Sernthaadu Cindrella--EPI 14

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 14

“இந்த ஃபேக் ஐடி தொல்லைத் தாங்க முடியலை சாமியோவ்! இன்ஸ்ட்டாவுலயோ, மூஞ்சு புக்லயோ ஒரு போஸ்ட் போட்டா மொதோ ஆளா ஓடி வந்து வன்மத்தைக் கக்கிட்டுப் போறதுல அப்படி என்னத்தான் சந்தோஷத்தைக் கண்டுடறாங்களோ தெரியல! நல்ல துணி போட்டு போட்டோ போட்டா, உன் கிட்டத்தான் இருக்குன்னு காட்டறியான்னு கேக்கறாங்க! சாதாரண துணி போட்டா, எவ்ளோ சம்பாதிக்கற, பிச்சைக்காரன் மாதிரி உடுத்தறன்னு கேக்கறாங்க! டேய்! நாங்க என்னத்தான்டா செய்யனும் இப்போ? இந்த செலிபிரிட்டி பாடுதான் பெரும்பாடு! என்ன போஸ்ட் போட்டாலும், அங்க போய் கெட்ட வார்த்தைல கெத்து காட்டிட்டு வரது! ஷப்பா டேய்ஸ்! உங்கள எல்லாம் ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாதுடா!!!”

(பாட்காஸ்ட் பை பரதேசி)




கோவையில் இருந்த ஓர் அழகிய வீட்டின் முன்னே ஊர்மி பயணித்த சொகுசு கார் போய் நின்றது. கார் முன் சீட்டில் இருந்த ஊர்மிளா, கண்ணாடி வழி அந்த வீட்டை நோட்டமிட்டாள். பழைய காலத்து வீடு எனப் பார்க்கும் போதே தெரிந்தது! அதை கொஞ்சமாய் இந்தக் காலத்து ரசனைக்கேற்ப மாற்றி இருந்தார்கள். அவள் பக்கத்தில் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விஷ்ணு,

“இப்போதைக்கு நம்ம வீடு ஊர்மி! இதை போற்றிப் பாதுகாத்து அடுத்து நம்ம பிள்ளைக் கிட்ட ஒப்படைக்கனும். பரம்பரை பரம்பரையா வீட்டு மூத்தப் பேரப் புள்ளைக்குப் போய் சேரும் இந்த வீடு! அப்படித்தான் அப்பாட்ட இருந்து எனக்கு வந்தது! சென்னைல உன் மாமா, மாமி வீடு இருக்கு! அதான் பார்ட்டிக்கு வந்தீயே, அந்த வீடு! எனக்குன்னு தனியா அபார்ட்மெண்டும் இருக்கு சென்னைல! அங்கத்தான் நாம மோஸ்ட்லி இருப்போம்! இது நமக்கு வேகேஷன் வீடாத்தான் இருக்கும்” என்றான்.

குட்டியாய் ஒற்றை வீட்டைப் பற்றிக் கனவுக் கண்டிருந்தவளுக்கு, கட்டி ஆள இத்தனை வீடுகளா எனும் எண்ணமே மலைப்பைத் தந்தது. கண்களை மெல்ல மூடிக் கொண்டாள். அதற்குள் காரை விட்டு இறங்கி, இவள் பக்கம் வந்து நின்றான் விஷ்ணு.

“இந்த வீட்டுக்கு வீல்சேர் அக்சஸ் இல்ல ஊர்மி! லெட் மீ கேரி யூ!” என்றபடி பஞ்சு மூட்டையைத் தூக்குவது போல அசால்ட்டாக இவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

வாசற்படியில் வீட்டு வேலைப் பார்ப்பவர்கள் மூவர் நின்றிருந்தனர். அவர்களின் குறுகுறு பார்வையில் வெட்கம் வர, விஷ்ணுவின் கைகளில் நெளிந்தாள் ஊர்மிளா.

“என்ன ஊர்மி? எங்கயாச்சும் வலிக்குதா?” எனக் கேட்டான் இவன்.

எங்கு வலிக்கிறது எனத் தெரியாமல், உடம்பு முழுவதும் வலிக்கத்தான் செய்தது! உயிரோடு இருப்பதே பெரும் புண்ணியம் என மனதைத் தேற்றிக் கொண்ட ஊர்மிளா, வலிகளைப் பொறுத்துக் கொள்ளப் பழகி இருந்தாள். அந்த வெள்ளத்தில் இன்னும் கூட பலர் காணாமல் போனவர்களாகவே இருக்க, கால் எலும்பு முறிவோடு தப்பி இருந்தவளுக்கு மனதில் ஆஞ்சனேயரின் மேல் நன்றி உணர்ச்சி மட்டுமே!

“இல்ல விஷ்ணு! நீ சட்டுன்னு தூக்கவும் கொஞ்சம் ஷை ஃபீலீங்கா இருக்கு” என மெல்லியக் குரலில் முணுமுணுத்தாள்.

இவன் முகம் சிரிப்பில் மலர்ந்தது.

“என் கிட்ட ஊர்மி குட்டிக்கு என்ன வெட்கம்! கல்யாணமாகி ஹனிமூனுக்கு உன்னை இப்படித் தூக்கிட்டு வந்திருக்கனும்! என்னமோ காலத்தின் கோலம், இப்படி வலியோட உன்னைத் தூக்கிட்டு வர மாதிரி ஆகிடுச்சு!” என்றபடி வலது கால் வைத்து வீட்டின் உள்ளே நுழைந்தான்.

முற்றம், முன்றில், தாழ்வாரம் என அழகாய் இருந்தது வீடு! பழமையும் நவீனமும் கலந்து ஆளை மயக்கியது. அங்கிருந்த மெத்தை வைத்த மூங்கில் சாய்வு நாற்காலியில் இவளை அமர்த்தினான் விஷ்ணு. சமையல் செய்யும் பெண்மணி மாதுளை சாறைக் கண்ணாடிக் குவளையில் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார். ஊர்மிளாவின் அருகே அமர்ந்து கொண்ட விஷ்ணு, அந்த ஜூசை ரசித்து அருந்தினான்.

“சாப்படறீங்களா தம்பி?” எனக் கேட்டார் அந்தப் பெண்மணி.

இவன் ஜூஸ் அருந்தி கொண்டிருக்கும் ஊர்மியைக் கேள்வியாய் நோக்கினான்.

“அப்புறமா விஷ்ணு!” என இவள் சொல்ல, அந்தப் பெண்மணி சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.

“ட்ராவல் டைம் முழுக்க, மூனு மணி நேரத்துக்கு ஒருக்க எதாச்சும் என் வயித்துல போட்டு அடைச்சிட்டே இருந்த விஷ்ணு! பின்ன எப்படி பசிக்கும்” எனச் செல்லமாய் அலுத்துக் கொண்டாள் இவள்.

“யூ நீட் எனெர்ஜீ பேபி!” என்றவன், உள்ளே கொண்டு வரப்பட்ட வீல்சேர், மற்றும் இருவரின் லக்கேஜ்களையும் அறையில் கொண்டு போய் வைக்கச் சொல்லி உத்தரவிட்டான்.

அதன் பிறகு வேலைப் பார்க்கும் மூவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான்.

“குக் மட்டும் தினம் காலைல வந்து சமைச்சிட்டுப் போய்டுவாங்க! மத்தபடி வேற யாரும் நம்ம கூட இருக்கறத நான் விரும்பல! உன் உடம்பும், மனசும் நல்லபடி ஹீல் ஆகனும்! மத்தவங்க ப்ரெசென்ஸ் உனக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்! அதுக்குத்தான் இந்த ஏற்பாடு ஊர்மீ!”

தலையை ஆட்டிக் கொண்டவளுக்குச் சோர்வாய் இருந்தது.

‘இதென்ன சோர்வு! எவ்வளவோ விஷயத்தைச் சின்னதுல இருந்து தனியா கடந்து வந்திருக்கேன்! வாழ்க்கை கீழ தள்ளி விட்டாலும், அடிச்சுப் புடிச்சு எழுந்து நின்னிருக்கேன்! இப்போ ஏன் இப்படி ஃபீலாகுது? தாங்கிப் பிடிக்க விஷ்ணு இருக்கான்றதுனாலயா?’ எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள், இருவர் குவளைகளையும் கிச்சனில் கொண்டு போய் கழுவி வைத்து விட்டு வருபவனைத்தான் பார்த்திருந்தாள்.

தாடியை எடுத்திருந்தான். கொஞ்சமாய் மெலிந்திருந்தான். முகம் களைப்பைக் காட்டினாலும், கண்கள் இரண்டும் பல்ப் போட்டது போல ஒளிர்ந்தன. இவளைப் போல நேபாளில் மாட்டி இருந்த இன்னும் பல இந்தியர்களும் பத்திரமாய் நாடு திரும்ப வேண்டியதைச் செய்திருந்தான் விஷ்ணு எனக் கேள்விப்பட்டிருந்தாள். பணம் இருக்கிறதே, இதென்ன கஷ்டக் காரியமா என எண்ண முடியவில்லை இவளால். பணம் இருந்தாலும் அதை எடுத்து சம்பந்தமே இல்லாதவர்களுக்குச் செலவு செய்ய மனமும் வேண்டும் அல்லவா!

“மை விஷ்ணு” என முனகிக் கொண்டாள் ஊர்மிளா.

அருகில் வந்தவனை நோக்கிக் கைகளை நீட்டினாள் இவள்.

“தூக்கம் வருது விஷ்ணு”

“தோ! இப்பவே போய் படுக்கலாம்டா!” என்றவன், மீண்டும் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

இந்த முறை நெளியாமல், அவன் நெஞ்சோடு முகம் உரச, அவனது லப்டப்பைக் கேட்டபடி கைகளை விஷ்ணுவின் கழுத்தில் கோர்த்துக் கொண்டாள் ஊர்மி.

மருத்துவமனையில் இவன் கொடுத்த முத்தத்திற்குப் பிறகு, பேச்சு வார்த்தைக் குறைந்து போயிருந்தது ஊர்மியிடமிருந்து. கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லியவள், மீதி நேரமெல்லாம் சோர்வு எனும் போர்வையில் அமைதியாகவே இருந்தாள்.

“அவசரப்பட்டுட்டியேடா” எனத் தன்னைத்தானே நொந்து கொண்டான் விஷ்ணு.

“எனக்கு அந்த முத்தம் தேவையா இருந்தது! என் ஊர்மீ இன்னும் உயிரும் உணர்வுமாத்தான் இருக்கான்னு உணர்ந்துக்க அந்த முத்தம் தேவையாத்தான் இருந்தது! என் விஷ்ணுன்னு சொன்னாளே, அந்த சந்தோஷத்தக் கொண்டாட தேவையாத்தான் இருந்தது” எனத் தன்னைச் சமாதானமும் செய்து கொண்டான்.

சிகிச்சை முடிந்து, இனி ஓய்வுதான் தேவை என டாக்டர் சொன்ன நொடி, ஊர்மிளாவை அழைத்துக் கொண்டு கோவை வந்து விட்டான். சென்னையில் இருந்தால், அம்மாவும் அப்பாவும் கண்டிப்பாய் பார்க்க வருவார்கள். மனக் கசப்பான நிகழ்வுகள் ஏதும் நடக்கக் கூடும். ஊர்மிளா சற்றுத் தேறியதும், பெற்றவர்களை எதிர் கொள்ளலாம் எனக் கிளம்பி விட்டான்.

தன் நெஞ்சில் முகம் புதைத்திருக்கும் பெண்ணைக் குனிந்து பார்த்தான் விஷ்ணு! முதல் முறையாக அவளாகவே நெருக்கத்தைக் காட்டுகிறாள்! மனம் இன்பத்தில் தளும்பி வழிந்தது. களைப்பில் கூட அப்படி செய்திருக்கலாம் என மூளை எடுத்துரைக்க,

‘உடனே ஓடி வந்து என் சந்தோஷ பலூன்ல ஊசியைக் குத்தலனா உனக்குத் தூக்கம் வராதே! ப்ளடி!!! நீ என்ன வேணா சொல்லிட்டுப் போ! என் ஊர்மி, இப்போ என் கைல! நான் ஹேப்பியாத்தான் இருப்பேன்’ என அதற்கொரு கொட்டு வைத்தான் விஷ்ணு.

அறையில் ஏசி போட்டு வைத்திருந்தான். ஏற்கனவே அந்த ஊர் குளிராகத்தான் இருந்தது! ஏசி குளிரும் சேர்ந்து கொள்ள, இவனை இன்னும் இறுக்கிக் கொண்டாள் ஊர்மிளா. கட்டிலில் அவளைக் கிடத்தியவன், கட்டுப் போடப்பட்டிருந்த காலுக்கு கீழ் தலையணை வைத்தான்.

“குளிருதா ஊர்மி? இரு ஏசிய குறைச்சிடறேன்”

அவள் கொஞ்சம் வசதியாகப் படுத்துக் கொண்டதும், போர்த்தி விட்டவன்,

“தூங்கு! நான் வெளியே இருக்கேன்” என்றான்.

அறையை விட்டு வெளியேற முனைந்தவனை,

“விஷ்ணு!” என அழைத்தாள் இவள்.

“என்ன ஊர்மி?”

மெத்தையின் இன்னொரு புறத்தைத் தட்டிக் காட்டியவள்,

“வந்து படு!” என்றாள்.

விழிகள் விரிய,

“இல்ல பரவால்ல! உனக்கு டிஸ்டர்ப் ஆகும்” என்றான் இவன்.

“மேகத்துல மிதக்கற ஆவி மாதிரி சுத்திட்டு இருக்க நீ! வந்து படு! என்னை விட உனக்குத்தான் இப்போ ரெஸ்ட் தேவை! கம்” என்றவளின் குரலில் பிடிவாதம் இருக்க,

“சரி இரு! ட்ரேஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” எனப் போனவன், ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட்டுடன் வந்தான்.

கட்டிலில் மெல்ல ஏறி இடைவெளி விட்டுப் படுத்துக் கொண்டான் இவன்.

“கிட்ட வா விஷ்ணு! இப்ப நான் இருக்கற கண்டிஷன்ல, உன்னோட கற்புக்கு என்னால எந்த பங்கமும் ஏற்படாது!” எனக் கிண்டல் குரலில் சொல்லியவளை செல்லமாய் முறைத்தான் விஷ்ணு.

இவன் நெருங்கிப் படுக்க, நகர்ந்து அவன் புஜத்தில் தலை வைத்துக் கொண்டாள் ஊர்மிளா. ஒரு கை கொண்டு அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

“தூங்க வை விஷ்ணு!”

“பாடனுமா?”

“இல்லல்ல வேணாம்! வர தூக்கம் கூட உன் இனிமையானக் குரல கேட்டு ஓடியே போய்டும்” எனச் சொல்லியபடியே அவன் மார்பில் மெல்லிய விரல்களால் கோலம் போட்டாள் ஊர்மிளா.

“உடம்பு நல்லானதும் இது போல என்னைக் கலாய்ச்சிப் பாரு! கண்டமாகிப் போய்டுவ” என்றவனைப் படுத்தவாக்கிலேயே நிமிர்ந்து பார்த்தாள் இவள்.

கண்கள் பளபளக்க, இவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான் விஷ்ணு! மெலிதாய் புன்னகைத்தாள் ஊர்மிளா. குனிந்து அவள் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தவன்,

“தட்டிக் குடுக்கறேன், தூங்கு ஊர்மி! இப்படியே என்னைப் பார்த்துட்டு இருந்தீனா, எனக்கு என்னென்னமோ பண்ணனும்னு தோணுது!” என்றவனை மேலும் சோதிக்காமல், நல்ல பிள்ளையாய் அவன் நெஞ்சில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள் ஊர்மி.

ஊர்மியின் முதுகில் மெல்ல இவன் தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களில் இருவருமே தூங்கி இருந்தார்கள்.

இவள் தூங்கி எழுந்த போது பக்கத்து இடம் வெறுமையாய் இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தாள் ஊர்மிளா. அதற்குள் அவள் அரவம் கேட்டு ஓடி வந்தான் விஷ்ணு!

“பாத்ரூம் போணும் விஷ்ணு!” என்றவளை மெல்லத் தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டான் இவன்.

அங்கே முடித்து விட்டு அவள் கதவைத் தட்ட, வந்து மீண்டும் தூக்கிக் கொண்டான்.

“சாப்பிடலாம் ஊர்மி” என்றபடி அவளை கிச்சனுக்குத் தூக்கிச் சென்றான்.

“வீல்சேர்னு ஒன்னு வாங்கிருக்கத்தானே! அதுல உக்கார வச்சா, நானே வர மாட்டேனா?” எனச் சலித்துக் கொண்டாள் இவள்.

“அது சும்மா வெளிய எங்கயாச்சும் போகனும்னா யூஸாகுமேன்னு வாங்கனேன்! வீட்டுக்குள்ள நான் இருக்கறப்ப வீல்சேர் எதுக்கு?” எனக் கேட்டவனை என்ன சொல்வது எனத் தெரியாமல் பார்த்திருந்தாள் இவள்.

உணவு ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டிருந்தது! அதை சூடு காட்டி எடுத்து வந்தான் விஷ்ணு. இருவரும் அமைதியாகவே உண்டார்கள். அதன் பிறகு,

“உனக்கு இன்னும் வீட்டச் சுத்திக் காட்டலல! கம்” எனக் கையை நீட்டியவனைப் பார்த்துக் கெஞ்சும் குரலில்,

“ப்ளீஸ் விஷ்ணு! வீல்சேர்ல உக்கார வையேன்! எனக்கு..ஹ்ம்ம்! உடனே உன்னை ரொம்ப டிப்பேன்ட் பண்றதுல ரொம்ப கஷ்டமா இருக்கு! எல்லாமே தனியா செஞ்சுப் பழகிட்டேனா, சட்டுன்னு இது போல ஏத்துக்க முடியல! ப்ளீஸ் கொஞ்சம் டைம் குடு விஷ்ணு!” என்றாள் ஊர்மிளா.

“இதுக்கு எதுக்கு இத்தனை ப்ளீஸ்! எனக்கு உன்னை உயிரோட பார்த்ததுல இருந்து கையும் ஓடல! காலும் ஓடல! அதான் கோழி தன் குஞ்சை அடை காக்கற மாதிரி, உன்னைப் போட்டு பாடாப்படுத்தறேன்! சாரி ஊர்மீ!” என்றவன் வீல்சேர் கொண்டு வந்து அவளை அமர வைத்தான்.

அவன் கையைப் பற்றிக் கொண்டவள்,

“நீ என்னைப் படுத்தி வைக்கல விஷ்ணு! ஒரு குழந்தைக்கு அம்மா ஸ்லீப்பர் போட்டுக்க சொல்லிக் குடுப்பாங்க! அதுக்கு எதை இடது கால்ல போடனும், எதை வலது கால்ல போடனும்னு சட்டுன்னு கத்துக்க முடியாது! மாத்தி மாத்திப் போட்டு, போக போக கத்துக்கும்! அது போலத்தான் நீ எனக்கு அன்பை அனுபவிக்கறது எப்படின்னு இப்போ கத்துக் குடுக்கற! அந்தக் குழந்தை போல இதை எப்படி அனுபவிக்கனும்னு தெரியாம தவிச்சு நிக்கறேன்! போகப் போக கத்துப்பேன்! என்னைத் தப்பா எடுத்துக்காதே விஷ்ணு” என்றாள்.

புரிந்தது என்பது போல தலையை ஆட்டியவன், அவள் கன்னம் வருடிப் புன்னகைத்தான். இவள் சொன்னதை விஷ்ணு பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டதில், முகம் மலர்ந்து போனாள் ஊர்மிளா.

பூஜை அறை, கெஸ்ட் ரூம், பின் பக்கப் படப்பை, அங்கு போடப்பட்டிருந்த அழகிய பூந்தோட்டம், முற்றத்தில் இருந்த தேக்கிலான ஊஞ்சல், மியூசிக் ரூம் என எல்லாவற்றையும் வீல்சேரை தள்ளியபடியே அவளுக்குக் காட்டினான் விஷ்ணு.

மீயூசிக் அறையில் வீணை, தபளா, மிருதங்கம், போன்றவைகளோடு அகொஸ்டிக் கிட்டார், இலெக்ட்ரிக் கிட்டார், பியானோ என நவீன இசைக்கருவிகளும் இருந்தன. அந்த அறையே கலைநயத்தோடு தெய்வீகமாகவும் காட்சியளித்தது.

“எல்லாம் வாசிக்கத் தெரியுமா விஷ்ணு?” என ஆச்சரியமாகக் கேட்டாள் இவள்.

“கிட்டார் அண்ட் பியானோ ரெண்டு மட்டும் கத்துக்கிட்டேன். மத்ததுலாம் நம்ம மூதாதையோரடது! உன் மாமீக்கு பழசெல்லாம் போட்டு வச்சிருந்தா புடிக்காது! பழையன கழிதலும், புதியன புகுதலும்தான் நம்மோட கல்ச்சர்னு நிப்பாங்க! உன் மாமனாருக்கு பழையதுலாம் தூக்கிப் போட மனசு வராது! முக்கியமா அவரோட குடும்பப் பாரம்பரியத்த எடுத்துக் காட்டும் பொருட்கள உயிரா மதிப்பாரு! எல்லாத்துலயும் ஒத்துப் போகிற ரெண்டுப் பேரும், இந்த விஷயத்துல முட்டிப்பாங்க! மியூசிக் ஆர்கியூமெண்ட்ல அப்பா வின் பண்ணதுனால இந்த மிருதங்கம், வீணைலாம் இன்னும் இங்க பாதுகாப்பா இருக்கு! தளவாடப் பொருட்கள் ஆர்கியூமெண்ட்ல அம்மா வின் பண்ணதுனால, கடமுடான்னு ஆடிட்டு இருந்த பர்னிச்சர்லாம் வெளிய போய்டுச்சு!” எனச் சொல்லி கிட்டாரை எடுத்து டியூன் செய்ய ஆரம்பித்தான் விஷ்ணு.

அவனையே ஆசையாய் பார்த்திருந்தாள் இவள்.

“நம்மூரு ரோமியோக்கள் இருக்காங்கல்ல, அவங்களுக்கு ரெடிமெட்டா ரெண்டு பாட்டு இருக்கும் கிட்டார்ல கெத்து காட்ட! என்னென்னு சொல்லுப் பார்க்கலாம்!” எனக் கேட்டான் விஷ்ணு.

“என் இனிய பொன்னிலாவே! இன்னொன்னு..ஹ்ம்ம்ம்! நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! சரியா?”

“கரேக்ட்! அது ரெண்ட விட எனக்குப் புடிச்ச கிட்டார் சாங் ஒன்னு இருக்கு! வாசிக்கவா?”

“யெஸ் ப்ளீஸ்” எனக் கைதட்டி ஆர்ப்பரித்தவளைப் புன்னகையுடன் பார்த்தான் இவன்.

“ஓன், டூ, த்ரீ!!” எனச் சொல்லி அவன் பாடியபடியே வாசிக்க, மெய் மறந்து கேட்டிருந்தாள் இவள்.

“துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசைக் கேட்டு

சந்த வரிகள போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று” என ஆரம்பித்து,

“நான் தேடிடும் ராசாத்தியே

நீ போவதா ஏமாத்தியே

வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்” என உணர்ச்சிகரமாய் தொடர, இவளால் புரிந்து கொள்ள முடிந்தது என்ன துடிதுடித்திருப்பான் இவள் காணாமல் போன போது என்று!

தொண்டை அடைத்துக் கொள்ள, அவனைப் பார்த்து,

“ஐ லவ் யூ விஷ்ணு!” எனக் கண்ணீர் வழியச் சொன்னாள் ஊர்மிளா!



(சேர்ந்தாடுவாள்!!!)

இனி தீபாவளி முடிஞ்சு சந்திக்கலாம் டியர்ஸ் :) லவ் யூ ஆல்!!!
 

Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 14
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
அப்பாடா..! இப்பவாவது வாயைத் திறந்து தன்னோட லவ்வைச் சொன்னாளே.

"ஐ லவ் யூ, லவ் யூ, லவ் யூ
என்று சொன்னாளே...
உள்ளத்தை அள்ளி, அள்ளித் தந்தாளே.."

😀😀😀
CRVS (or) CRVS 2797