Uyir Vidum Varai--EPI 2

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
938
-1,732
93
அத்தியாயம் 2

(க‌ணவனின் விந்தணுக்களை ஒரு குழாய் மூலமாக மனைவியின் கருப்பையினுள் செலுத்தி பெண்ணை கருவுறச் செய்யும் முறையை ஆங்கிலத்தில் IUI (Intrauterine insemination) என்பார்கள்.)


“பேக்க குடுக்கா” என ஓடி வந்து, கையிலிருந்த பைலையும், லேப்டாப் பேக்கையும் வாங்கிக் கொண்டான் மாசிலாமணி.

“ஒரு பேக்கே, பேக் கேட்கிறதே!!! அடடா, நானும் ஹைக்கூ சொல்லிடேண்டா தம்பி.”

“இது ஹைக்கூவா? வெளியில சொல்லிறாதக்கா. உன் மூளைய உருவி மியூசியத்துல வச்சிற போறாங்க.”

“போடா பொறாமைப் புடிச்சவனே! பேக்க ரூம்ல வச்சிட்டு வா, நான் போய் டீ போடுறேன்” என்ற சித்ராவை கைப் பிடித்து இழுத்து சென்று பிரம்பு நாற்காலியில் அமர்த்தியவன்,

“இங்கயே உட்காருக்கா. ரொம்ப களைச்சிப் போய் தெரியற. நான் டீ போட்டு தரேன். இந்த இடத்தை விட்டு நகர்ந்த, நான் பொல்லாதவன் ஆயிருவேன்” மிரட்டி விட்டு சென்றவனுக்கு பதினைந்து வயதுதான். சித்ராவின் செல்லத் தம்பி. ஆனால் செயல்கள் எல்லாம் அண்ணனைப் போல இருக்கும்.

டீயுடன் பக்கத்தில் வந்து அமர்ந்த தம்பியின் தலையைக் கோதியவள்,

“இன்னிக்கு பாடமெல்லாம் எப்படி போச்சு?” என கேட்டாள்.

“அதெல்லாம் ஓகே கா. காலையில என்ன ஆச்சு? ஏன் நான் போன் அடிச்சப்ப குசுகுசுன்னு பேசுன?”

“டேய்! நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன், முக்கியமான விஷயமுன்னா மட்டும் போன் பண்ணு. இல்லைன்னா பண்ணாதன்னு. ஏன்டா கேக்கமாட்டிக்கிறே? உன்னால அந்த ப்ரௌனி என் மூக்க ஒடச்சி அது மேல உப்பு மிளகா தடவிட்டுப் போயிட்டான்டா.”

“யாருக்கா ப்ரௌனி?”

“அந்தக் கப்பூருக்கு தான் இந்தப் பேரு வச்சிருக்கேன். உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் இனி போன் பண்ணு, மண்டையப் பொளக்கறேன்”

“எங்கக்கா சாப்பிட்டாளா இல்லையான்னு கேக்கறது, எனக்கு முக்கியமான விஷயம்தான். யாருக்காகவும் அதெல்லாம் நான் விட்டுக்குடுக்க மாட்டேன்” சிலிர்த்துக் கொண்டான்.

“அதுக்கில்லடா மணி. அவனுக்கு தமிழ் கமிங்டா. மீ குச் நஹி”

“அக்கா!!! ரகுதாத்தா மாதிரி ஹிந்தி பேசி என்னை கொல்லாத. அது பத்தா நஹின்”

“ஆமாடா நீ பெரிய ஹிந்தி பண்டிட். வந்துட்டான் எனக்கு பாடம் எடுக்க, பத்தா சொத்தான்னு”

அவள் டீ குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன், கப்பை மேஜை மேல் வைத்த நொடி அவள் மடியில் சுகமாக சாய்ந்து கொண்டான்.

“விடுக்கா. இந்த நோஸ் கட்லாம் உனக்கு பெரிசா? எத்தனைப் பார்த்துருப்ப உன் சர்விஸ்ல. இதுவும் கடந்து போகும்”

பெரிய மனிதன் போல் பேசிய தம்பியின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள்,

“அது வாஸ்தவம்டா. சரி வேல டென்ஷன விடு. நிலா போன் பண்ணாளா?” எனக் கேட்டாள்.

“போக்கா! அவ அப்படியே அடிச்சுட்டு தான் மறு வேலை பாப்பா. நான் அடிச்சாலும் காலை கட் பண்ணுவா. அவ கொஞ்சம் கூட உன் மாதிரி இல்ல. ராட்சசி !”

“மணி! அவளும் உனக்கு அக்காதான். இப்படிலாம் பேசக்கூடாது.”

“அவ எனக்கு அக்காவா இல்ல அண்ணாவா? அந்த சந்தேகத்தை முதல்ல தீர்த்து வை. எப்ப பாரு என் கிட்டயே வம்புக்கு வர்றா. என்னோட கேப், டீ சர்ட் எதா இருந்தாலும் மாட்டிட்டு போய்டுறா. நீ எதுக்குக்கா தெண்டத்துக்கு அவளுக்கு சுடிதார் எடுத்து தர? பேசாம ஜீன்ஸ் டீ சர்ட் வாங்கி குடுக்க வேண்டியது தானே. ஆம்பள பாதி பொம்பள பாதி கலந்து செய்த கலவை அவ. பேரு மட்டும் வைகாசி நிலா” பொறுமினான் சின்னவன்.

அவர்களின் அப்பா தமிழாசிரியர். பிள்ளைகள் பிறந்த தமிழ் மாதங்களை கொண்டே அவர்களுக்கு பெயர் சூட்டி இருந்தார். நல்ல வேளை யாரும் தை மாதமோ பங்குனி மாதமோ பிறக்கவில்லை. தைப்பொங்கல், பங்குனி உத்திரம் என பெயர் சூட்டி இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

“மணி ஏழாவப் போகுது. இரு நான் போன் பண்ணிக் கேக்குறேன்”

“நீ பேசுக்கா. நான் போய் டிபன் ஸ்டார்ட் பண்ணுறேன்”

“என்னடா செய்யலாம் இன்னைக்கு?”

“சப்பாத்தி?”

“ஒன்னும் வேணாம். அந்த கப்பூரு மேல நான் செம காண்டுல இருக்கேன். அவன் ஊரு சப்பாத்தி ஹோகயா. நம்ம ஊரு தோசை ஹாகயா”

“உன் ஹிந்தில என் பீச்சாங்கைய வைக்க. கால கொடுமை!” என்றவாறே சமையல் அறைக்குள் நுழைந்தான் மணி.

போனை எடுத்து தங்கைக்கு டயல் செய்தாள் சித்ரா. இரண்டு தடவை காலை கட் செய்து விட்டு, பின் அவளே அழைத்தாள்.

“சொல்லுக்கா”

“எங்கடி இருக்க? இருட்டுதுல”

“டான்ஸ் ப்ராக்டிஸ்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும். ஆட்டோ எடுத்து வந்துருறேன்” படித்து விட்டு ஒரு டான்ஸ் அகாடாமியில் ட்ரைனராக இருந்தாள் நிலா. டான்ஸ் அவளின் உயிர்மூச்சு.

“நேத்தும் இப்படி தான் சொன்ன, வர மணி ஒன்பது ஆச்சு. இன்னும் அரை மணி நேரத்துல வீட்டில இல்ல நான் கொலைக்காரியா மாறிடுவேன்”

“வந்துருவேன் கா. நீ டென்ஷன் ஆகாத. பாசிமணி டீ போட்டுக் குடுத்தானா?”

“நிலா! அவன் கிட்ட ஏண்டி வம்புச்சண்டைக்கு போற? சின்ன பையன் தானே!”

“ஆமா, நீ தான் சொல்லுற சின்னப் பையன்னு. அவன் என்னையே கண்ட்ரோல் பண்ணப் பார்க்கறான்.” இவள் பக்கத்து கடுப்பை எடுத்துவிட்டாள் நிலா.

“மிடிலடா சாமி. உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்தை தீர்க்கவே நான் ப்ளேட் ப்ளேட்டா சாப்புடனும்.”

“சாப்புடுக்கா. அப்பவாச்சும் சதை போடுறியான்னு பார்ப்போம்.”

“ஏன் இருக்கற சதை பத்தலையா? ஸ்கேர்ட் மேல ஏறி அப்ப அப்ப ரம்பா தொடைய காட்டுது. சட்டைய முன்னுக்கு இழுத்தா பின்னுக்கு ஏறுது, பின்னுக்கு இழுத்தா முன்னுக்கு ஏறுது. என் கிரகம் என்னை மட்டும் குண்டா பெத்து போட்டுட்டாங்க. சரி, சரி, சைஸ் பத்தி பேசுனா மேட்டர மறந்துருவேன்னு நினைக்காதே. சீக்கிரம் வா வீட்டுக்கு.”

தம்பியுடன் சேர்ந்து டின்னரை செய்தவள், குளித்துவிட்டு கிளம்பி வந்தாள்.

“மணி நான் போய் பாப்புவ கூட்டிட்டு வரேன். பத்திரமா இரு. நிலா வந்துருவா”

“சரிக்கா”

அவர்களின் வீடு திருவள்ளூரில் இருந்தது. சிறிய வீடு தான், ஆனாலும் சொந்த வீடு. இரட்டை படுக்கையறை, ஒரு பாத்ரூம், சின்ன சமையல் அறை, நால்வர் அமரக் கூடிய அளவுக்கு ஹால் என கச்சிதமாக இருக்கும். வீடு இருந்தது, வீட்டுப் பெரியவர்கள் இல்லை.

நடையை எட்டிப் போட்ட சித்ரா இருபது நிமிடங்களில் பக்கத்து தெருவை அடைந்துவிட்டாள்.

“பத்மாக்கா” வீட்டின் வெளியே இருந்தே அழைத்தாள்.

அவளின் குரல் கேட்டு உள் அறையில் இருந்து பறந்தோடி வந்து அவள் மேல் பாய்ந்தாள் கார்த்திகை தீபா. அலேக்காக அவளை தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள் சித்ரா.

“அம்மா, எனக்கு என்ன வாங்கி வந்த?” எப்பொழுதும் சலிக்காமல் தீபா கேட்கும் கேள்வி.

“வீட்டுல சாக்கி இருக்கு. ஆனா முழுசா ஒரு தோசை சாப்பிட்டாத் தான் குடுப்பேன்” டீல் பேசினாள் நான்கு வயது மகளிடம். வாசலிலே கொஞ்சி கொண்டிருந்தவர்களை நோக்கி வந்தார் பத்மா.

“வா சித்து. இன்னிக்கு சமத்தா இருந்தா உன் மக. வம்பு பண்ணாம சாப்பிட்டா. இரு அவளோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்” என உள்ளே சென்று கூடையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.

“தேங்க்ஸ் பத்மாக்கா”

“அடி வாங்குவ! பிள்ளைய பாத்துக்க காசு குடுக்கற. எனக்கும் இவ இருக்கவும் தான் பொழுது போகுது. நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும்.” குரல் கம்மியது அவருக்கு.

திருமணம் ஆகி பத்து வருடம் ஆகியும், பிள்ளை பாக்கியம் கிட்டாதவர் அவர். தீபா அவருக்கு பெறாமல் கிடைத்தப் பிள்ளை. பணம் வாங்காமல் பார்த்துக் கொள்வதாக சொன்னவரிடம் வற்புறுத்தி, மிரட்டி பணம் கொடுக்கிறாள் சித்ரா. முதலில் இவரிடம் விடும் போது, வேலை முடிந்தவுடன் அடித்துப் பிடித்து ஓடி வருவாள் பிள்ளையை அழைத்து செல்ல. பத்மா தான் வீட்டில் வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்து, பிள்ளையை தூக்கி செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார்.

பிள்ளை இல்லாதவளிடம் ஏன் குழந்தையை விடுகிறாய் என அக்கம் பக்கம் ப்ரீயாக அட்வைஸ் செய்தார்கள் சித்ராவுக்கு. இவள் கண்டுக்கொள்ளவில்லை. கைப்பிள்ளையுடன் தவித்தப் போது இந்த அக்கம் பக்கமா வந்தது உதவ? தானாக வந்து கைக் கொடுத்து உதவியவர் பத்மா. அந்த நன்றி உணர்ச்சி எப்பொழுதும் சித்ராவுக்கு உண்டு.

“பை பத்தும்மா” என பத்மாவைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் தீபா.

“சித்து, இரும்மா. சிவா வர டைம்தான். துணைக்கு வருவான்”

சிவநேசன், பத்மாவின் தம்பி. அவனுக்கு சித்ரா மீது ஒரு வகையான பாசம். ஹைடீயில் நல்ல வேலையில் இருக்கிறான். அதாங்க பெரிய ஹைகிளாஸ் ஹோட்டல்ல டீ ஆத்துற வேலை. செஃப்னும் சொல்லலாம். அவர்கள் பேசி கொண்டிருக்கும் வேளையில், அவனும் வந்து விட்டான்.

சித்ராவைப் பார்த்த அவன் முகம், எண்ணையில் பொறித்த போண்டாவைப் போல் சந்தோசத்தில் உப்பியது.

“நல்லா இருக்கியா சித்து?”

‘நான் போயிட்டேண்டா செத்து’

“நேத்து பார்த்த மாதிரி தான் இருக்கேன் சிவா” கஷ்டப்பட்டு சிரித்து வைத்தாள்.

அவனிடம் தாவிய தீபா,

“சிவாப்பா, எனக்கு என்ன வாங்கிட்டு வந்த?” எனக் கேட்டாள்.

“தீபா! அப்படி கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்றது?” பல்லைக் கடித்தாள் சித்ரா.

“ஏன், அப்படி கூப்பிட்டா என்ன பிரச்சனை? நீ அப்படியே கூப்பிடுடா என் குட்டி மப்பின்” என்றவன் கையில் வைத்திருந்த பையில் இருந்து, கப் கேக்கை எடுத்து தீபாவிடம் நீட்டினான்.

சந்தோசத்தில் சிவாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் தீபா. எப்படி எங்க பாசம் என்பது போல், சித்ராவின் முகத்தை சிரிப்புடன் பார்த்தான் சிவா.

‘இளிக்கறத பாரு எவரெஸ்ட் ஏறுன எருமை மாதிரி’ உள்ளுக்குள்ளே அவனை வறுத்தெடுத்தாள் சித்ரா.

“வாசலிலே நின்னு சண்டைப் போடாம, கிளம்புங்க.” என விரட்டினார் பத்மா.

தீபாவை தூக்கிக் கொண்டவன், இன்னொரு கையில் பாலிதின் பை ஒன்றையும் தூக்கிக் கொண்டு வந்தான். சற்று தள்ளி தீபாவின் கூடையை மட்டும் அல்ல முகத்தையும் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள் சித்ரா. அவளுக்கு தெரியும், பத்மா அவளையும் சிவாவையும் ஜோடி சேர்க்க ஆசைப்படுவது. இவர்கள் இணைந்தால் தீபாவை அவர் என்றும் பிரிய தேவையில்லை. இதுதான் பிளான்.

ஆனால் சித்ராவுக்கு சிவாவை கண்டாலே ஆகாது. அவனை மட்டும் அல்ல. தம்பி மணியை தவிர எந்த ஆணையும் மரம், செடி, கொடி ரேஞ்சுக்கு தான் பார்ப்பாள். அவள் வாழ்க்கை மகளுக்காகவும், தம்பி தங்கைக்காகவும் மட்டும் தான். வேறு எந்த உணர்ச்சிக்கும் இடம் அளிக்க அவள் விரும்பவில்லை.

இவர்கள் வீட்டை அடைந்த போது, வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நிலா,

“சிவு! ஆட்டோவ கட் பண்ணு” என்றவள் தீபாவை அவன் கையில் இருந்து தூக்கிக் கொண்டாள். உள்ளுக்குள்ளே முனங்கினாலும் அவள் சொன்னதை செய்தான் அவன்.

தீபாவும் சித்ராவும் வீட்டினுள் சென்று விட, சிவாவுக்காக காத்திருந்தாள் நிலா. அவள் அருகே வந்தவனிடம் கையை நீட்டினாள். அவனும் ஒன்றும் பேசாமல் பாலிதின் பையில் இருந்த சாக்லேட் ப்ரூலியை அவள் கையில் வைத்தான். கண்கள் பளபளக்க,

“தேங்க்ஸ்டா சிவு” கட்டிக் கொண்டாள் அவனை.

“விடுடி ரௌடி! தொட்டுப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”

“ஏன் நான் தொட்டா கரைஞ்சிப் போயிருவியா? அடங்கு! இது நீயே செஞ்சியாடா சிவுக்குட்டி? உன் முகரை தான் உப்பு போட்ட போக்கனா மாதிரி இருக்கு. ஆனா உன் கைமணம் இருக்கே! ஹ்ம்ம்ம்” ரசித்து மொக்கினாள் கேக்கை.

அவள் வாயின் ஓரத்தில் ஒட்டியிருந்த கேக்கின் க்ரீமை தன் கையால் துடைத்து விட்டவன்,

“சாப்பிடறதுல கூட ஒரு ஒழுங்கு இல்ல. இது என்ன இப்படி வேர்த்துப் போய் இருக்க? ஓவர் ஆட்டமா?”

“யா, யா! இன்னிக்கு விக்ரம் சார் படத்தோட பாட்டு ஷூட்டிங். குடைமிளகா சொதப்புனதுல நிறைய டேக் ஆயிருச்சு. டான்ஸ் மாஸ்டர் புழிஞ்சு எடுத்துட்டான்.”

“குடைமிளகாவா?”

“ஆமா, அந்த பட நாயகிக்கு நான் வச்ச பேரு. என்ன ஒரு வெள்ளை. கொஞ்சம் வெயில் பட்டாலே முகம் சிவந்து குடைமிளகாய் மாதிரி ஆகிறுது”

“ஏன் நீயும் தான் நல்லா வெள்ளையா இருக்க. என்ன கிள்ளி எடுக்க தான் சதை இல்லை. எதுக்கு இப்படி உடம்ப வருத்தி ஆடி சம்பாரிக்கனும்? அதுவும் உங்க வீட்டுல யாருக்கும் தெரியாம?”

“தெரியாத மாதிரி கேக்குற! உனக்கு தெரியாம என் லைப்ல என்ன இருக்கு? நான் சொந்தமா டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கனும். அக்காவ கண்ணுல வச்சுப் பார்த்துக்கனும். அதுக்கு தான் நாயா சம்பாரிக்கறேன். எப்பவும் மாதிரி உன் வாயை மூடியே வச்சுக்கோ. அவளுக்கு தெரிஞ்சது அப்புறம் நான் உன் கிட்ட ஜென்மத்துக்கும் பேச மாட்டேன்”

“சொல்ல மாட்டேன் வைசி. இருந்தாலும் சினிமால நீ குருப் டான்ஸ் ஆடறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. கூட்டத்துல நீ கோவிந்தா போட்டாலும், என்னிக்காச்சும் உங்க அக்கா கண்டுபிடிக்கப் போறா. அன்னைக்கு இருக்கு உனக்கு ராகு கால பூஜை” பகலில் டான்ஸ் அகடாமியிலும் சான்ஸ் வரும்போது சினிமா குருப் டான்ஸ் என ஆடி ஆடி சம்பாதிக்கிறாள் நிலா.

“தெரிஞ்சாலும் நீ என்னை காப்பாத்துவ சிவு பையா.” என்றவள் அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள். அவள் கையைத் தட்டி விட்டவன்,

“சொல்லுறேன்ல தொடாதேன்னு. அக்காவுக்கு ஆத்துகாரனா வரப்போறவன இப்படிதான் தொட்டு தொட்டு பேசுவியா?” கண்டித்தான் அவன்.

மெல்லிய வாட்டம் முகத்தில் வந்தாலும், சிரித்து சமாளித்தவள்,

“அக்கா புருஷன் அரை புருஷன்னு கேள்விப்பட்டதில்லை? ஷேர் பண்ணிக்க நான் ரெடிப்பா” என்றாள் அவள்.

“அறைஞ்சேன்னா பாரு. போடி உள்ள. போய் சுத்தமா குளிச்சுட்டு நல்லா சாப்பிடு. அன்னிக்கு குடுத்தேனே தைலம், அத காலுக்கு தடவிட்டு படு. நாளைக்கு என்ன வேணும்? தினமும் தான் அது இதுன்னு எடுத்து வந்து தரேன். சாப்பிடறதெல்லாம் எங்க கொண்டு போய் சொருகுறீயோ தெரியல.” எனச் சலித்துக் கொண்டான்.

“தோ பாரு, டீ மாஸ்டர்! ஓவரா சலிச்சுக்காத. எனக்கு ஒன்னும் வேணாம், வீட்டப் பார்க்கப் போ” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

“நில்லு வைசி! எதாச்சும் சொன்னா மூக்குக்கு மேல கோபம் மட்டும் வரும். ஒழுங்கா சிரிச்சாப்ல போ. நீ முகத்தை தூக்கி வச்சிட்டுப் போனா எனக்கு தூக்கம் வராது”

“ஈஈஈஈஈ! இது போதுமா?”

“போதும் போ!” அவளது கேப்பை தலையில் இருந்து உருவியவன்,

“ஆம்பள பசங்க மாதிரி கேப் போடாதேன்னு சொன்னா கேக்கமாட்டீயா? முன்னுச்சியில சொட்டை விழ போகுது. அப்புறம் எவனும் கட்டிக்க மாட்டான்” என்றான்.

“ஆமா, இப்ப மட்டும் வரிசையில க்யூ கட்டி நிக்கிறாங்க! போடா சோடா புட்டி, உனக்கே என்னைப் புடிக்கல.”

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வைசி, என் செல்லக் குட்டி தங்கச்சி நீ”

உள்ளே போக திரும்பியவள் மீண்டும் அவனருகே வந்து, ரோடு எனவும் பாராமல் இறுக்கி அணைத்து, கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அதிர்ந்து நின்றவனிடம்,

“திரும்பவும் தங்கச்சின்னு சொன்ன, கன்னத்துல குடுத்தத உதட்டுலயே குடுப்பேன். ராஸ்கல்!” எனக் கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே ஓடினாள்.

அழுதபடி வந்த தங்கையிடம்,

“ஏன்டி? மறுபடியும் ஏசிட்டானா அந்த பாகுபலி”

“அக்கா! அவனுக்கு உன்னோட வயசு கூட தானே? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்லற!” எகிறினாள் நிலா.

“என்னோட சின்னவ நீ, அப்படி கூப்படலாம். நான் கூப்பிட்டா மட்டும் தப்பாக்கும்! என்னங்கடி உங்க லாஜிக்? சரி போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்”

அதற்குள் தேறி இருந்தவள், கிச்சனில் இருந்து வந்த தம்பியைப் பார்த்து,

“அப்புறம்டா பாசி, ஓ சாரி மாசி, இன்னிக்கு என்ன சட்னி?” என வம்பிழுத்தாள்.

“உனக்கு மட்டும் ஸ்பெஷலா மாட்டு சாணி போட்டு, மாசாணி சட்னி செஞ்சிருக்கேன். வந்து கொட்டிக்க”

அவன் அருகில் சென்று தலையில் நான்கு கொட்டு கொட்டியவள்,

“விஷம்! விஷம்! பேசறத பாரு” என்றாள்.

“யாருடி விஷம்? நீதான்டி விஷம் உள்ள பாம்பு. இன்னிக்கு உனக்கு பாயாசத்தைப் போடல, என் பேரு மணி இல்லடி” என அவள் மேலே பாய்ந்தான்.

இருவரும் ஹாலிலேயே கட்டிப் புரண்டு அடித்துக் கொண்டனர்.

“அம்மா, நானு?” என கேட்டாள் தீபா.

“அதுக்கென்ன போ! நீயும் போய் ஐக்கியமாகிக்க” என்றவள் சாப்பாடு எடுத்து வைக்க கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அடித்துக் கொண்ட இருவர் மேலும் ஏறிய தீபா, அவர்களின் முடியை இழுத்துப் பிடித்து விளையாடினாள். மூவரின் சத்தமும் அந்த வீட்டை மட்டும் அல்ல அக்கம் பக்க வீடுகளையும் அதிர வைத்தது.

தூங்கும் முன் மகளுக்கு பார்பி பிஜாமாஸ் மாற்றிய சித்ரா,

“தீபா கண்ணு, அம்மாவுக்கு வயிறு வலிக்குது. பாத்ரூம் போறேன். குட் கேர்ளா படுத்துருக்கனும். ஓகேவா?” என்றவள் உடம்பு கழுவ சென்றாள். குளிக்க போகிறேன் என்றால், வேணா ரொம்ப நேரம் ஆகும். அப்படியே படு என அழுது ஊரைக் கூட்டுவாள் தீபா. அதற்கு பயந்தே வயிற்று வலி என சொல்லி செல்வாள் சித்ரா.

அம்மா பாத்ரூம் நுழையும் வரை பார்த்திருந்தவள், ஓடிப் போய் சார்ஜரில் இருந்த போனை எடுத்துக் கொண்டாள். ஸ்க்ரின் லாக்கை திறந்தவள், யூ டியுப் உள்ளே நுழைந்து ஸ்பீக்கர் பட்டனை தட்டி ‘பவர் பப் கேர்ல்ஸ்’ என சொல்லி கார்டுனை தேடி, பார்க்க ஆரம்பித்தாள். ஏபிசிடி கூட தெரியாத பிள்ளைகள் எப்படிதான் டெக்னாலஜியை அனாயசமாக கை ஆள்கிறார்கள் என்பது உலக அதிசயம் தான். அவள் பார்த்து கொண்டிருக்கும் வேலையில் இன்கமிங் கால் வந்தது. காலை அட்டேண்ட் பண்ணிய குட்டி,

“ஹாலோ” என்றாள்.

“ஹலோ! சிமி?”

“இது சிமில்ல. சித்தா பொணமி போன் இது. இங்க தீபா அங்க யாரு?”

ஒரு நிமிடம் அந்தப் பக்கம் பலத்த அமைதி.

“சொல்லுங்க சீக்ரம். நான் காத்தூன் பாக்கனும்”

“உங்க சித்தா பொணமி இருக்காங்களாடா?”

“அவங்க பாத்தூம் போய்ட்டாங்க. டேய்லி இந்த டைம்ல வயிறு வலிக்கும் அம்மாக்கு”

“அம்மாவா?”

“ஆமா! எங்கம்மா தான். நீங்க யாரு?”

“நான் பிரகாஷ். உங்க அம்மாவோட ப்ரண்ட்”

“அப்போ பிகாஷ் எனக்கும் ப்ரண்ட் தான். எனக்கு என்ன வாங்கி குடுப்ப?”

மீண்டும் அமைதி.

“பிகாஷ்! இருக்கியா? சொல்லு என்ன வாங்கி குடுப்ப?”

“என்னடா குட்டி வேணும்?”

“பார்பி பொம்மை வேணும். ஒன்னு போதும். அம்மா வாங்கி குத்தது காலு ஒடஞ்சிருச்சு.”

“சரி வாங்கி தரேன். நீங்க சாப்பிட்டீங்களா?”

“சாப்டேன். பாதி தோசை. மீதி நிலா தட்டுல போட்டுட்டேன். நீ சாப்டியா பிகாஷ்?”

“இன்னும் இல்லடா. சாப்பிட்டியான்னு கேக்க கூட எனக்கு யாரும் இல்லடா.”

“அன்னாடிக்கும் இந்த டைம்ல போன் அடி. நான் சாப்டியா, சாப்டியான்னு நிறைய வாட்டி கேக்குறேன். ஓகேவா?”

அவன் பதில் சொல்வதற்குள்,

“தீபா! அம்மா போன் எடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் தானே. எப்ப பாரு கார்டூன். செமத்தியா வாங்கப் போற பாரு” என்றவாறே உள்ளே வந்தாள் சித்ரா.

அவளைப் பார்த்ததும் போனைக் கட்டிலில் தூரமாக எறிந்து விட்டு சித்ராவைக் கட்டிக் கொண்டாள் தீபா.

“அம்மா! கதைச் சொல்லு, பார்பி கதை” எனக் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மகள்.

“இரு லைட்டை சாத்திட்டு வரேன்” என்றவள் மகளை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள். கதை சொல்லி முடித்தவள், அவளை தட்டிக் கொடுத்தவாறே மெல்லிய குரலில் பாடினாள்.

“ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை
உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை
இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை “

பாட்டுக்கு தூங்கியது தீபா மட்டுமல்ல, லைனிலேயே இருந்த பிரகாஷ் கப்பூரும்தான்.
 

Author: VanishaAdmin
Article Title: Uyir Vidum Varai--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
138
-24
43
அடேய் பிரகாஷ்..! லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா? இல்ல ரம்பா தொடை அட் ஃபர்ஸ்ட் சைட்டா?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin