Jagam Nee--EPI 18

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,800
93
அத்தியாயம் 18



சாம்பார்ல போடுவாங்க பருப்பு

உன்னால பத்திக்கிச்சே காதல் நெருப்பு!!!



“எங்க போறோம் மேடம் நாம?”

“ஊர விட்டு ஓடிப் போறோம்!”

“நம்மள பிடிக்கறதுக்கோ பிரிக்கறதுக்கோ யாரும் இல்லாதப்ப, ஏன் ஓடிப் போகனும்?”

“இதெல்லாம் வெளக்கெண்ண மாதிரி பேசு! கேஸ்ப்பர்ட்ட வயித்து வலின்னு நடிக்கறப்ப மட்டும் கோட்டை விட்டுடு”

கலகலவென சிரித்து விட்டான் சரவணன்.

“நான் சொன்னத அவர் நம்பவே இல்ல மேடம்! அதுக்குன்னு வயித்த பொளந்தா காட்ட முடியும்!”

“கஷ்டம்ரா ரேய்!!!! உன்னைலாம் வச்சிக்கிட்டு ஒரு கொலை என்ன கொளுக்கட்டைக் கூட பண்ண முடியாது! வேஸ்ட் ஃபெல்லோ!”

“இருந்துட்டுப் போறேன் மேடம்”

“ரோஷம் கீஷம் எதாச்சும் இருக்கா பாண்டியா உனக்கு?”

“உங்க கிட்ட மட்டும் வெக்கம், மானம், ரோஷம், எதுவும் எனக்கு இல்லை மேடம்!”

“ரைட்டு, விடு! இப்போ நம்ம பேக்க தூக்கிட்டுக் கிளம்பு” எனச் சொல்லி அவர்களின் அறையைப் பூட்டினாள் ஷாமினி.

வெளியே லாபிக்கு வந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தார் கேஸ்ப்பர்!

“எஞ்சாய் யுவர் ஹோலிடே டால்!” என்றவரை அணைத்து விடுவித்தாள் இவள்.

“மினிய பத்திரமா பார்த்துக்கோ! அதுக்குத்தான் உனக்கு லீவ்! வயித்து வலிக்கு இல்ல!” எனச் சொல்லி சரவணனைப் பார்த்து அவர் புன்னகைக்க, இவனுக்கும் புன்னகை முகிழ்த்தது!

வெளியே பைக் வைக்கும் இடமருகே வந்ததும்,

“அவர் உன்னைக் கலாய்க்கறார்டா! அதுக்கும் சிரிச்சுத் தொலைக்கற” எனத் தலையில் அடித்துக் கொண்டாள் ஷாமினி.

“ஒருத்தர் சிரிக்க நாம காரணமா இருக்கலாம் மேடம்! அழறதுக்கு மட்டும் காரணமா இருக்கக் கூடாது!”

“யப்பா சாமி! விட்டுருடா! காதுல ரத்தம் வருது” எனச் சொல்லி அவன் முதுகில் ஒன்றுப் போட்டவள், பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

இருவர் உடைகளும் இருந்த ஒற்றை லக்கேஜ் பேக்கை முன்னே வைத்துக் கொண்டவன்,

“பைக்க எந்த இடத்துக்குக் கிளப்பனும்?” எனக் கேட்டான்.

“ரயில் ஸ்டேஷன் விடு”

“ஓகே ரைட், ரைட்!”

ரயில் நிலையத்தில் பைக்கை பார்க் செய்து பூட்டியவர்கள், காத்திருந்து ரயில் ஏறினார்கள்.

ஏற்கனவே அவள் சொல்லியிருந்தபடி பாஸ்போர்ட்டை எடுத்து வந்திருந்தான் சரவணன். கேட்டாலும் எங்கே போகிறோம் எனச் சொல்ல மாட்டாள் எனப் புரிய, அமைதியாகவே அமர்ந்து கொண்டான் தனதிருக்கையில்.

நான்கு பேர் அமரும்படி இருந்தது அவ்விருக்கை. இரண்டு ஆட்கள் எதிரும் புதிருமாகப் பார்த்துக் கொள்வது போல போடப்பட்டிருந்தது மெத்தையிலான இருக்கை. இவர்கள் முன்னே, யாரும் அமராமல் போக, காலை நீட்டி நன்றாக அமர்ந்தார்கள் இருவரும்.

“பிஸ்னஸ் கிளாஸ்ல உன்னைக் கூட்டிட்டுப் போகிற அளவுக்கு நான் இன்னும் சேர்த்து வைக்கல! அடுத்த தடவை நல்லா கம்பர்டபிளா கூட்டிட்டுப் போறேன்! சரியா?” என இவள் கேட்க, தலையைச் சம்மதமாக ஆட்டினான் சரவணன்.

அவள் முகத்தையே அவன் விடாமல் பார்க்க, இவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“வாயைத் திறந்து கேட்டா பதில் வராதுன்னு மூஞ்ச மூஞ்ச பார்க்கறியா? கேடிடா நீ! இப்போ என்ன, எங்க போறோம்னு தெரியனும்! அதானடா?”

“அதேதான்”

“நாம ரெண்டு பேரும் இப்போ செக் ரிபப்ளிக்(Czech Republic) போறோம்! சில இடத்துல இறங்கி ட்ரேன் மாறி, நாம அந்த நாட்டுக்குப் போக கிட்டத்தட்ட 12 மணி நேரமாகும்! அவங்க தலைநகரான ப்ராக்(Prague) தான் நம்ம ட்ராவல் டெஸ்டினேஷன்!” என முகத்தில் மின்னல் மின்ன, மத்தாப்பு பூக்கச் சொன்னவளை புன்னகையுடன் பார்த்தான் இவன்.

“எனக்கு இந்த மாதிரி ஊரு சுத்தறதுனா ரொம்ப ஆசைடா பாண்டியா! சொந்த நாட்டுல அப்பாவோட எதிரிங்களுக்கு பயந்து ரொம்ப குறுகின நடமாட்டம்தான் எனக்கு! போலண்ட் வந்ததும் ஆசைத் தீர பல நாடுகள சுத்தனும்னு எவ்ளோ ஆசை வச்சிருந்தேன் தெரியுமா!! இந்த பத்து வருஷமா என்னைக் கட்டுப்படுத்திட்டு ஒரே இடத்துலயே இருந்துட்டேன்! இனி பட்ஜெட் சரி வரப்பலாம் நாம ரெண்டு பேரும் உலகம் சுற்றும் வாலிபனுக்கே டஃப் குடுக்கனும்!” என்றவளின் உற்சாகம் இவனையும் தொற்றிக் கொண்டது.

பேக் பேக்கில் வைத்திருந்த டைரியை வெளியே எடுத்தவள், அதில் எழுதி வைத்திருந்த விஷயங்களை இவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

எங்கே இறங்கி ட்ரேன் மாறுவது, ப்ராக்கில் தங்கப் போகும் டோர்ம் போல இருக்கும் ஹோட்டல், என்னென்ன இடங்களைச் சுற்றிப் பார்க்கப் போகிறார்கள், அங்கே புகழ் பெற்ற உணவு வகைகள் என ஆராய்ந்து அழகாய் கோர்த்து எழுதி இருந்தாள்.

“ப்பா!” என ஆச்சரியப்பட்டான் இவன்.

“உன்னையும் கூட்டிட்டுப் போறேன்ல, எந்த வித பிரச்சனையும் வராம பத்திரமா பார்த்துக்கனுமே! அதான் இவ்ளோ ப்ளானிங்!”

“இன்னும் என்னை நீங்கதான் பார்த்துக்கனுமா மேடம்? நான் உங்களப் பார்த்துக்கக் கூடாதா?”

அந்தக் கேள்வியில் அதிர்ந்து போனாள் ஷாமினி.

“அது.. வந்து!! என்னையும் என்னைச் சார்ந்தவங்களையும் நான்தானே எப்பவும் பார்த்துட்டு இருந்திருக்கேன்! இப்போ கூட உன்னை நான்தானே என் கூட தங்க வச்சிப் பார்த்துக்கறேன்!” எனச் சொல்லியவள், சற்று இடைவெளி விட்டு,

“ஏன் பாண்டியா!!! நீ பெரிய ஆம்பளையாகிட்ட, இனி நான் என்ன உன்னைப் பார்த்துக்கறதுன்னு நெனைக்கறியா? ஒரு பொண்ணு நம்மள பார்த்துக்கறதான்னு ஈகோ தடுக்குதா?” எனக் கேட்டவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஈகோவா? எனக்கா? அதுவும் உங்க கிட்டயா? நோ சான்ஸ் மேடம்! என்னை நீங்கப் பார்த்துக்கோங்க! உங்கள நான் பார்த்துக்கறேன்னுதான் சொல்ல வந்தேன்! இதுல ஈகோ எங்க வந்தது?” என இவன் முறுவலிக்கவும்தான் ஷாமினிக்கு நிம்மதியாக இருந்தது.

தானே எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும்! என்னைச் சார்ந்தவர்களை நானே பார்த்துக் கொள்ள வேண்டும்! நான் சொல்வதை கேட்டே அவர்கள் பின்பற்றி வர வேண்டும்! நான் சொல்வதே வேதமாய் இருக்க வேண்டும் எனும் மனப்பான்மையைக் கொண்டவள் ஷாமினி என முன்பே அறிந்திருந்தவன்தானே பாண்டியன்! மற்ற ஆண்களால் இது முடியுமோ என்னவோ, இவன் அவள் குணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டான்.

உட்கார்ந்து கொண்டே வருவது கஷ்டமாக இருந்தது இருவருக்கும். அவ்வப்பொழுது எழுந்து நின்று கை காலை ஆட்டி ரிலேக்ஸ் செய்து கொண்டார்கள். ட்ரேன் கஃபேயில் எதாவது வாங்கி உண்டார்கள். வெளியே தெரிந்த இயற்கை காட்சிகள், கட்டிடங்கள் என ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டி ரசித்தார்கள். போனில் படம் பார்த்தார்கள். இருட்டிக் கொண்டு வரவும் தூங்கிப் போனார்கள் இருவரும்.

மறுநாள் காலையில் ஒரு வழியாக ப்ராக் வந்தடைந்தார்கள் சரவணனும் ஷாமினியும். முதல் வேளையாக இவள் புக் செய்திருந்த டோர்முக்குப் போனார்கள். டோர்ம் என்பது ஹோட்டல் போலத்தான். ஆனால் ஒரு அறையில் ஐந்தாறு டபுள் டெக்கர் கட்டில்கள் போடப் பட்டிருக்கும்! பலர் அந்த அறையை ஷேர் செய்து படுத்துக் கொள்வார்கள். ஆண்கள், பெண்கள் எனக் கலந்து கூடத் தங்குவார்கள். பாத்ரூம் வசதி எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்.

இவர்களுக்கான டபுள் டெக்கர் கட்டிலுக்கு வந்தவர்கள், மேலே ஷாமினிக்கு கீழே இவனுக்கு என இடம் பிரித்துக் கொண்டார்கள்.

“டயர்ட்டா இருக்குமே! குளிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கறீங்களா மேடம்?”

அறையில் இன்னும் சிலர் தூங்கிக் கொண்டிருக்க, கிசுகிசுப்பாகக் கேட்டான் இவன்.

“தூங்கவாடா வந்தோம்! ஒவ்வொரு மணித்துளியும் எவ்ளோ ப்ரீஷீயஸ் தெரியுமா? குளிக்கறோம், கிளம்பறோம், ஊர் சுத்தப் போறோம்!” என்றவள்,

“உனக்குத் தூக்கம் வருதா பாண்டியா? அப்படினா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்! பிறகு வெளிய போகலாம்” என முடித்தாள்.

அவளைப் பார்த்து முறுவலித்தவன்,

“இல்ல! ஐ அம் குட்! நீங்க போய் முதல்ல குளிப்பீங்களாம்! நான் நம்ம பேக்கலாம் பார்த்துக்கறேன்! பிறகு நீங்க பார்த்துக்குங்க, நான் போய் குளிக்கறேன்” என்றான்.

குளித்து முடித்துக் கிளம்பி, இவர்களுக்கென கொடுக்கப் பட்டிருந்த லாக்கரில் பேக்கை வைத்துப் பூட்டி விட்டு வெளியேறினார்கள் இருவரும். காலை வேளை மிக ரம்மியமாக இருந்தது அவ்விடம்.

“ப்ரேக்பஸ்ட் போலாம் பாண்டியா! செம்ம பசி!”

இவள் விலை மலிவான இடம் எது எனக் குறித்து வைத்திருக்க, அதைத் தேடிப் போனார்கள் இருவரும். ஒரு சந்து மாதிரி இருந்த இடத்தில் நிழற் குடைகள் போட்டு மேசை நாற்காலிகள் போட்டு வைத்திருந்தார்கள். அங்கே அமர்ந்தவர்கள் மெனுவை எடுத்துப் புரட்டினார்கள்.

“பாண்டியா! பன்றி இறைச்சி சாப்பிடுவியா?”

“இல்ல! சாப்பிட்டதில்லை மேடம்”

“இங்க மாதிரி இடத்துலலாம் மோஸ்ட்லி பன்றியும் மாட்டிறைச்சியும்தான் இருக்கும்! கோழிலாம் ரொம்ப ரேர்! இப்போ என்ன பண்ணப் போற நீ?” எனக் கிண்டலாகக் கேட்டாள்.

“வெறும் ப்ரேட் சாப்பிட்டுக்கறேன் மேடம்”

“இப்படிலாம் இருந்தா உன்னை எப்படி நான் உலகம் சுத்த கூட்டிப் போறது? அந்தத இடத்துல அந்தந்த கல்ச்சருக்கு ஏற்ப அடாப்ட் ஆகிக்கனும் பாண்டியா” என்றவள் அவனுக்கு ஸ்கிராம்பல்ட் முட்டையும், அங்கே பிரபலமான ரை(rye) ரொட்டியும் வாங்கிக் கொடுத்தாள்.

இவளும் அதையே சாப்பிட்டாள். கேக், மஃபின் என அது வேறு உள்ளே வஞ்சகமில்லாமல் இறங்கியது. அதன் பிறகு ஆரம்பித்தது அவர்களின் சுற்றிப் பார்க்கும் படலம். நடராஜா சர்விஸ்தான் இருவருக்கும்! எல்லா இடங்களையும் நடந்தே வலம் வந்தார்கள்.

சார்ல்ஸ் ப்ரிட்ஜ் எனும் பாலத்தில் கால் வலிக்க நடந்தார்கள். பாலத்தின் நடுவே நின்று கீழே தெரியும் நதியை ரசித்துப் பார்த்தார்கள். நிறைய செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். பசிக்கும் போது ரோட்டோரக் கடைகளில் எதையாவது வாங்கி உண்டார்கள். தனியாகப் பார்க்க இந்திந்த இடத்திற்குப் போக வேண்டியது இல்லாமல் அந்நகரே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது. பழங்காலக் கட்டிடங்கள் வண்ணமயமாக காட்சியளிக்க, சாலைகள் கூட அழகாய் இருக்க, அதை ரசித்தப்படியே நடந்தார்கள். கவலைகள் ஏதுமின்றி ஒருத்தரை ஒருத்தர் கிண்டலடித்துக் கொண்டு, மகிழ்ச்சியாக சுற்றினார்கள்.

ஓல்ட் டவுன் ஸ்குவர் எனும் இடம் இருவருக்கும் அவ்வளவு பிடித்தது. பழைய காலத்து அரண்மனைகள், மணிக்கூண்டு, குதிரை வண்டி சவாரி, நகரத்துக்கு நடுவே இருந்க காலி இடம், அங்கே வைக்கப்பட்டிருந்த சிலை என ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தார்கள் இருவரும்.

“அப்பா! என்னமோ அந்த காலத்துக்கே போய்ட்ட மாதிரி இருக்குடா பாண்டியா”

“ஆமா, மேடம்! இந்த இடம் கொள்ளை அழகு!” என்றவன் அவளது கையை மென்மையாகப் பற்றிக் கொண்டான்.

மாலை மங்கிய நேரம், வானம் செஞ்சாந்தை பூசிக் கொள்ள ஆரம்பித்த அழகான பொழுது! இருவரும் கைக் கோர்த்து அப்படியே தரையில் அமர்ந்து சூரியன் விடைபெறும் அழகை ரசித்தார்கள்.

“போதும் எடுத்த ஜென்மமே

இனி வேண்டாம் அடுத்த ஜென்மமே!!!” என மெல்லியக் குரலில் ஷாமினி பாட, புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான் சரவணன்.

“பாண்டியா!!!”

“ஹ்ம்ம் மேடம்”

“நீ ஒரு பாட்டுப் பாடேன்”

குரலை செறுமி சரி செய்தவன்,

“ஜனனி ஜனனி

ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ

பரிபூரணி நீ” எனப் பாட, நன்றாகத் திரும்பி அமர்ந்து அவனை முறைத்தாள் இவள்.

“சரியான சாமியார்டா நீ! கோயிலுக்கா வந்திருக்கோம், சாமிப்பாட்டுப் படிக்க!!! போடா” எனச் சொன்னவள், அவன் தலையிலேயே நங்கெனக் கொட்டி விட்டு, எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

வெடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் பின்னாடி ஓடினான் இவன். அவன் ஓடி வருவதைப் பார்த்து இவளும் ஓட ஆரம்பிக்க, அங்கே ஒரு ரன்னிங் ரேஸ் நடந்தது. சிரித்தபடி இருவரும் துரத்தி விளையாட, எங்கிருந்தோ வந்த பைக் ஒன்று தட்டுத் தடுமாறி ஷாமினியை இடிக்க வந்தது. அவளைச் சட்டெனத் தள்ளி விட்ட சரவணனின் மேல் இடித்துக் கீழே விழுந்தது அந்த பைக்! பைக்காரன் வந்து மோதிய வேகத்தில் இவனும் கீழே விழுந்திருந்தான்.

“பாண்டியா!” எனக் கத்தியபடி அவனருகே வந்த ஷாமினி, அவன் காலில் குபுகுபுவென வழிந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனாள். கட்டிலில் ரத்தக் காயத்துடன் அவன் படுத்திருந்ததெல்லாம் நினைவு வர, உடல் நடுங்கியது இவளுக்கு. மடங்கி அமர்ந்து அவனை நெஞ்சோடு கட்டிக் கொண்டவள்,

“ரத்தம் பாண்டியா! ஐயோ! என்னால உனக்கு மறுபடியும் அடிப் பட்டிருச்சு! நான் உன் கூட இருந்தாலே உனக்கு ஆபத்துத்தான்! பாண்டியா! பாண்டியா!!” என அழ ஆரம்பித்தாள்.

தைரியமான பெண்ணவள் தனக்காகக் கண்ணீர் விடுவதைப் பார்த்து இவனால் தாங்கவே முடியவில்லை!

“ஒன்னும் இல்ல மேடம்! சும்மா, லேசான காயம்தான்! அழாதீங்க ப்ளிஸ்” எனச் சமாதானப்படுத்தினான்.

அடைத்து வைத்ததெல்லாம் வெளியே முட்டி மோதிக் கொண்டு வர, என்னென்னவோ பேசினாள் இவள். குனிந்து அவனது காயத்தை ஆராய்ந்தவளுக்கு இன்னும் கண்களில் கங்கை பொங்கியது!

“நான்..என்…என்னோட காதல் அப்போவும் உனக்கு ஆபத்தாத்தான் முடிஞ்சது! இப்பவும் அதே போலத்தான் நடக்குது! நீ ஏன்டா என் வாழ்க்கைல வந்த!!! ஏன் எனக்கு உன் மேல இந்தப் பைத்தியக்காரத்தனமான காதல் வரனும்? ஏன்? ஏன்? ஏன் பாண்டியா? நான் உன் மேல வச்ச காதல புரிஞ்சுக்கிட்டுத்தானே எங்கப்பா உன்னை கொல்லற அளவுக்குப் போனாரு!! என்னால செத்துருப்படா நீ!!! எத்தனையோ பேர் என்னைச் சுத்தி வர, எனக்கு ஏன்டா உன் மேல காதல் வந்து தொலைச்சது? ஏன்? பத்து வருஷமா ஒரு தவம் போல ஏன்டா உனக்காக நான் காத்திருக்கேன்? பைத்தியமாடா நானு? இந்தக் காதல எனக்குப் புடிக்கல பாண்டியா!! தினம் என்னை அழ வைக்குது! பக்கத்துலயே நீ இருந்தும், உன் கிட்ட என் காதல சொல்லாம மறைச்சி, யாரோ போல வாழறது என்னைக் கொன்னுத் தின்னுதுடா பாண்டியா!!! ரொம்ப கொடுமையா இருக்கு! எனக்கு இந்த காதல் வேணாம்” எனச் சொன்னவளின் உதடுகளை வன்மையாய் சிறை செய்திருந்தான் கிளியின் பாண்டியன்!!!
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 18
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Malaranandm

Member
May 31, 2026
50
50
18
Shamini expressed her love....😍😍😍lovely Prague...always ur description in city like tis ...feel like v r also there.....first time malaysia ponapa unga storiesla irukka orru ellam parthen...it's all bcoz u ....always addict for ur narration..
 
Last edited:
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
அப்பாடி..! ஒருவழியா பூனை வெளியே வந்திடுச்சு.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin