Jagam Nee--EPI 23

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
938
-1,732
93
அத்தியாயம் 23



நீ என் குட்டி டானு

போலாமா ஹனிமூனு!!!



ஒரு காலத்தில் பஞ்ச பரதேசியாய் வந்து இறங்கிய சென்னை விமான நிலையத்தில், இப்பொழுது தன்னுடைய பஞ்சு மிட்டாயுடன் வந்து இறங்கினான் சரவணப்பாண்டியன். நெஞ்சம் சந்தோஷத்தில் விம்மித் தணிந்தது. யாரால் அடித்து விரட்டப்பட்டானோ, அவரின் மகளே அவன் கை அணைத்தபடி வர, கண்களில் லேசாய் கண்ணீர் துளிர்த்தது. ஷாமினியின் கரத்தை அழுத்தமாய் இறுக்கிக் கொண்டான். மேடம், அவனது மேடம்! அவனது கை வளைவில்! துன்பத்தையும், துக்கத்தையும் மட்டுமே சுமந்து திரிந்திருந்தவனுக்கு இந்த இன்பத்தை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தவித்தான்.

லக்கேஜூக்கு காத்திருந்த சமயத்தில், அவனது தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட ஷாமினி,

“என்னவாம் என் பாண்டியாவுக்கு?” எனக் கேட்டாள்.

“இது கனவா நனவான்னு தெரில மேடம்!”

“எது?”

“நீங்க! என் கிளி! என் பக்கத்துல! எனக்கே எனக்கா!” எனத் துண்டுத் துண்டாகப் பேசியவனை வாஞ்சையாகப் பார்த்தாள் இவள்.

“கொஞ்சம் குனி”

சொன்னதை தட்டாமல் செய்தான் இவன்.

ஸ்டைலாக முறுக்கி விட்டிருந்த மீசையைப் பிடித்து வலிக்க இழுத்தாள் பெண்.

“ஆ!!!!! மேடம்! விடுங்க! வலிக்குது!”

தங்களைச் சுற்றி ஆட்கள் இருக்க, மெல்லியக் குரலில் கத்தியவனைப் புன்னகையுடன் பார்த்தாள் இவள்.

“இப்போ நம்ப முடியுதா பாண்டிய மன்னா? இந்தக் கிளிய நீ போலந்துல இருந்து லவட்டிட்டு வந்துட்டன்னு இப்போ நம்ப முடியுதா?” எனக் கேட்க, வலியை மீறி முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.

பார்வை காதலாய் அவள் மேல் படிந்தது.

“பார்க்கறத பாரு! பூனை புண்ணாக்க பார்க்கற மாதிரி”

“எதே!!! மேடம், இது லவ் லுக்! பூனை கருவாட பார்க்கற மாதிரின்னுதான் சொல்லனும்!” என அவன் சிலிர்த்துக் கொள்ள,

“உன் இஷ்டத்துக்கெல்லாம் என்னால சொல்ல முடியாது! ரைமிங்கா எது என் வாயில வருதோ அதைதான் சொல்ல முடியும்” என இவள் சிரித்து வைத்தாள்.

அவளது சிரிப்பு இவனையும் தொற்றிக் கொள்ள, மனம் சாந்தமாகிப் போனது இவனுக்கு.

“வெல்கம் டூ இந்தியா மேடம்”

“சென்னைல கால் வச்சு இவ்ளோ நேரமாச்சு! இப்போத்தான் வரவேற்கறியா என்னை”

“நீங்க பக்கத்துல இருந்தா எல்லாமே மறந்திடுது மேடம்! ஃபுல் போக்கஸும் உங்க மேலத்தான்”

“ஏய்!! எப்புட்றா!!! இப்படிலாம் பேசி பேசியே என்னை மயக்கி வைக்கற! ஏற்கனவே பத்து வருஷமா மயங்கித்தான் நிக்கறேன்! இன்னும் மயக்கின, அடுத்த பத்து மாசத்துல நீ பாண்டியப்பாவ ஆகிடுவ, நான் கிளியம்மாவா ஆகிடுவேன்! பார்த்துக்கோ!”

“ஒம்பது மாசத்துல முடியாதா மேடம்?”

“செருப்பு பிஞ்சிடும்! ராஸ்கல்!” என்றவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிரித்து முடித்தவள், அவனை நெருங்கி நின்று தோளில் சாய்ந்து கொண்டாள். தன் காதலாலும், தன் அப்பாவின் வெறித்தனத்தாலும் என்னவெல்லாம் துன்பங்கள் அனுபவித்திருந்தான் இவன்! வெறொருவராய் இருந்தால், இவளை மறுபடி திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். இவள் இருந்த திசைக்கே பெரிய கும்பிடாய் போட்டு விட்டுப் போயிருந்திருப்பார்கள். ஆனால் இவனோ, பத்து வருடங்கள் காத்திருந்து தேடியல்லவா வந்திருக்கிறான்.

என்னதான் இவள் பணம் கொடுத்திருந்தாலும், இவள் காட்டி இருந்த அக்கறை, பரிவு, அதிகாரம், கண்டிப்பு, பாசம், தவிப்பு அல்லவா வருடங்கள் கடந்தாலும் அவனை அவளிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தது! அவன் மீது அவள் கொண்ட காதல் அல்லவா அவனுக்கு எல்லாவற்றையும் விட பெரிதாய் தோன்றி இந்தளவுக்கு முன்னேற வைத்திருக்கிறது!

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என பாரதிதாசன் சொன்னதை எக்ஸ்ட்ரா தமிழ் வகுப்பில் தூங்கி வழிந்து கேட்டதை நினைத்துக் கொண்டாள் ஷாமினி.

கடைக்கண் பார்வையைக் கூட தந்தைக்குப் பயந்து இவள் காட்டிக் கொண்டது இல்லையே! அப்படி இருந்தும் காதல் கொண்டாள் என்பதை அறிந்து கொண்டதிலேயே அதை பற்றுகோலாய் பற்றிக் கொண்டு, சிறகொடித்துப் போட்டாலும் மீண்டும் பீனீக்சாய் உயிர்த்தெழுந்து இவள் காதலை விட பன்மடங்கு காதலை இவள் மேல் கொட்டி, இவளுக்குள் சரணடைந்திருந்த சரவணனை காதல் மேலிடப் பார்த்தாள் ஷாமினி.

“பாண்டியா”

“ஹ்ம்ம் மேடம்”

“லவ் யூடா!”

அவன் முகம் அப்படியே பூவாய் மலர்ந்து போனது! அதில் மெலிதாய் ஒரு வெக்கம்! தலை முடியை ஒரு பக்கம் கையால் கோதி கொண்டவன், ஓரக்கண்ணால் இவளைப் பார்த்தான்.

“ஷப்பா டேய்! என்ன வெக்கம்டா சாமி! ஒவ்வொரு தடவை லவ் யூ சொல்லறப்பவும் எப்படிடா, இதே ரியாக்‌ஷன் குடுக்கற! மிடில” எனக் கலாய்த்தாலும் உன்மத்தம் ஆகிப் போனது அவன் மேல்.

“நீயும் சொல்லு பாண்டியா”

அவள் காதருகே குனிந்தவன், மெல்லிய கிசுகிசுப்பானக் குரலில்,

“ஐ லவ் யூங்க மேடம்!” என மையலாய் சொன்னான்.

“சரி விடு! ஒன்பதும் வேணா பத்தும் வேணா! நடுவுல நின்னுப்போம்! ஒன்பதரை மாசத்துல பாண்டிய மகராஜா கையில பேம்பர்சை குடுத்துடுலாம்!” எனச் சொல்லிக் கண் சிமிட்டி சிரித்தாள் ஷாமினி.

அதற்குள் அவர்கள் உடமைகள் வர, எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். ஓடி வந்த ஓர் உருவம், ஷாமினியை இறுக்கி அணைத்துக் கொண்டது!

அவளை ஆசையாய் கட்டிக் கொண்டாள் ஷாமினி.

ஷாமினியின் கையில் பொக்கேவைத் திணித்த செம்பா,

“ரோட்டுல மேயுது பன்னி

வெல்கம் டூ சென்னை மை அண்ணி” என்றாள்.

“அடேய்! இது மொக்கை கவிதை ஃபேமிலியா ராசா!!” எனச் சரவணனைப் பார்த்து சொன்னவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மூவரும் புன்னகையுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். வெளியே காருடன் ட்ரைவர் காத்திருக்க, லக்கேஜ்களை அவரே தூக்கிக் காரில் வைத்தார். தனது விலை உயர்ந்த காரின் கதவைத் தன் மகராணிக்கு பவ்யமாய் திறந்து விட்டான் சரவணப்பாண்டியன். தன்னவளை மீண்டும் அரியணையில் ஏற்றி அமர வைத்து விட்டதை எண்ணி அவன் முகம் பூரிப்பில் மின்னியது!

பெண்கள் இருவரும் பின்னே அமர்ந்து கொள்ள இவன் ட்ரைவரை அனுப்பி விட்டு, அவர்களுக்குச் சாரதியானான். இது ஷாமினியின் முதல் இந்திய பயணம்! வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு இது என்ன, அது என்னவென விளக்கம் கொடுத்துக் கொண்டே வந்தாள் செம்பா.

வாக்கியத்துக்கு ஓர் அண்ணி சொல்லித் தனது உரிமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தவளின் கரத்தைப் பற்றி அவளது புறங்கையில் முத்தமிட்டாள் ஷாமினி. சின்னவள் திகைத்துப் பார்க்க,

“லவ் யூடா செம்பா குட்டி” எனப் புன்னகைத்தாள் ஷாமினி.

நெகிழ்ந்து போனாள் செம்பா! அண்ணி என்பவள் அம்மாவுக்குச் சமம் அல்லவா! ஷாமினி இவளிடம் நன்றாகப் பேசினாலும், அவர்களின் சந்தோஷ வாழ்வுக்கு எங்கே தன்னை ஒரு நெருஞ்சி முள்ளாய் எண்ணி விடுவாளோ எனும் பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் இருந்தது சின்னவளுக்கு! தாய் பாசமோ, அக்கா பாசமோ நிலைக்கவில்லை! அண்ணாவோ தூரமாகவே இருந்து விட்டான்! இனி வரும் காலங்களில் அண்ணிதானே தனக்கெல்லாம்! அவளோடு எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து விட வேண்டும் என எண்ணி இருந்தவளுக்கு, அட்ஜெஸ்ட்மெண்ட் தேவையில்லை அன்பு மட்டுமே போதும் என்பதை அந்த ஐ லவ் யூ உரைத்து விட, நெருங்கி அமர்ந்து ஷாமினியின் தோள் சாய்ந்து கொண்டாள் பெண்.

“லவ் யூ அண்ணி! லவ் யூ சோ மச்!” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிந்தது.

தங்கையின் கன்னம் பற்றி கண்ணீர் துடைத்து சமாதானம் செய்து கொண்டிருந்த தன் கிளியை ரியர் வியூ கண்ணாடி வழிப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நெஞ்சம் நேசத்தில் விம்மியது!

வீட்டை நெருங்கியதும்,

“அண்ணி! அண்ணி! அங்க பாருங்க! அதுதான் அண்ணா உங்களுக்கு கட்டுன குட்டி தாஜ்மஹால்” என ஆர்ப்பரித்தாள் செம்பா.

விழி விரிய அக்கட்டிடத்தைப் பார்த்தாள் இவள். குட்டியாய் ஒரு வெள்ளை மாளிகை! வெளி கேட் அருகே, ‘கிளி கூடு’ என பொன் எழுத்தில் சைன் போர்ட் தொங்கியது!

அதைப் பார்த்ததும் இவள் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டது!

‘என்ன தவம் செய்தேன் நான், இங்கிவனை என்னவனாக்கிக் கொள்ள!!’ என நினைத்து மறுகி நின்றாள்.

மென்மையாய் அவள் கை பற்றி வலது பாதம் எடுத்து வைக்கச் சொல்லி உள்ளே அழைத்துப் போனான் சரவணப்பாண்டியன். வீடு எந்த வித உள் அலங்காரமோ, தளவாடப் பொருட்களோ இன்றி இவளுக்காகக் காத்திருந்தது!

கீழே, மேலே என எல்லா அறைகளையும் சுற்றிக் காட்டினான் சரவணப்பாண்டியன். சின்னவளோ அவர்களுக்குத் தனிமை கொடுத்து ஹாலில் தரையில் அமர்ந்து கொண்டாள். மேல் மாடியில் தங்களது அறை பால்கனியில் ஷாமினியைக் கொண்டு வந்து நிறுத்தியவன்,

“வீடு கட்டிட்டேன் மேடம்! அதை இல்லமாக்க வேண்டியது உங்க பொறுப்பு! நானும், என் தங்கையும், இந்த வீடும் உங்க ஆதரவுக்காகத்தான் காத்திட்டு இருக்கோம்!” என்றான்.

பாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள் ஷாமினி.

“பாண்டியனின் ராஜ்ஜியத்தை இந்த பைங்கிளித்தான் உய்யலாலாவா மாத்திக் குடுக்கனும்! குடுப்பீங்களா?” எனக் காதோரம் கிசுகிசுத்தவனின் நெஞ்சில் முகத்தைப் புரட்டினாள் இவள்.

எங்கெங்கோ சுற்றி அலைந்து கடைசியில் வீடு வந்து சேர்ந்த நிறைவு இருவருக்கும்!

இரு வாரங்களில் வடபழனி கோயிலில் வைத்து சிம்பிளாக திருமணம் எனவும், தன்னிடம் வேலைப் பார்ப்பவர்கள் மற்றும் அறிந்தவர்கள் தெரிந்தவர்களுக்காக ஒரு ரிஷப்சன் எனவும் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார்கள். நிதின் வேலை காரணமாக திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது வருவதாய் சொல்லி விட, மருந்துவ கான்பிரன்சில் மாட்டிக் கொண்டிருக்கும் இளாவால் வர முடியாது என மன்னிப்புக் கேட்டிருந்தான். இவர்கள் மூவரே தங்களுக்குத் தெரிந்த அளவுக்குத் திருமணத்துக்குத் தேவையானதை வாங்கிச் சேர்த்தார்கள். தற்பொழுது சரவணனும் செம்பாவும் தங்கி இருக்கும் அபார்ண்ட்மெண்டிலேயே இவளும் இருந்து கொண்டாள். திருமண சேலையும், தாலியும் வாங்கும் போது மட்டும் கூட வந்தவன், மற்றதை பெண்கள் இருவரிடமே விட்டு விட்டு வேலையில் மூழ்கிப் போனான்.

ஃபார்மல் உடையில் கம்பீரமாய் ஒரு ராஜாவைப் போல மற்றவர்களுக்கு வேலை ஏவுபவன், இவளிடம் மட்டும் ஒரு சேவகன் போல அப்படியே பணிந்து விடுவான்.

“நீயே இங்க ஒரு பாஸ்டா! எல்லார் முன்னுக்கும் இன்னும் ஏன் மேடம் மேடம்னு என்னைக் கூப்பிட்டுத் தொலைக்கற?” என இவள் சிடுசிடுத்தாலும்,

“மத்தவங்களுக்கு நான் பாஸா இருந்தாலும், இந்த பாஸூக்கு நீங்கதான் பாஸ்! எனக்கு எப்பவும் நீங்க மேடம்தான்! புள்ளக் குட்டி வந்தா கூட அப்படித்தான் கூப்புடுவேன்!” எனப் புன்னகைப்பான்.

இன்னும் கூட உணர்ச்சிவசப்பட்டால்தான் கிளி எனும் அழைப்பு வெளியே வரும் சரவணப்பாண்டியனுக்கு!

பிரபல மால் ஒன்றில் இருந்த மினிஸ் காபிதியாமுக்கு வந்திருந்தான் சரவணன். மேனேஜரை சந்தித்து, வேலை எப்படி நடக்கிறது எனப் பார்வையிட்டபடி இருந்தவனை கை தட்டி அழைக்கும் சத்தம் கலைத்தது. சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கே ஷாமினி அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் குறும்புப் புன்னகை. அவளை நோக்கிப் போன வெய்ட்டரை நிறுத்தியவன், கவுண்டரில் இருந்த ஏப்ரனை எடுத்து அணிந்து கொண்டு, மெனுவையும் எடுத்துக் கொண்டு இவனே போனான். இவனுக்கு வேலைப் பார்ப்பர்வர்கள் ஆச்சரியமாகப் பார்க்க,

“யெஸ் மேடம்!” எனப் பவ்யமாய் அவளருகில் நின்றான்.

“வைட் காபி அண்ட் ஏக் டோஸ்ட்” என்றவள் அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

அவள் கேட்டதை இவனே கொண்டு வந்து கொடுத்தான்.

“உங்காருங்க சார்!” என இவள் சொல்ல,

“முதலாளி முன்னாடி உட்காரக் கூடாது மேடம்” எனக் கண் சிமிட்டினான் இவன்.

“கிட்ட வாயேன் பாண்டியா!”

அவளருகில் வந்து குனிந்து நின்றவனின் காதில்,

“முதலாளி முன்னாடி இப்போ நீ உக்காரல, தொழிலாளிக்கு தொடறதுக்கு அனுமதி மறுக்கப்படும்! நம்ம வாழ்க்கைல நீ வெறும் பாசமுள்ள பாண்டியனா இருக்கனுமா இல்ல பலான பாண்டியனா இருக்கனுமான்னு இப்ப நீ முடிவு பண்ணிக்க!” எனக் கிசுகிசுத்தாள்.

படக்கென அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் சரவணன்.

“அந்த பயம் இருக்கட்டும்”

ஒரு கப் காபியை இருவரும் அருந்தி, டோஸ்டையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்குப் புரிந்து போனது அவள்தான் இனி முதலாளியின் முதலாளி என்பது.

நிதின் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான். அவனை மிக நன்றாகக் கவனித்துக் கொண்டான் சரவணன். அக்காவுக்காக இவனும் தன் பங்குக்கு வேண்டியதை வாங்கிக் குவித்தான். அவள் வாழப் போகும் வீட்டுக்கு தாய் வீட்டு சீர் வரிசையாய் வேண்டியதை வாங்கிப் போட்டான்!

சரவணன் வேண்டவே வேண்டாமென நிற்க,

“விடு பாண்டியா, அவன் வாங்கித் தரட்டும்! எனக்காக அவன் எது செய்யவும் நான் அனுமதிச்சது இல்ல! குடுக்கறது மட்டும் இன்பம் இல்ல, நம்ம மேல பாசம் வச்சிருக்கறவங்க கிட்ட இருந்து வாங்கிக்கறதும் இன்பம்தான்னு எனக்குப் புரிய வச்சிட்ட நீ! என் தம்பி கையால தாய் வீட்டு சீர் வாங்கிக்கறதுல எனக்கு மகிழ்ச்சிதான்!” என்றவளுக்குக் கண்கள் பனித்தது.

இப்படியாக அவர்களது திருமண நாளும் அழகாய் விடிந்தது. பட்டுடுத்தி, மிதமான நகை அணிந்து, தலை அலங்காரம் ஏதுமின்றி பிங்க் முடியில் குட்டியாய் ஒரு நெத்திச் சுட்டியுடன் வந்து பக்கம் அமர்ந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் சரவணப்பாண்டியன்.

‘என் கிளி பேரழகி’ என மனம் கூவியது.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனை ரசித்துப் பார்த்தாள் ஷாமினி. நடக்கவே நடக்காது என எண்ணி ஏங்கிய ஒரு விஷயம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்க, அவள் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

“என் பாண்டியா” என முணுமுணுத்தாள்.

“ஆமா! எப்பவும் உங்க பாண்டியாத்தான்” என மெல்லியக் குரலில் பதில் கொடுத்தான் அவன்.

இவனது அக்கா, நிதின் குடும்பம், செம்பா என வந்திருந்தவர்கள் அட்சதைப் போட, ஐயர் மந்திரம் சொல்ல, தனது கிளியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டு நிரந்தரமாக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தான் பாண்டிய மன்னன்!
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 23
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
138
-24
43
பாண்டியன் தான் அடிமை சாசனத்தை அவனோட மேடத்துக்கு ஆல்ரெடி எழுதி கொடுத்துட்டான் தானே...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin