Jagam Nee--EPI 17

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
934
-1,801
93
அத்தியாயம் 17



சித்தப்பன் பொண்டாட்டி சின்னம்மா

நீயே என் காதல் கண்ணம்மா!!!



“பாண்டியா!!!”

“என்ன மேடம்?”

புதிதாக அன்று செக் இன் செய்ய வந்திருந்த ஒரு ஜோடிக்கு அறையைக் காட்டி, அவர்களது லக்கேஜை கொண்டு வைத்து விட்டு வந்தவனை அழைத்தாள் ஷாமினி.

“எவ்ளோ டிப்ஸ் கிடைச்சது?”

“20 ஸ்வோட்டே (இப்படித்தான் உச்சரிப்பார்கள்- zloty—போலந்து நாணயம்)”

“எங்க மலேசிய காசுக்கும் இங்க காசுக்கும் அவ்ளோ வித்தியாசம் இல்ல தெரியுமாடா! இங்க 1 ஸ்வோட்டேன்னா எங்கூருல 1.15 ரிங்கிட். ஆனா இங்க விலைவாசி எங்க ஊர விட அதிகம்டா”

அவளது குரலில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டுக் கொண்டவன்,

“உங்க நாட்ட மிஸ் பண்ணுறீங்களா மேடம்?” எனக் கேட்டான்.

“கொஞ்சமா!! வேற நாட்டுல பொன்னும் மணியும் கொட்டிக் குடுத்தாலும் கூட நம்ம பிறந்த நாட்ட மனசு தேடத்தான் செய்யும் பாண்டியா!!! எங்க ஊரு சாப்பாடு, அந்த மண்ணோட மணம், கலவையான மொழி எல்லாத்தையும் பல சமயம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்! வேணான்னு வந்தாச்சு, பிறகு என்ன இந்த ஏக்கம்னு அதை ஒதுக்கித் தள்ளவும் பழகிட்டேன்”

“அப்போ மலேசியாவ தவிர வேற நாட்டுல வாழுறதுல உங்களுக்கு கஷ்டம் ஒன்னும் இல்ல?”

“இல்லை! இந்த நாட்டுலயே நான் பத்து வருஷத்த ஓட்டிடலயா!”

“அப்போ இன்னொரு நாட்டுல மீதி வாழ்க்கைய ஓட்டிடச் சொன்னா உங்களுக்கு சம்மதம்?”

“இதென்ன கேள்வி!!! இந்த போலந்த எனக்கு என்ன பட்டா போட்டா குடுத்திருக்காங்க? வேற இடத்துல நல்ல வேலை, சம்பளம், தங்க நல்ல இடம்னு கிடைச்சா போயிட வேண்டித்தான்”

“ஓகே, ஓகே! போயிடலாம்”

“என்ன போயிடலாம்? அங்கயும் என்னை வால் பிடிச்சிட்டே வரப் போறியா? தொலைச்சிடுவேன்!!!”

அழகாய் முறுவலித்தான் இவன்.

“இப்படி சிரிச்சே ஆள கவுத்துடு”

இன்னும் முகம் மலர்ந்து போனது அவனுக்கு.

“ஓவரா இளிக்காதே! அப்புறம் பாண்டியா, உனக்கு வயித்த வலிதானே?”

“இல்லையே! நான் நல்லாத்தான் இருக்கேன் மேடம்”

“இல்ல பாண்டியா! உனக்கு வயித்த வலிதான்! எந்த வேலையும் பார்க்க முடியாத அளவுக்கு வயித்த வலி”

“ஓ, சரி! இந்த வயித்த வலி எப்போ வரணும் மேடம்?”

“அடுத்த வாரம் வரணும்”

“எத்தனை நாளைக்கு?”

“ஹ்ம்ம்! ஒரு அஞ்சு நாளைக்கு”

“சரி மேடம்! வந்துடும்! டோண்ட் வொரி!”

“உன்னோட பெர்பார்மென்ஸ பார்த்து, கேஸ்ப்பர் அஞ்சு நாள் என்ன, ஒரு வாரம் கூட லீவ் எடுத்துக்கோன்னு சொல்லனும்! புரியுதா?”

“யெஸ் மேடம்”

“சும்மா வாயடிக்காம போய் வேலையைப் பாரு, போ!!!” என விரட்டி விட்டவள், தனது வேலையைப் பார்க்கப் போனாள்.

ஷாமினியின் நாட்கள் மிக சந்தோஷமாக நகர்ந்தன. காலையில் எழுந்து, யார் முதலில் பாத்ரூம் போவது என ஆரம்பித்து, இரவு தூங்கும் போது யார் லைட்டை ஆஃப் செய்வது என்பது வரை சரவணனிடம் வம்பு வளர்ப்பாள். ஏதோ ஒரு முறை மட்டுமே விட்டுக் கொடுப்பாள்! அவள் விட்டுக் கொடுக்கவே தேவையில்லை என்பது போல, இவனே கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் எல்லாவற்றுக்கும் விட்டுக் கொடுத்து விடுவான்.

“பாண்டிய மன்னா!! இப்படி எல்லாத்துக்கும் விட்டுக் குடுத்தா, எப்படி நீ போர் புரிஞ்சு எதிரி நாட்டைக் கைப்பற்றுவ?”

“போர் புரிஞ்சுத்தான் எதிரி நாட்டைக் கைப்பற்றனும்னு இல்ல மேடம்! எதிரி மன்னனோட மகள கட்டிக்கறதுல கூட அவங்க நாட்டக் கைப்பற்றலாம்”

“அடேய்!!! நோகாம நோன்பு கும்புடப் பார்க்கறடா நீ!!! வெளங்கிடுவே” என்பவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு வரும்.

பத்து வருடங்களாய் மறந்து போயிருந்த மகிழ்ச்சி இந்தப் பத்து நாட்களாய் கைவசமானது போலிருந்தது இவளுக்கு! அடிக்கடி சிரித்தாள், அவனை சீண்டினாள். அடிக்கடி முறைத்தாள், அவனை முழி பிதுங்க வைத்தாள். அடிக்கடி சாப்பிட்டாள், அவனை சமைக்க வைத்தாள்! அடிக்கடி ஆத்திரப்பட்டாள், அவனை ஆட்டி வைத்தாள்.

காலையில் அவளுடனே எழுந்து வேலைப் பார்ப்பவனின் வேலை நேரம் மாலை நான்குக்கு முடிவுறும். அதன் பிறகு ஷாமினி பாருக்கு வேலைக்குக் கிளம்பும் போது, அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு போய் விடுவான். பாரினுள்ளேயே ஒரு மூலையில் அமர்ந்திருப்பவன், அவளது வேலை நேரம் முடிந்ததும் மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துப் போவான்.

“நீ என்ன எனக்கு பாடிகார்டா? இல்ல ட்ரைவரா? எதுக்கு இந்த வேலை?” எனச் சிடுசிடுப்பவளிடம்,

“இங்க எனக்கு வேற யார மேடம் தெரியும்!!! சும்மா வெளிய தெருவ போய் சுத்திப் பார்க்கனும்னா, அதுக்கு வேற செலவாகும்! அதான் உங்க கூடவே வரேன்” என்பான் இவன்.

“நான் வேலைப் பார்க்கற நேரத்துல, நீ ரூம்ல தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்ல”

“வேணா மேடம்! தூக்கம், ரெஸ்ட்டு, இதெல்லாம் ரொம்ப வருஷமாவே எனக்கு அந்நியமா போய்டுச்சு! இப்போ போய் தூங்கு, ஓய்வெடுன்னா என்னமோ மலையைப் புரட்டிப் போடறது போல ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்! ப்ளிஸ்! என்னை என் போக்குலயே விட்டுடுங்களேன்! வராதேடான்னு நீங்க சொல்லிட்டா என்னால மீறி வர முடியாது! ஆனா அப்படி சொல்லிடாதீங்க! ப்ளீஸ் மேடம்” எனக் கேட்பவனை இவளால் என்னதான் சொல்ல முடியும்.

“இம்சைடா நீ” என்பதோடு முடித்துக் கொள்வாள்.

பாரில்,

“யாருடி மினி இந்த புது டிக்கட்டு? ஆளு டக்கரா இருக்கான்” என ஜொள்ளு ஊற்றினாள் மரியா.

“டக்கரா இருந்தாலும் அவன் உனக்கு தம்பி முறை வரும்! சகோதரன சைட்டடிச்சா சாமி குத்தம் ஆகிடும். ஒழுங்கா ப்ரதர்னு கூப்ட்டு பழகு” என அவள் முதுகிலேயே ஒன்று வைத்தாள் ஷாமினி.

“ப்ரதர்??? அதெல்லாம் முடியாது! உன்னோட ப்ரண்டு மட்டும்தானே அவன்! பிறகென்ன! உன் ஆளுன்னா ஏதோ போனா போகுதுன்னு ப்ரதர்னு கூப்டுவேன்! ஆளு வேற பார்க்க ரொம்ப ஹேண்ட்சமா, இன்னசெண்டா இருக்கான்! இது எவ்ளோ பெரிய ரேர் காம்பினேஷன் தெரியுமா? எண்ணி ரெண்டே வாரத்துல அவனோட இன்னெசெண்ட அழிச்சி, இஸ்க்கு இஸ்க்குன்னு கேக்குதுன்னு சொல்ல வைக்கல, என் பேரு மரியா இல்ல” எனச் சபதமிட்டவளை முறைத்தாள் ஷாமினி.

“மரியான்ற பேர சொறியான்னு மாத்திக்க! இடியட்” எனச் சத்தமிட்ட ஷாமினி, இரண்டு நாட்கள் அவளுடன் பேசாமல் கடுப்பில் திரிந்தாள்.

தோழியை வம்பிழுப்பதற்காகவே, அக்கடாவென ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கும் சரவணனின் மேசைக்கு அடிக்கடி விசிட் அடிப்பாள் மரியா! அவனிடம் சிரித்துச் சிரித்து பேசி, கோக், பெப்ஸி என பானங்கள் கொடுத்து, கன்னத்தைத் தடவி விட்டு வருவாள்.

அன்றைய தினம் அறைக்கு வந்ததும், பயங்கரமாக திட்டு விழும் இவனுக்கு.

“மரியா என்னோட பிரண்ட்தான்! இல்லைன்னு சொல்லல! அதுக்குன்னு உன்னை இளிச்சு இளிச்சு பேச சொன்னாங்களா?”

“அவங்களா வந்து பேசறப்போ எப்படி மேடம் மூஞ்சுல அடிச்ச மாதிரி முகத்தத் திருப்பிக்கிறது?”

“அப்போ யாரு வந்து பேசனாலும் இப்படித்தான் துரை கெர்ட்டசி பார்த்து ஈன்னு இளிப்பாரோ? இளிக்கறது மட்டும்தானா இல்ல இச்சு இச்சும் இருக்கா?”

“சீச்சீ மேடம்! அதெல்லாம் தப்பு மேடம்”

அவனை முறைத்துப் பார்ப்பவள்,

“எதே!!! தப்பா? லூசாடா நீ! வயசு முப்பத்து ரெண்டாச்சு! பொண்ணுப் பார்த்து கட்டி வச்சிருந்தா இந்நேரம் ரெண்டு குழந்தைக்கு அப்பாவாகிருப்ப! இந்த கர்மம்தான் அந்த மரியாக்கு புடிக்குதாம்! ரொம்ப இன்னெசெண்டா இருக்கறதுதான் அவள ஈர்க்குதாம்” எனக் கடுப்பில் கத்துவாள் இவள்.

“என்ன மேடம் பண்ணறது!! ஒரு அக்காவுக்குத் தம்பியா போய்ட்டேன்! ஒரு தங்கச்சிக்கு அண்ணனா போய்ட்டேன்! தப்புத் தண்டாலாம் பண்ணறதுக்கு மனசு ஒத்துக்க மாட்டிக்குது! எனக்கே எனக்குன்னு ஒருத்தி வந்தா, அதுக்கப்புறம் இந்த இச்சு, இஸ்க்கு எல்லாத்தையும் பார்த்துக்கலாம்! இப்போ தூக்கமா வருது! குட் நைட் மேடம்” எனப் போர்த்திக் கொண்டு படுப்பவனை என்னதான் செய்வது.

இவளுக்குப் புன்னகைதான் வரும். எந்த மேனகை வந்தாலும் இந்த விசுவாமித்ரனை ஒன்றும் செய்ய முடியாது எனப் புரிந்து போக, மரியா என்ன வம்பிழுத்தாலும், அதன் பிறகு சிரிப்புடனே கடந்து விடுவாள் ஷாமினி.

அன்றைய இரவு பாரில் ப்ரேக் டைம் கிடைக்க, எப்பொழுதும் போல கிச்சனுக்கு பின்னால் இருந்த ரோட்டோரத்தில் போய் நின்றாள் ஷாமினி. அவள் வந்த இரண்டு நிமிடங்களுக்குள் சரவணனும் வந்து விட்டான். இவள் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து இழுக்க, அவளையே பார்த்தபடி அருகில் நின்றிருந்தான் அவன்.

“என்ன பாண்டியா? பார்வைலாம் பலமா இருக்கு?”

“ஒன்னும் இல்ல மேடம்” என்றவனின் பார்வை அந்த சிகரெட்டிலேயே இருந்தது.

“வேணுமா?”

இல்லையென மெல்லத் தலையாட்டினான்.

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு? ஏன் சிகரெட்டையே முறைச்சுப் பார்க்கற?”

அமைதியாகவே நின்றான் இவன்.

“இப்படித்தான் செய்யற! ஒவ்வொரு தடவை ஸ்மோக் பண்றப்பவும் கண்ணாலயே வேணாம்னு கெஞ்சற மாதிரி பார்க்கற! என்னை கண்ட்ரோல் பண்ணாத பாண்டியா! விட்டுடு” எனக் கத்தியவள், பாதி கூட பிடிக்காத சிகரெட்டை கீழே போட்டுக் காலால் மிதித்துவிட்டு கிச்சனுக்குள் நுழைய முற்பட்டாள்.

“சாரி மேடம்! இனி அப்படி பார்க்க மாட்டேன்” எனும் அவனது குரல், தடுத்து நிறுத்தியது இவளை.

மீண்டும் வந்து சுவரில் ஒரு காலை மட்டும் முட்டுக் கொடுத்து நின்றவள், தங்களை சூழ்ந்திருக்கும் அந்தகாரத்தை வெறித்தாள். இவனும் அவள் அருகில் வந்து நின்று வானத்தை வெறித்தான்.

“தப்புன்னு தெரியுது! உடம்புக்கு நல்லதில்லன்னு புரியுது! ஆனா புகைக்கறப்போ ஸ்ட்ரேஸ், டென்ஷன் எல்லாம் எங்கயோ ஓடிடற மாதிரி இருக்கு பாண்டியா! காலேஜ் டைம்ல வேப் ஸ்மோக் பண்ணேன்! அது ஒரு ஃபன்காக பண்ணது மட்டும்தான். அது இல்லாம கூட இருக்க முடிஞ்சது! ஆனா இப்போ இந்த சிகரேட் இல்லாம இருக்க முடியல! உள்ளுக்குள்ள நெறைய விஷயங்கள போட்டு மறுகிட்டு இருக்கேன்! மைண்ட் அடிக்கடி அதையே நெனைச்சு நெனைச்சு என்னை டார்ச்சர் பண்ணுது! முடியல பாண்டியா என்னால! ஸ்மோக் பண்ணற கொஞ்ச நேரம் இதிலிருந்து எல்லாம் எனக்கு ரிலீவா இருக்கு! ஐ ஃபீல் கால்ம்!”

மெல்ல அவளது கரத்தைப் பற்றி தன் கரத்தினுள் இறுக்கிக் கொண்டவன்,

“என்ன விஷயம் போட்டு வாட்டுது கிளிய?” எனக் கேட்டான்.

“நெறைய!!! ஒன்னா ரெண்டா”

“ஒன்னொன்னா சொல்லுங்க மேடம்! வெளிய சொல்லுறப்ப மனசுல உள்ள பாரம் குறையும்!”

“நீ இன்னும் இதெல்லாம் நம்பறியா?”

“சொல்லித்தான் பாருங்களேன்” என முறுவலித்தான் இவன்.

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது.

“அடிக்கடி அப்பாவ நெனைச்சிப்பேன் பாண்டியா! அம்மா சாவுக்கு காரணமானவங்கள போலிஸ் புடிச்சிட்டாங்க! ஆனா அப்பா!!! அவர கொன்னவனுக்குத் தண்டனை இல்லாம வெளிய நிம்மதியா சுத்திட்டு இருக்கானே!! அவனுக்கு பயந்து நாங்க இப்படி ஓடி வந்திருக்கோமே! ஒரு மகளா என் அப்பா சாவுக்கு நான் நியாயம் பண்ணலன்னு வருத்தமா இருக்கு! கார், பங்களா, கடைன்னு அவ்ளோ வசதியா இருந்த நாங்க, பிச்சைக்காரங்க மாதிரி ஓடி வந்தத நினைச்சா இன்னும் கூட தாங்கவே முடியல பாண்டியா! கூட இருந்தவங்களே பணம்னு வந்துட்டா எவ்ளோ மாறிப் போய்டறாங்க! அந்த வீடு, எங்கம்மா வாழ்ந்த வீடு! என் தம்பிக்கு உரிமையா இருந்திருக்கக் கூடிய வீடு! அதை கூட கால்வாசி விலைக்கு வித்திட்டு வந்தது என்னை உறுத்திட்டே இருக்கு! அவனுக்குன்னு நான் ஒன்னுமே செய்யல பாண்டியா!! இப்படி இருந்திருக்கலாம், இதை செஞ்சிருக்கலாம், அதை பண்ணிருக்கலாம்னு செத்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கற மாதிரி ஒவ்வொரு நைட்டும் இந்த மூளையும் மனசும் என்னைத் தூங்க விடாம பண்ணறாங்க!” எனக் குரல் கரகரக்க சொன்னவளை ஆழ்ந்து பார்த்தான் இவன்.

“கர்மான்னு ஒன்னு இருக்குன்றத நீங்க நம்பறீங்களா மேடம்?”

இவள் அமைதியாக அவன் முகம் பார்க்க,

“எத்தனை குழந்தைகளுக்கு அப்பா, அம்மா இல்லாம பண்ணிருப்பாரு உங்கப்பா! அதுதான் கர்மாவா சுத்தி வந்து அவரோட பிள்ளைகளுக்கு அடிச்சிருக்கு! எத்தனை பேரோட வாழ்வாதாரத்த அழிச்சு, அதுல குளிர் காஞ்சிருப்பாரு உங்கப்பா! அதுதான் திரும்பி வந்து பிச்சைங்காரங்களா நிக்கற அளவுக்கு உங்கள தாக்கிருக்கு! அப்பா வச்சிட்டுப் போன சொத்த அனுபவிக்கற புள்ளைங்க, அவர் வச்சிட்டுப் போன பாவத்த அனுபவிக்க மட்டும் ஏன் தயக்கம் காட்டுறாங்க? எவ்ளோதான் அழுது புரண்டாலும், கர்மா இஸ் எ பிட்ச்(bitch)! அத அனுபவிச்சுத்தான் ஆகனும்! உங்கப்பா சாவுக்கு நியாயம் கிடைக்கலன்னு துடிக்கறீங்களே, அவர் என்ன பரமாத்மாவா? எத்தனையோ பேரோட உசுரயும், கை காலையும் எடுத்த பரதேசித்தானே! நீங்க அழற மாதிரி, எத்தனை குழந்தைங்க அவங்க அப்பா சாவுக்கு நியாயம் கிடைக்கலன்னு அழுதுருக்கும்??? யோசிங்க மேடம்!!!” எனச் சொல்லி நிறுத்தியவனை அதிர்ந்து போய் பார்த்தாள் இவள்.

முகத்தில் எந்த வித கடுமையையும் காட்டாமல், குரலில் மட்டுமே கோபத்தைத் தாங்கி தர்க்கம் செய்தவனை தவிப்பாகப் பார்த்தாள் ஷாமினி.

“சொத்த குடுத்தா, இப்போ நீங்க இழந்து நிக்கற மாதிரி ஒரு நாள் இழந்து போய்ட வாய்ப்பிருக்கு! ஆனா நீங்க அழியாத செல்வமான கல்வி செல்வத்த நிதினுக்குக் குடுத்திருக்கீங்க மேடம்! அது எவ்ளோ பெரிய சொத்து தெரியுமா??? நீங்க ஓடா தேஞ்சு அவனை ஒரு நல்ல நிலைல நிறுத்தி வச்சிருக்கீங்க! இதுக்கு நீங்க சந்தோஷப் படனுமே தவிர, இன்னும் இத செஞ்சிருக்கலாம் அத செஞ்சிருக்கலாம்னு துவண்டுப் போகக் கூடாது! நடந்ததெல்லாம், நடப்பதெல்லாம், இனி நடக்கப் போகிறதெல்லாம் நன்மைக்கேன்னு நெனைச்சு உங்களுக்கு நீங்களே நிம்மதிய குடுத்துக்கோங்க மேடம்! யூ டிசர்வ்ட் இட்!”

நன்றாய் திரும்பி நின்று அவனை ஆழ்ந்துப் பார்த்தாள் ஷாமினி. மெலிதாக முறுவலித்தான் சரவணன்.

“சைக்கிள் கேப்ல எங்கப்பாவ பரதேசின்னு சொல்லிட்டல்ல!”

“சேச்சே!! அப்படிலாம் நான் எதுவும் சொல்லல மேடம்” என இவன் புன்னகையுடன் மறுக்க,

“சொன்ன! அதை என் காதால நான் கேட்டேன்!” என்றாள் இவள்.

“அது ஒரு ஃப்ளோல அப்படி இப்படி வந்திருக்கலாம்”

“ஒரு ஃப்ளோல இப்ப வருது பாரு செருப்பு” என இவள் நெருங்க, எடுத்தான் அவன் ஓட்டம்.

“டேய் நில்லு! பாண்டியா! டேய் பாண்டியா!!! ஒழுங்கா நின்னன்னா ஒரு அடியோட போகும்! நான் புடிச்சேன்! டங்குவாரு பிஞ்சிடும்” என அவன் பின்னால் சிரித்தபடியே ஓடினாள் ஷாமினி.

“நான் இங்க துக்கப்பட்டு வேதனைப்பட்டு மறுகறதனால மட்டும் நடந்தத இல்லைன்னு மாத்திட முடியாது! கத்தி எடுத்தவனுக்குக் கத்திலதான் சாவுங்கற மாதிரி அப்பாவுக்கு நடந்திடுச்சு! அதே போல, அவர கொன்னவனுக்கும் கண்டிப்பா ஒரு சம்பவம் நடக்கும்! இதையே நான் நினைச்சி இனி வாழப் போகிற நாட்கள நரகமாக்கிக்கக் கூடாது! ஐ டிசர்வ் பீஸ்(peace)” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், அன்றிரவு நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நிம்மதியாய் தூங்கிப் போனாள்.
 

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 17
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

CRVS2797

Active member
Aug 4, 2024
134
-29
43
பாண்டியனோட.. கர்மா இஸ் எ பிட்ச்
அட்வைஸ் சூப்பர்.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin