர்பார்க்கவே இல்லை வர்ணி.

“அத்தான் சார் நீங்க இங்கே என்ன பண்றீங்க!” என்று அவள் ஆச்சர்யமாய் கேட்க குறும்பு சிரிப்போடு “உள்ளே வா தொல்லை !” என்றபடி பிரதீப் நந்தனிடம் போய்விட்டான்.

இவளது குரலை கேட்டதும் சிரித்துக்கொண்டே உள்ளிருந்து வந்தாள் பூஜா.

ஏய் நீ என்னடி பண்ற இங்கே? வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? என்று வர்ணி உண்மையிலேயே கோபமாய் முறைக்க

“நித்யாக்காவை பார்க்க வந்தேன். ஏன் நான் வரக்கூடாதா?” என்று இமையை ஏற்றி இறக்கினாள் அவள்.

“ரெண்டு பேரும் பூனை போல சைலன்ட்டா உள்ளே வந்து ஒளிச்சுக்கிட்டாங்கடி. கேட்டா உனக்கு சர்ப்ரைஸ் பண்ண போறோம்னு சொன்னாங்க” என்று சிரித்துக்கொண்டே நித்யா சொல்ல பூஜாவை முறைத்தாள் வர்ணி.

இவள் வருவாள் என்று தெரிந்திருந்தால் ஏதாவது சமையல் செய்து கொடுத்து விட்டிருப்பேன்ல என்று நொந்து கொண்டவள் இப்போது பூஜா லக்கியிடம் ஓடி செல்வதை கவனித்தாள்.

லக்கி பூஜாவை டார்லிங் என்று அழைக்கவில்லை ஆனாலும் இவள் நமக்கு நன்றாய் தெரிந்தவள் என்பது போன்ற முகபாவத்தோடு சின்ன புன்னகையோடு நிற்க பூஜா தான் அவரை அணைத்து தன் வயிற்றில் அவரது கையை வைத்து செய்தி சொன்னாள்.

ஒரு செக்கண்ட் அவரது கண்ணில் மெல்லிய நீர்ப்படலாம் தோன்ற அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட பூஜாவுக்கும் கண்ணில் நீர்.

லக்கிம்மா எனக்கு நீங்க இப்படியெல்லாம் செய்யவே இல்லை என்று நித்யா செல்லமாய் கோபித்து அவரருகில் போய் தானும் கையை வயிற்றில் வைக்க அவளுக்கும் முத்தம் வைத்தார் அவர்.

நினைவுகள் இல்லாமல் போனால் என்ன? பெண்மையின் உணர்வுகள் தான் உயிரிலே கலந்திருக்குமே..

பார்த்துக்கொண்டிருந்த வர்ணியின் கண்களும் பனித்தன. ஏனோ சாஹித்யன் அவள் மனதில் வந்து போனான்.

பூஜா அவளுக்கும் லக்கிக்கும் வாங்கி வந்திருந்த உடைகளை கொடுக்க ஏண்டி செலவு பண்ற என்று கடித்தாலும் அதை போட்டு பார்த்து ரொம்ப பிடித்திருக்க எல்லாம் மறந்து மீண்டும் குதூகலமாகி விட்டாள்.

சில நிமிஷங்களில் வடை சாப்பிட்டுக்கொண்டே வந்த பிரதீப் பூஜாவின் காதில் ஏதோ ரகசியம் சொல்வதை கவனித்து நமுட்டு சிரிப்போடு ஹாலில் கிடந்த ரூபிக் கியூபை தூக்கி போட்டு பிடித்துக்கொண்டிருந்தவள் பூஜா விறுவிறுவென வந்து அவள் போட்டிருந்த ஷர்ட்டை கழுத்தில் பிடித்து இழுத்து முதுகுப்புறமாய் சைஸை பார்த்து விட்டு அடிப்பாவி என்று விழி விரிக்க மாட்டிக்கொண்டவளாய் சிவந்து போனாள் வர்ணி.

செத்தோம்! சாவடிக்க போகிறாள். அத்தான்!!! என்று அவள் பிரதீப்பை முறைக்க சிரித்துக்கொண்டே நீ நடத்து நடத்து என்று சைகை செய்தபடி நந்தனிடம் போய்விட்டான் அவன்

அங்கே என்ன முறைக்கற இங்க பார் என்று அவளை தன்புறம் திருப்பிய பூஜா “ஏய் என்னடி அவ்ளோ தூரம் ஆயிடுச்சா?” என்று கொஞ்சம் அதிர்வாய் தான் கேட்டாள்

 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 18
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
64
143
93
“என்ன அவ்ளோ தூரம் ஆயிடுச்சு?” வர்ணிக்கு புரியவில்லை.

“நடிக்காதடி. டீ-ஷர்ட்டை போட்டுக்கற அளவுக்கு ஆயிட்டா?”

“ஒழுங்கா புரியற மாதிரி பேசு” என்று வர்ணி மீண்டும் ரூபிக் கியூப்போடு விளையாட

பக்கத்தில் இருந்த நித்யா “என்ன டி-ஷர்ட்?” என்று கேட்டு விட்டு அப்போ தான் பல்ப் எரிய அடிப்பாவி என்று அவளும் வாயில் கைவைத்து விட்டாள். “பெரிய டிஷர்ட்டை போட்டுட்டு சுத்துறான்னு நினைச்சேன், இதை கனெக்ட் பண்ணவே இல்லை பாரேன். எவ்ளோ அப்பாவியா இருந்திருக்கேன்” என்று அவள் பாட்டுக்கு அதிசயித்து விட்டு “ஏன்டி என் வீட்டுக்காரர் ஷர்ட்டை நானே அவ்ளோவா போட்டது இல்லைடி, அப்பாவி மாதிரி வருவானே சாஹித்யன்? ரெண்டு பெரும் கேடி பயபுள்ளைங்க! “ என்று அதிசயித்தாள்

பூஜா அவளையே பார்த்துக்கொண்டிருந்தது மனதை கொத்த “பெரிய சைஸ் டிஷர்ட் போட்டா சாஹித்யனோடதுன்னு நீங்க எப்படி நினைக்கலாம்? நானா வாங்கிக்க மாட்டேனா?” என்று தப்பிக்க முயன்றாள் வர்ணி

“பிரதீப் கன்பார்மா இது யாரோடதுன்னு சொல்லிட்டான், நீ எனக்கு வடை சுடாத, சாஹி அண்ணாவை அப்பாவின்னு நினைச்சேன். என்ன பண்ணிட்டிருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று பூஜா கேட்க

“அப்படி என்ன கேடித்தனம் பண்ணிட்டோம்? சாஹி வெளியூர் போய்ட்டான்னு சொன்னேன்ல.. ஒரு கணக்குக்காக ஜிம்ல இருந்த அவனோட டீ-ஷர்ட்டை நான்தான் எடுத்துட்டு வந்தேன். அவனுக்கு ஒண்ணும் தெரியாது. தேவையில்லாம அவனை இழுக்காதே.” என்றாள் வர்ணி.

“ஓஹோ. அவங்களை சொன்னா உங்களுக்கு கோபம் வேற வருதா?” என்று முறைத்தவள் பிறகு நித்யாவிடம் திரும்பி “நந்தன் அண்ணா கிட்ட கேளுங்கக்கா சாஹித்யன் திரும்ப வந்ததும் ப்ரதீப்பையும் அனுப்பி பேச சொல்லலாம் என்று பூஜா சொல்ல

“அவனே வந்ததும் உங்க கிட்ட வந்து பேசறேன்னு சொல்லிட்டு தான் போனான்” என்று வர்ணி சொல்ல

ஓஹோ என்றாள் பூஜா மீண்டும். நித்யாவும் பூஜாவும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் வேறு பார்த்துக்கொள்ள

வெறுத்துப்போனவள் “அவனுக்கு ஒரு ஷாக் கொடுக்க வேண்டியிருந்தது. எடுக்க வேற எதுவும் ஜிம்ல இல்லை. அதனால ஷாக் கொடுக்க ரெண்டு டிஷர்ட்டை சுட்டுட்டு வந்தேன். அப்புறம் அது ரொம்ப பெருசா ப்ரீயா கம்பார்ட்டபிளா இருந்துச்சா,,, சரி.. எடுத்ததும் எடுத்துட்டோம்னு நானே வச்சுக்க முடிவுபண்ணிட்டேன். இதை போய் பெரிய விஷயமா ரியாக்ட் பண்றீங்க?” என்று அவள் பொங்க..

இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவும் வெறுத்துப்போனவள் “டின்னர் வாங்கிட்டு வர்றேன்” என்று வெளியே போக முனைந்த நந்தனை நிறுத்தி “ஒண்ணும் வேணாம் நானே பண்றேன்” என்று விட்டு அவர்கள் மறுக்க கூட இடம் தராமல் ஓடிவிட்டாள்.

எப்படியும் வட்ட மேசை மாநாடு அவளைப்பற்றி நடக்கத்தான் போகிறது. ஒரு டிஷர்ட்டை எடுத்தது தப்பா? வெறுமனே ஒரு காட்டன் துணிக்கு போய் இந்தளவு பில்டப்! என்று பொருமிக்கொண்டே சாஹி வெட்டி வைத்த காய்கறி, இறைச்சியில் தேவையானவற்றை வெளியே எடுத்து வைத்து சப்பாத்தியையும் துண்டுகளாய் வெட்டி முட்டை சேர்த்து நிமிஷத்தில் சிக்கன் கொத்து தயார் செய்து விட்டவள் அப்படியே அந்த பெரிய சட்டியை துணி வைத்து தூக்கிக்கொண்டு நித்யா வீட்டுக்கு போனாள்.

“என்னடி அதுக்குள்ளே வந்துட்ட.. நான் உனக்கு ஹெல்ப் பண்ண வர எந்திரிச்சேன்” என்று பூஜா அவளையும் பாத்திரத்தையும் பார்த்து விழிக்க

“வர்ணியோட கப்பாசிட்டி உனக்கு தெரியாது? சும்மா என்னை குறை சொல்ல மட்டும் வாங்க. ஒரு டி ஷர்ட்டை போட்டோமாம்..அதுக்கு விசாரணை..ஏன் நான் உன் டிஷர்ட் எல்லாம் போட்டதே இல்லையா?” என்று அவளை முறைத்துக்கொண்டு வர்ணி கிச்சனுக்கு போக நான் சொன்னேன்ல என்று நித்யாவின் ரகசியக்குரல் கேட்டது. வெறுத்து போனாள் வர்ணி.

“காரமா சாப்பிடணும் போலவே இருந்தது. கொத்து பரோட்டா போலவே ரொம்ப நல்லா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே நித்யா சாப்பிட, பூஜாவும் ருசித்து சாப்பிட ஆரம்பித்ததை சந்தோஷமாய் பார்த்த வர்ணி எல்லாப்பெருமையும் மீல் பிரெப் பண்ணிய புண்ணியவானுக்கே என்று சிரிப்போடு எண்ணிக்கொண்டாள். அதை வெளியே சொல்லி மீண்டும் ஒரு வட்ட மேசை மாநாட்டை கூட்ட அவள் என்ன லூசா?

பிரதீப், நந்தன், லக்கிக்கும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு தந்தவள் நித்யாவின் அருகில் அமர்ந்தாள்.

“வர்ணி. நீ போனதும் லக்கிம்மா ப்ரஸ்க்கு போகணும்னு கேட்கிறாங்கடி. என்ன ப்ரஸ்?” என்று கேட்டாள் பூஜா

என்னது? அத்தனை குதூகலமும் வடிந்து விட்டது அவளுக்கு. மறந்திருப்பார் என்று நினைத்தாளே.

“ஆமாம். ஒரு மாதிரி வேகமா கதவை திறந்தாங்க. அப்புறம் திறக்கலைன்னதும் என்கிட்டே சொல்லிட்டு ஒரு மாதிரி சோகமா பார்த்துட்டு இருந்தாங்க. நான் தான் பாட்டு போட்டு விட்டேன்” என்று நித்யாவும் சொல்ல

இது ஒரு நாள் வந்து போகும் பாண்டஸி இல்லை என்று வர்ணிக்குள் அந்த நேரம் அலாரம் அடித்தது. இனிமேல் இவரை கண்ணில் எண்ணெய் விட்டு பார்க்க வேண்டும். என்னை நம்பி ஒருவன் அம்மாவை விட்டு விட்டு நிம்மதியாய் இருக்கிறான், அவன் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வானோ தெரியாது.

கூட இருப்பது தன்னுடைய சகோதரிகளே என்றாலும் தன் மனதில் இருப்பதை பகிர அவளுக்கு மனது வரவில்லை.

“அதொண்ணும் இல்லை, இப்போல்லாம் அடிக்கடி ஒவ்வொரு பேன்டஸிக்குள்ள போயிடுறாங்க” என்று சிரித்து சமாளித்து விட்டாள்.

பூஜா சற்று நேரத்தில் அங்கிருந்தே கிளம்பி விட, லக்கியை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு செல்ல கதவை திறந்தாள் வர்ணி. ப்ரெஸுக்கு போறோமா என்று அவர் கேட்டபடியே உற்சாகமாய் வர வர்ணிக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குற்றவுணர்வு உருவானது.

“பிரெஸ்ஸுக்கு நாளைக்கு தான் போகலாம் லக்கிம்மா இந்நேரம் பூட்டி இருப்பாங்க” என்று சொன்னவள் சிரித்தபடி “வர வர ரொம்ப சேட்டை பண்றீங்க மம்மி” என்று அவளின் கன்னம் கிள்ளியவள் அவரின் மனதுக்குள் எப்படி உணர்வார், வருந்துவாரா? வர்ணி அவரை அடைத்து வைத்திருப்பது போல உணர்வாரா? இல்லை.. ஏமாற்றத்தின் எதிரொலிப்பு அவருக்குள் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசித்து கொண்டே இருந்தாள்

இதே லக்கிம்மா இப்போது நலமாய் இருந்தால் நம்மால் நீ அங்கே போகாதே இங்கே போகாதே என்று கட்டுப்படுத்த முடியுமா? அவருக்கு வியாதி வந்ததும் மொத்த கட்டுப்பாட்டையும் நாம் எடுத்துக்கொள்கிறோமா? அது நியாயமா? என்றெல்லாம் மனம் கேள்வி எழுப்ப அறிவு அவளின் தலையில் தட்டியது. நமக்கு சாஹி முக்கியம். அப்படியே இதை பற்றி சிந்திப்பதையே தடுத்து விட்டவள் அன்றிரவு வழக்கத்தை விடவும் வேறு வேறு விஷயங்களை அவருக்கு காட்டி சந்தோஷப்பட வைத்துக்கொண்டிருந்தாள், ஏதோ ஒரு அநியாயத்துக்கு நியாயம் செய்வதை போல.

அடுத்தடுத்த நாட்களிலும் அவரது பிரஸ்ஸுக்கு போகவேண்டும் என்ற ஆசை அடிக்கடி மாலை வேளைகளில் வந்து கொண்டே இருந்தது, சிட்டுவை வைத்து வேறு விஷயங்களில் அவரை ஈடு படுத்தி, இரண்டு தடவை வெளியே போக முயன்றவரை தடுத்து என்று மூன்று நாட்கள் அவரை மாலிலேயே அடக்கி வைத்துக்கொண்டார்கள்.

ஆனால் அதற்கடுத்து வந்த நாட்களில் அவரே அதை மறந்து விட்டிருக்க வேண்டும் போலும். இவர்களும் யாரும் பிரஸ் என்ற வார்த்தையையே உச்சரிக்கத்தகாததாய் மறந்து விட்டிருக்க அவருக்கும் அது நினைவு வரவில்லை.

அதில் வர்ணி நிம்மதியாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மனதில் இருந்த முள் பெரிதாகிக்கொண்டே வந்தது.

காரணம் அவளோடு இப்போது கூட இருப்பது அவள் பார்த்த உற்சாகமும் குழந்தை தனமுமான லக்கியே அல்ல. என்ன தான் சிட்டு அவரை வம்பிழுத்து சேர்த்துக்கொள்ள முனைந்தாலும் ஒரு இயந்திரம் போல இணைந்து கொள்வார். முன்பு போல கஸ்டமர்களை அதட்டுவதோ ஐஸ்கிரீம் கடையில் குமாரோடு சேர்த்து லூட்டி அடிப்பதோ எதுவும் இல்லை. எதை தேடுகிறோம், எதனால் நாம் வருத்தப்படுகிறோம் என்று புரியாமல் சதா ஒரு யோசனையோடு அவரது காய் காபிக் கப்புகளை அடுக்கிக்கொண்டிருக்கும்.

வர்ணிக்கு அந்த காட்சியே மனதை பிசையும்.

என்ன செய்ய?

போன் காலில் மறைமுகமாய் சாஹித்யனிடம் விசாரித்ததில் அவனுக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் புரிந்தது அவளுக்கு. ஆக மொத்தம் அவள் முடியை பிடித்துக்கொள்ளும் நிலைமைக்கு போய்விட்டாள்.

சாஹித்யனிடம் சொல்லி அவனை டென்சன் பண்ணுமளவுக்கு இந்த பிரச்சனை பெரிதென்று அவளுக்கு இன்னும் தோன்றவில்லை.

கஸ்டமர்களுக்கு அடிக்கடி லக்கியை வம்பிழுக்க டார்லிங்குக்கு வரும் ப. மு. க உறுப்பினர்களுக்குமே லக்கியின் மாற்றம் தெரிகிறது. என்ன மானேஜர் அமைதியா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு அவருக்கு உடம்பு சரியில்லையா என்று வர்னியிடம் கேட்டு விட்டு போகிறார்கள்.

இருந்திருந்து சாமியார் ஊருக்கு போன பின் தான் இந்த பிரச்சனை வரவேண்டுமா? அடேய் பிரபஞ்சமே என்று நொந்து போனவள் அவன் என்னை நம்பி லக்கிம்மாவை விட்டு விட்டு போனான் அது வரை எப்படியோ சமாளித்து விடுவோம் அவன் வந்தபிறகு ஆற அமர உட்கார வைத்து விஷயத்தை சொல்லி ஐடியா கேட்போம் என்று எண்ணிக்கொண்டாள்.

இரண்டு மூன்று நாட்கள் வர்ணியின் குற்ற உணர்வை கழுத்துவரை கொண்டு வந்து விட்டு ஆமை போல நகர வெள்ளிக்கிழமை கடையை பூட்டும் தருணம் லக்கியை காணோம்.

பதறிப்போய் ராக்கியை எடுக்க ஓடினால், சிட்டு “அக்கா நான் வாசலிலே தான் நின்றேன். பின் பக்க கதவும் பூட்டியிருக்கிறது. வெளியே போக வாய்ப்பே இல்லை உள்ளே தேடுவோம்” என்று நிறுத்த வர்ணி திரும்பி உள்ளே ஓடலானாள்.

சிட்டு வாசலில் பார்வதி ஆன்ட்டியை நிறுத்தி விட்டு உள்ளே எதிர்ப்பக்கமாய் தேட அன்றைக்கு அவரை கண்டுபிடித்த இடத்துக்கே முதலாவதாக ஓடிய வர்ணிக்கு அப்பாடா என்று இருந்தது. அவர் அன்றைக்கு போல சுவரெல்லாம் தாண்டி குதிக்கவில்லை.

அரைச்சுவரிலேயே நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்தார்.

அவரது உடல்மொழி தான் அவளை கண்கலங்க வைத்து விட்டது. எதிலேயோ தோற்றுப்போனவர் போல தோய்ந்து போன தோள்களும் வெறித்த விழிகளுமாய் ஏனோ அன்றைக்கு மழைநாளில் சாஹித்யனின் வார்த்தைகள் வழி அவள் உருவகமாக பார்த்த பழைய நிஜ லக்கியை நேரில் பார்க்கிறோம் என்று அவளுக்கு தோன்றியது.

ஓடிப்போய் அவரை தோளோடு அணைத்து கொண்டு என்னாச்சு லக்கிம்மா என்று கேட்டாள்

அவருக்கும் தெரியாதே..

ஒண்ணுமில்லையே என்று சோகையாய் சிரித்துக்கொண்டு வீட்டுக்கு போறோமா என்றார்.

இல்லை லக்கிம்மா. பிரஸ்ஸுக்கு போறோம் என்றாள் அழுத்தமாய் மனமும் நாவும் ஒன்றாய் ஒத்திசைய. ஏனோ கண்கள் பணித்து விட்டிருந்தன.

பிரஸ் ? என்று குழப்பமாய் மீண்டும் கேட்டவருக்கு இன்னும் அந்த நினைவுத்தொடர் மீதமிருந்தாலும் போலும். உற்சாகமாய் ப்ரஸ்ஸுக்கா என்று கேட்டு சீக்கிரம் வா அம்மா ஆறுமணிக்கு வீட்டுக்கு திரும்பி வரலைன்னா திட்டுவாங்க என்றபடி அவளை முந்தி உற்சாகமாய் நடக்க ஆரம்பிக்க

அது சரி” என்று தலையசைத்து சிரித்துக்கொண்டே அவரை தொடர்ந்தாள் வர்ணி.
 
Aug 3, 2024
84
45
43
ஏன் இவளே நினைவுபடுத்தி கூட்டிட்டு போறா
சாஹி வர்ற வரை பொறுத்திருக்க கூடாதா
 
  • Love
Reactions: Ush

Chitra ganesan

Active member
Aug 3, 2024
94
-7
43
லக்கியை நினைச்சா பாவமா இருந்தாலும்,படிக்கிறப்ப திக்...திக்..ன்னு இருக்கு.அவரை பத்திரமா பார்த்துக்கமால் மிஸ் பண்ணிருவாளோன்னு பதட்ட பயமாய் இருக்கு🙄